SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் மிகப்பெரிய சக்தியின் சதி

2019-04-21@ 00:04:55

* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகாய் பரபரப்பு குற்றச்சாட்டு
* முக்கிய வழக்குகளை முடக்க முயற்சிப்பதாகவும் புகார்

புதுடெல்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி நேற்று சிறப்பு அமர்வை அவசரமாக கூட்டி விசாரித்த  கோகாய், ‘நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் இந்த சதியின் பின்னணியில் மிகப்பெரிய சக்தி ஈடுபட்டுள்ளது’ என குற்றம்சாட்டினார். மேலும், அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்குகளை முடக்கவும் முயற்சி நடப்பதாக அவர் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தின் இளநிலை உதவியாளராக பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். அதில் அவர், ‘கடந்தாண்டு அக்டோபர் மாதம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னை இருமுறை மானபங்கம் செய்த சம்பவங்கள் அவரது வீட்டில் உள்ள அலுவலகத்தில் நடந்தன. இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், நான் டிஸ்மிஸ் செய்யப்பட்டேன். உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய எனது மாற்றுத்திறனாளி மைத்துனரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தலைமை காவலராக பணியாற்றும் எனது கணவர், மைத்துனர் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்ட்டனர்.  நான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வீட்டில் அவரது மனைவியின் காலில் விழுந்து மன்றாடினேன். என் மீது மோசடி குற்றச்சாட்டு கூறப்பட்டது. நான், எனது கணவர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டோம்’ என கூறியுள்ளார்.

இந்த புகார் மனுவின் நகலை உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் 22 நீதிபதிகளின் வீட்டுக்கும் அந்தப் பெண் அனுப்பியுள்ளார். இது பற்றிய செய்தி சில செய்தி வெப்சைட்களில் வெளியானது. இந்த புகார் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு நேற்று உடனடியாக விசாரித்தது. இந்த அமர்வை தலைமை நீதிபதி கோகாய் தானாக முன்வந்து அமைத்தார். இந்த விசாரணையின் போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியதாவது: என் மீதான இந்த குற்றச்சாட்டை நம்ப முடியவில்லை. இதை மறுக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போக வேண்டுமா எனவும் நான் நினைக்கவில்லை. பிரதமர் அலுவலகமும், தலைமை நீதிபதி அலுவலகமும் சக்தி வாய்ந்தவை. தலைமை நீதிபதி அலுவலகத்தை சீர்குலைக்கும் இந்த சதியின் பின்னணியில் மிகப்பெரிய சக்தியின் சதி இருக்கிறது. நீதிபதியாக நான் பணியாற்றிய எனது 20 ஆண்டுகால சுயநலமற்ற சேவைக்கு பிறகு, எனது வங்கி கணக்கில் 6.80 லட்சம் மட்டுமே சேமிப்பு உள்ளது. மற்றொரு வங்கி கணக்கில் 21.80 லட்சம் உள்ளது. இதில் 15 லட்சம், கவுகாத்தியில் உள்ள எனது வீட்டை பழுது பார்க்க என் மகள் கொடுத்தது. பி.எப் சேமிப்பில் 40 லட்சம் உள்ளது. இதுதான் எனது சொத்து. என்னை யாராலும் பணத்தால் வளைக்க  முடியாது. அதனால், இது போன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளனர். 20 ஆண்டு சேவைக்கு பிறகு எனக்கு கிடைத்த வெகுமதி இதுதான். இதுபோன்ற சூழ்நிலையில் நீதிபதிகள் பணியாற்ற வேண்டும் என்றால், நல்லவர்கள், இந்தப் பணிக்கு வரமாட்டார்கள். எனது பியூன் என்னை விட அதிகம் சம்பாதிக்கிறார்.

என் மீது புகார் கூறிய பெண் மீது இரண்டு எப்ஐஆர் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. 3வது வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். குற்றப் பின்னணி காரணமாக அவர் 4 நாட்கள் சிறையில் இருந்தார். நாட்டின் நீதித்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது. நான் எந்தவித அச்சமும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து எனது கடமைகளை செய்வேன். விஷயம் எல்லை மீறி சென்று விட்டதால், நானே இந்த அமர்வில் இந்த வழக்கை விசாரிக்கும் முடிவை எடுத்தேன். நீதித்துறையை பலிகடா ஆக்க முடியாது. இந்த பெண் அளித்த புகாரின் உண்மைதன்மையை ஆராயாமல், அதை ஊடகங்கள் வெளியிடக் கூடாது. அடுத்த வாரம் பல முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. மேலும், இது மக்களவை தேர்தல் நடக்கும் மாதம். இந்த நேரத்தில் இது போன்ற பிரச்னை எழுப்பப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் உத்தரவு பிறப்பிக்கும் முடிவை எனது அமர்வில் உள்ள நீதிபதி மிஸ்ராவிடம் விட்டு விடுகிறேன். இவ்வாறு கோகாய் கூறினார்.

அதன்பின் உத்தரவு பிறப்பித்த நீதிபதி மிஸ்ரா, ‘‘இப்போதைக்கு இந்த புகாரில் நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. நீதித்துறையின் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும், சரி செய்ய முடியாத அளவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மிக மோசமான குற்றச்சாட்டு கூறப்பட்டுஉ ள்ளதால், விரும்பத்தகாத இந்த விஷயம் பற்றி செய்தி வெளியிடுவதா, வேண்டாமா என்பதை ஊடகங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்’’ என கூறினார். முன்னதாக, இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, பாதியில் தலைமை நீதிபதி கோகாய் வெளியேறி விட்டார்.

வக்கீல்கள் கண்டனம்

இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா அளித்துள்ள பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம். இது போன்ற குற்றச்சாட்டுகளை ஊக்குவிக்க கூடாது. இது உச்ச நீதிமன்றத்தை களங்கப்படுத்தும் முயற்சி. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வக்கீல் சங்கங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம்’’ என்றார்.

பெண் ஜாமீன் ரத்து 24ம் தேதி விசாரணை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியர் மீது கடந்த மார்ச் 3ம் தேதி ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரியானாவை சேர்ந்த நவீன்குமார் என்பவர் டெல்லி திலக் மார்க் போலீஸ் நிலையத்தில், இந்த புகாரை கொடுத்தார். அதில், உச்ச நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.50 ஆயிரம் முன் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக பெண்ணின் மீது அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த வழக்கில் மாஜி பெண் ஊழியர் ஜாமீன் பெற்று இருந்தார். தற்போது புகார்தாரருக்கு அப்பெண்ணும், அவரது கூட்டாளிகளும் மிரட்டல் விடுப்பதால், அந்தப் பெண்ணிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி போலீசார் மனு செய்துள்ளனர். இந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் வரும் 24ம் தேதி விசாரிக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்