SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரிசையில் நின்று வாக்களித்தார் மு.க.ஸ்டாலின்; மக்கள் தவறாமல் வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

2019-04-18@ 09:46:29

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் வரிசையில் நின்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்களித்த்தார். வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் தங்கள் வாக்கை பயன்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். தமிழக மக்கள் தவறாமல் வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்த பின் இவ்வாறு தெரிவித்தார். தற்போது நடைபெறும் தேர்தல் முக்கியமான தேர்தலாக அமைய போகிறது என்று தெரிவித்த அவர், வாக்குக்கு ரூ.500, 1000, 2000 என்று பணம் வினியோகம் நடைபெறுவதாக செய்திகள் வருவதாக அவர் குற்றம் சாட்டினார். நோட்டுக்கு அடி பணியாமல் நிச்சயமாக தமிழக மக்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக தெரிவித்தார்.

 தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நம்பகத்தன்மையுடன் உள்ளதா என்பதை அனைத்து அரசியல் கட்சி ஏஜென்ட்கள் முன்னிலையில் செயல்முறை விளக்கம் அளித்து காட்டப்பட்டது. இதையடுத்து  7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் இன்று நடைபெறும் தேர்தலில் மட்டும் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,95,94,923 பேரும், பெண் வாக்காளர்கள் 3,02,69,045 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 5,790 பேரும் அடங்கும்.

தேர்தல் பணியில் மட்டும் 3.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 160 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு கம்பெனியில் 90 வீரர்கள் இருப்பார்கள். அதன்படி, 14,400 ராணுவ வீரர்கள் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக  பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தமிழக போலீசார் சுமார் 80 ஆயிரம் பேர், ஓய்வு பெற்ற போலீசார், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், என்எஸ்எஸ் வீரர்கள், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் தேர்தல் பாதுகாப்பு  பணிக்காக 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் 67,720 வாக்குப்பதிவு மையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்