SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக காய் நகர்த்தும் சூரமானவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-04-25@ 01:04:51

‘‘என்ன அரசியலில் வெற்றி பெற வானமே எல்லைபோல...’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.
‘‘சுதந்திர இந்தியாவில் அரசியல்வாதிகள் மக்களை நம்பினார்கள்... அதன் பிறகு கள்ள ஓட்டை நம்பினார்கள்.. அப்புறம் கரன்சியை நம்பினார்கள்... அந்த வரிசையில் இப்போது கோயில்... அதாவது தேனிகாரரின் தேர்தலுக்கு மட்டும் 300 சி செலவிட்டுள்ளதாக தகவல் ஓடுது... ஆனால், வாக்குப்பதிவிற்கு பிறகு அவர்கள் தரப்பு நடத்திய ரகசிய விசாரணையில் வரும் தகவல்கள் நெகட்டிவ்வாகவே இருக்காம். இதனால் டோட்டல் பேமலி அப்செட். பலரிடமும் ‘எங்களுக்குத்தானே ஓட்டு போட்டீங்க?’ என்ற மறு விசாரணை நடத்தப்பட்டதிலும் திருப்தி இல்லையாம். இதனால், இவர்களது குடும்ப கோயிலான பெரியகுளத்தில் இருக்கிற கைலாசநாதர் மலைக்கோயிலில் நள்ளிரவு சிறப்பு யாக பூஜை நடத்தி முடித்திருக்கிறார்களாம். முதலில் வாக்காளர்களை நம்பியவர்கள், தற்போது இந்த பூஜையின் பலனிலாவது ஏதாவது வகையில் வெற்றி கிடைத்து விடாதா என்ற எதிர்பார்ப்போடு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டிய காக்கி அதிகாரி ஒருத்தரே... பட்டுவாடாவில் விஷயத்தில் பஞ்சாயத்து பேசி பணம் சுருட்ட முயன்ற சம்பவம் குறித்து கேள்விப்பட்டீங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘திருவண்ணாமலை எம்பி தொகுதிக்கான வாக்குப்பதிவு முடிந்து ஒரு வாரம் ஆகப்போகுது... வாக்குப்பதிவு நடப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக ஆளுங்கட்சியை சேர்ந்தவரின் பணத்தை 2 போலீஸ்காரர் அவர்களின் 2 நண்பர்கள் ஆட்டையைப் போட்டனர். இதையறிந்த அதிமுக பிரமுகர் அவரது ஆதரவாளர்களுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் பணத்தை பங்கு போட்ட போலீசார் உட்பட 4 பேரை அடித்து உதைத்து பணத்தையும் வாங்கியுள்ளனர். பின்னர் வாக்காளர்களுக்கு எடுத்துச்சென்ற பணம் என்பதால், போலீசார் தேர்தல் அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் அதிமுக பிரமுகர் முன்கூட்டியே, தான் வீடு கட்டுவதற்கு எடுத்துச் சென்ற பணத்தை கொள்ளையடித்து விட்டதாக நாடகமாடி போலீசில் புகார் செய்துள்ளார்.

இது போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இச்சம்பவத்தை சமரசமாக பேசி முடித்துக் கொள்ளலாம் என இரண்டு க்ரைம் போலீசாரையும் காப்பாற்ற ஒரு கணிசமான பேரத்துடன், அதிமுக பிரமுகரை காப்பாற்ற தனியாக ஒரு பேரமும் பேசிக்கொண்டு தமிழ் கடவுள் கையில் வேலுடன் தங்கத்தின் பேரை கொண்ட காவல் அதிகாரி பஞ்சாயத்தில் இறங்கினாராம்... இதற்காக அதிமுக பிரமுகரிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 கிரைம் போலீசார் மற்றும் அவருடன் இருந்த 2 பேர் உட்பட ஐந்து பேரையும் வரவழைத்து இரவு நேரத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த செய்தி கசியவே எதிலும் தப்பிக்க முடியாத போலீஸ் அதிகாரி சிம்பிளான செக்‌ஷனில் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்து இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதிகார மோதல் காரணமாக அரசுக்கு பொருளாதார இழப்பும்... மாணவர்களுக்கு கால விரயமும் ஏற்படுவதை யார் தடுப்பது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இன்ஜினியரிங் கவுன்சலிங் வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திட்டு வந்தது... ஆனால் துணைவேந்தர்-ஆளுங்கட்சி மோதலால் சூரமானவரை பல் பிடிங்கிய பாம்பாக மாத்திட்டாங்க... இதனால நாங்க கவுன்சலிங் நடத்த மாட்டோம்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டாரு... அதனால புது சாப்ட்வேர் ரெடி பண்றதா சொல்றாங்க... ஏற்கனவே இருக்கிற சாப்ட்வேரை புதுசா காட்டி பல கோடி பில் சுருட்டும் பணி தான் இது என்று இலை கட்சி அமைச்சரை சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்... காரணம் அந்த சாப்ட்வேர் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் இதுக்கு இவ்வளவுதான் ஆகும்... அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று சொன்னாங்களாம்...’’ என்றார்.

