SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் சோகம்

2019-04-22@ 05:05:14

உயிர்ப்பின் திருநாளான ஈஸ்டர் பண்டிகையின்போது ஈவு இரக்கமின்றி இலங்கையில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் உலகத்தையே உலுக்கியுள்ளது. தேவாலயங்கள், 3க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகளில் நடந்துள்ள குண்டு வெடிப்பில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 500 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர். ஈஸ்டர் திருநாளை முன்கூட்டியே தேர்வு செய்து, நூற்றுக்கணக்கானோர் கூடும் ஆலயங்களையும், நட்சத்திர விடுதிகளையும் தேர்தெடுத்து இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது நிதர்சனம். கொழும்பு வீதிகளில் ஒலிக்கும் ஓலம், மக்கள் மத்தியில் நிலவும் பதற்றம் நாட்டின் அமைதியை சீர்குலைத்துள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு இருநாள் விடுமுறை அளிக்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் போர் முடிந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர், நடந்துள்ள இந்த கோர சம்பவம் மீண்டும் பீதியை கிளப்பிவிட்டுள்ளது.இந்தியாவின் கண்ணீர் துளியாக வரைபடத்தில் காணப்படும் இலங்கையின் துயரங்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு தொடர்கதையாக உள்ளது. அரசுக்கும், விடுதலைபுலிகளுக்கும் நடந்த யுத்தங்கள் பல ஆண்டுகளாக நடந்தன.  அப்போது எந்த நேரத்தில் என்ன நிகழுமோ என்ற அச்சமே நிலவியது. கடந்த 2009ல் இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதற்கு பின்னர் தற்போது நடந்துள்ள குண்டுவெடிப்பே அதிக உயிர்களை  காவு கொண்டுள்ளது.

இலங்கை, இந்திய பிரதமர்கள் தொடங்கி உலக தலைவர்கள் பலரும் இச்சம்பவத்திற்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டமும் குண்டுவெடிப்புக்கான பின்னணி குறித்து விவாதித்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும்  இதுவரை பொறுப்பேற்கவில்லை. போருக்கு பின்னர் அமைதி திரும்பிவிட்டதாக கூறிய இலங்கை அரசு கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு அரசியல் குழப்பத்தையே அதிகளவில் சந்தித்து வந்தது. இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநாவும்  விசாரணை நடத்தியது. இலங்கை அரசு இதை அதிருப்தியோடு எதிர்கொண்டது. அதன் தொடர்ச்சியாக இலங்கை அரசு பாதுகாப்பிலும் அலட்சியமே காட்டியது. இலங்கையில் பெரும் தாக்குதல் நடத்தப்படலாம் என இந்தியா உள்பட  சர்வதேச புலனாய்வு அமைப்புகள் எச்சரித்தும் அதை ஒரு பொருட்டாக கருதவில்லை.

கடந்த ஓராண்டாக இலங்கையின் அரசியல் குழப்பமும் உச்சக்கட்டத்தில் உள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கினார். புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமித்தது,  அதை தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு என இலங்கை அரசியலின் ஆடு புலி ஆட்டங்கள் சந்தி சிரித்தன. இலங்கையில் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது என்கிற கருத்துகளும் எதிர்கட்சிகளால் படம்  பிடித்து காட்டப்பட்டன.இத்தகைய பிரச்னைகளில் இருந்து இலங்கை அரசு மீள்வதற்குள், திட்டமிட்ட கோர தாக்குதல் தற்போது நிகழ்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 21ம் தேதி இணையங்களில் வெளியான ஒரு கடிதத்தை முன்வைத்தே சில அமைப்புகள்  இதை முடிச்சு போட்டதோடு, சமூக மோதல்களையும் தூண்டிவிட்ட விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதோடு,  ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தோடு ஒரு பண்டிகைக்கான வழிபாட்டில் பங்கேற்றவர்கள் மீது நடந்துள்ள தாக்குதல் சற்றும் மனிதாபிமானமற்றது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் மத்தியில் அமைதி திரும்ப  இலங்கை அரசு விரைந்து செயல்பட வேண்டிய நேரமிது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • milkashake1111

  பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்