SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி டெல்டாவில் போராட்டம் தொடக்கம்: திட்டத்தை கைவிடும் வரை தொடரும் என விவசாயிகள் எச்சரிக்கை

2019-05-16@ 00:06:06

மன்னார்குடி, மே 16: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக  டெல்டாவில் விவசாய தொழிலாளர்கள், பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி வைத்து போராட்டத்தை தொடங்கினர். விவசாயத்தை அழிக்கும் எண்ணத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, 274 இடங்களில் 3,500 அடி முதல் 6 ஆயிரம் அடி வரை கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் பரப்பில் கிணறுகள் தோண்டப்பட உள்ளது.

தமிழகத்தில் வேதாந்தா நிறுவனத்தில் முதல் வட்டாரத்திற்கு மரக்காணம் முதல் கடலூர் வரையிலான 1794 சதுர கிமீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பரிசோதனை செய்ய உள்ளது. தற்போது, கடந்த 12ம் தேதி (ஞாயிறு) 2வது வட்டாரத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த 2வது வட்டாரம் என்பது நாகை மாவட்டத்தின் ஆழ் கடல் இல்லாத கரையோர கடல் பகுதியாகும். இந்த பகுதியில் 158 கிணறுகள் அமைக்கப்படும்.
இந்த திட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து குடிநீருக்கே பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள 274 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கத்தினரும் போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர். 8 வழிச்சாலை திட்டத்தை போன்று எங்கள் உயிரைக் கொடுத்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வைப்போம் என்று சபதம் எடுத்துள்ளனர். இந்நிலையில், தஞ்சையில் தமிழ்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் தலைமையில் நடந்த காவிரி படுகை மண்டல கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பது, மயிலாடுதுறையில் மாநாடு நடத்துவது என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ள இடங்களின் பட்டியலில் உள்ள முதலாவது இடம் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் திருக்களார் ஊராட்சியாகும்.


இங்கு நேற்று முன்தினம் மாவட்ட அளவிலான அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் அடுத்த மாதம் (ஜூன்) கடைசி வாரத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி திருவாருர் மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது. முதல்கட்டமாக கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளிலும் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. இதில் திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் இடம் பெற்றுள்ளனர். நேற்று காலை போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் ஏராளமானோர் திருக்களாறில் ஒன்று திரண்டனர். இதில் பெண்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிராக பாடல் வடிவில் முழக்கங்கள் எழுப்பி கும்மியடித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.  இதேபோல், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நான்காம்சேத்தி கிராமத்தில் விவசாயிகள் தங்களின் வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட அளவில் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வை. சிவபுண்ணியம் கூறுகையில், ‘‘திருக்களாரில் இன்று (நேற்று) போராட்டம் தொடங்கி விட்டது. நெடுவாசல் போல வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது. இனி நாகை மாவட்டத்திற்கும் போராட்டம் எடுத்துச் செல்லப்படும். காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட வேண்டும். இங்கிருந்து ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் வெளியேற வேண்டும். உயிரை கொடுத்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டங்களை வெளியேற்றுவோம். இதனை மத்திய, மாநில அரசுகள் உணரவில்லை எனில் விளைவுகள் கடுமையாக இருக்கும்’’ என்றார்.


மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறுகையில், ‘‘மத்திய, மாநில அரசுகள் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருகிறது. இதற்கு எதிராக ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டா மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக வரும் 19ம் தேதி மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக எந்தவகையான போராட்டம் தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்யப்படும்’’ என்று கூறினார்.


‘குழாய் பதிப்பதை நிறுத்துங்கள்’

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே காளகஸ்தினாதபுரம் கிராமத்தில் கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘குறுவை சாகுபடிக்காக நிலத்தடி நீரைக் கொண்டு நிலங்களை உழுதும் நாத்து நட்டும் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய்கள் பதித்து வருவதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் திருக்களார் முதலிடம்

தமிழகத்தில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த 274 இடங்கள் கொண்ட பட்டியலில் முதலிடத்தில் இருப்பது திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள திருக்களார் ஆகும். பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாலோ என்னவோ, போராட்டத்தையும் முதல் முதலாக திருக்களார் மக்கள் தொடங்கி விட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்