SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தபால் ஓட்டில் கடைசி நேர வேட்டைக்கு தயாராகியிருக்கும் ஆளும்கட்சி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-04-23@ 04:20:45

‘‘ஆளும்கட்சி ஏதேதோ அதிரடி வேலைகளில் இறங்கியிருப்பதாக தகவல் வருகிறதே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், குறிப்பாக காவல்துறையினரை ரகசிய முறையில் அணுகி, ஆளும் கட்சியினர் தபால் ஓட்டுகளை விலை கொடுத்து வாங்கி வருகின்றனராம். பொதுவாக ஓட்டு எண்ணிக்கைக்கு  முதல்நாள் வரையிலும் தபால் ஓட்டுகளை போடலாம் என்பதால், சம்பந்தப்பட்ட அரசு அலுவலகப் பிரிவில், காவல்துறையில் இருப்போரின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதில் விண்ணப்பம் பெற்று, தபால் ஓட்டு போடாமல் காத்திருப்போரை அணுகி ஒரு குறிப்பிட்ட ‘பெரும் தொகை’ தந்து, கடைசி நேர வேட்டையாக, தங்களுக்கே ஓட்டுப்போடும்படி ஆளும் கட்சியினர் ‘ரகசிய உலா’ நடத்தி  வருவதாக புகார் எழுந்துள்ளது. தோல்வி பயத்தால், ஆளும்கட்சியின் மேல்மட்டத்திலிருந்து அதிரடி உத்தரவு வந்து, இப்போதைக்கு தபால் ஓட்டுகளை இவர்கள் குறிவைத்து திரட்டி வருகின்றனராம். ஏற்கனவே வாக்குச்சாவடிக்கு  வந்து ஓட்டுப்போட்டவர்கள், வாங்கிய காசுக்கு முறையாக ஓட்டளிக்காமல் போய் விட்டதால், ஓட்டுப்போட இருக்கிறவர்களையாவது வளைத்துப் போட்டு ஒரு வளர்ச்சியைப் பார்க்கலாம் என்று ஆளும் கட்சி அரசியல்வாதிகள்  களமிறங்கி காரியமாற்றி வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கல்வித்துறை சேதி ஏதுமிருக்கா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்ட கல்வி அதிகாரியாக பொறுப்பேற்ற சி.இ.ஓ ரொம்ப ஸ்ட்ரிக்ட் என கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறித்த நேரத்தில் பணிக்கு வராமல் இருப்பது, அடிக்கடி விடுமுறை எடுப்பது,  மந்தகதியில் பணியாற்றுவது, தேவையில்லாமல் அங்குமிங்கும் சுற்றி, நேரத்தை வீணாக்குவது., வேலை செய்யாமல் ஓ.பி அடிப்பது... என ஒவ்வொரு ஊழியர்களின் செயல்பாட்டையும் கண்காணித்து, சாட்டையை கையில்  எடுக்கிறார். இதனால், கோவை மாவட்ட சி.இ.ஓ அலுவலக ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த ஆளுக்கிட்ட வேலைசெய்ய முடியாதுப்பா... என பலர், தங்களது பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இடமாறுதல்  வாங்கிச்சென்றுவிட்டனர். மீதமுள்ளவர்களும் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், இந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால், தப்பி ஓட முயன்று, ஏமாற்றம் அடைந்த  ஊழியர்கள் பலர், புலம்பி தள்ளுகின்றனர். இத்தனை நாள், பணி செய்யாமல், ஓ.பி. அடித்துக்கொண்டு, வசூல் செய்வதில் மட்டும் குறியாக இருந்துள்ளனர். இப்போது, வேலையப்பாரு... என்றால், ஓட்டம் பிடிக்கிறார்கள்.  அரசாங்கத்துல வாங்குகிற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலைசெய்ய வேண்டாமா...? அரசு வேலை கிடைக்காமல் எவ்வளவு பேர் வெளியே நிற்கிறார்கள் என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டாமா.. என சிஇஓ பொறிந்து  தள்ளுகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உயர்அதிகாரிக்கு கப்பம் கட்டினால் மட்டுமே செங்கத்தில் பணி நடக்கிறதாமே..’’‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், வேட்டவலம், கண்ணமங்கலம், வெம்பாக்கம் உட்பட 10 பேரூராட்சிகள் உள்ளன. குறிப்பாக செங்கம் பேரூராட்சி அதிக வருவாய்  உடைய பேரூராட்சியாகும். இதனால் இங்கு வருவதற்கு ஒரு போட்டியே இருக்குமாம். அதற்கு பேரூராட்சிகளுக்கு பொறுப்பான உயர்அதிகாரிக்கு கப்பம் கட்ட வேண்டுமாம். அதுவும் வாரா, வாரம் கப்பம் கட்ட வேண்டுமாம்.  அவ்வாறு கட்டாவிட்டால் மாதம் ஒரு செயல் அலுவலரை மாற்றுவாராம். இங்கு வாகன ஓட்டுனர் காலி பணியிடத்துக்கு நியமனம் செய்வதற்காக உயரதிகாரிக்கு மட்டும் ₹3 லட்சம் கை மாறியதாம். இந்த தகவல் மாவட்ட  நிர்வாகத்துக்கும், மாவட்ட அமைச்சருக்கும் கூட தெரியாதாம். உள்ளூர் அதிமுக புள்ளிகள் கண்ணில் மண்ணை தூவியது மட்டுமின்றி தொகுதி எம்எல்ஏவுக்கும் தெரியாதாம். ஒட்டுமொத்தமாக அந்த பணத்தை அவரே ‘லபக்’கி  கொண்டாராம். செங்கம் பேரூராட்சியில் எந்தெந்த வகையில் உபரி வருமானத்தை பார்க்கலாம் என்று விரல்நுனியில் விஷயத்தை வைத்துக் கொண்டு அங்குள்ள அதிகாரியுடன் கைகோர்த்து செயல்படுவது எங்களை அவமதிப்பது  போல உள்ளதாக பிற பேரூராட்சிகளின் அதிகாரிகள் குமுறி வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘தேர்தல் பார்வையாளர்களாக வந்த வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் ஜமாவாக இருந்தார்களாமே..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தேர்தல் பணிகளை கண்காணிக்க வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக ஒவ்வொரு தொகுதிக்கும் இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கிறது. இதற்காக வரும் தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல்  பணிகளை கவனிக்கிறார்களோ இல்லையோ நன்றாக ஊரை சுற்றி பார்க்கின்றனர். நெல்லை, தென்காசி தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட வெளி மாநில தேர்தல் பார்வையாளர்கள் வரும் போதே தங்கள் குடும்பத்ைதயும் உடன்  அழைத்து வந்து விட்டனர். இவர்களுக்கு அரசு சுற்றுலா மாளிகையில் சொகுசு அறை ஒதுக்கப்பட்டது. தேர்தல் பணிக்கு நடுவே திருச்செந்தூர், கன்னியாகுமரி, மதுரை என அரசு கார், அரசு செலவிலேயே அனைத்து இடங்களுக்கும்  சுற்றுலா சென்று வந்து விட்டனர். இவர்களுக்கு உதவியாக அரசு டிரைவர்கள், தாசில்தார் நிலையிலான அதிகாரிகளும் உடன் சென்று அனைத்து இடங்களையும் சுற்றி காண்பித்தனர். இந்த செலவு அனைத்தும் தேர்தல்  ஆணையத்தின் தலையில் தான். வழக்கமாக தேர்தல் பார்வையாளர்கள் பகலில் தொகுதிகளில் ரவுண்ட் அடித்து விட்டு வந்து மாலை நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தயாரிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை  வந்த வெளி மாநில தேர்தல் பார்வையாளர்கள் பெரும் நேரத்தை சுற்றுலாவில் தான் களித்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்