‘‘அதுக்கு சூரமானவர் கொடுத்த பதிலடியால் அரசியல்வாதிகளுக்கு பதில் மாணவர்கள் பாதிப்பதுதான் கொடுமை...’’ என்று வேதனைப்பட்டார் பீட்டர் மாமா.
‘‘ஒன்றும் இல்லை... தன்னால் சம்பாதிக்க முடியவில்லை... இவர் மத்திய அரசின் உளவுத்துறை என்றெல்லாம் நினைத்தும் அவர் பல் பிடிங்கி டம்மியாக்க வேண்டும் என்றும் இலை அமைச்சர் நினைத்தார்... அதன் பிறகுதான் இந்த டம்மி நடவடிக்கை எல்லாம்... இதனால கொதிச்சுபோன சுரமானவர் என் இடத்தில் நான் தான் ராஜா என்பதை காட்ட விரும்பினார்... அதனால கல்வி கட்டணத்தை உயர்த்த உள்ளோம்... என்று அரசியல்வாதிகளின் தலையில் குட்டுவதற்கு பதிலாக மாணவர்களின் தலையில் பொருளாதார சுமையை தூக்கி வைத்துள்ளார்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மீது ரகசியமாக நிறைய தேர்தல் வழக்குகள் பதிவாகி வருதாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன், 18 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் இலை காற்றில் அடித்து போய்விட்டதாம்.. இதனால், எதிர்க்கட்சிகள் பணப்பட்டுவாடா செய்ததாக இலை தரப்பே ஆட்களை வைத்து பறக்கும் படை அதிகாரிகள் மூலம் ஆவணங்களை தயாரித்து காவல் நிலையங்களில் கொடுத்து வைத்திருக்கிறார்களாம்... வெற்றி பெற்றதாக தகவல் வந்தால் அந்த ஆவணங்கள் குப்பைக்கு போகுமாம்... ஆனால் எதிர்மறையான முடிவுகள் வந்தால் அந்த ஆவணங்களை வைத்து வழக்கு பதிவு செய்வது..

அதை வைத்து கோர்ட்டில் வழக்கு தொடுப்பது... எதிர்கட்சியில் ஜெயிக்கும் வேட்பாளர்களுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுப்பது என்பதே இலை கட்சியின் அடுத்த திட்டமாம்..  அதன்படி, எதிர்கட்சிகளில் இருந்து பணம் வினியோகம் செய்யப்பட்டதாக போலீஸ் நிலையங்களில் பறக்கும்படைகள் கொடுத்த புகாரின்பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறதாம். ஆமாம், பணம் கொடுத்தார்கள் என்பதற்கான சாட்சிகளை தயார்படுத்த சரியான ஆட்களை தேர்வு செய்து வர்றாங்களாம்... வழக்கு, போலீஸ் நிலையம் வந்தால் இதை வைத்தே ஜெயித்தவர்களை தகுதி நீக்கம் செய்வதே இதன் நோக்கம் என்கிறார்கள் ஆளுங்கட்சி அடிப்பொடிகள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அப்டி நடக்குமா..’’ ‘‘அதற்குள் அடுத்த தேர்தல் வந்துடும்... அதை விடு நாம மற்ற விஷயங்களை பார்க்கலாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்