SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் ஆணைய முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2019-04-18@ 04:53:12

சென்னை: வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது செல்லும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரான திமுக பொருளாளர் துரைமுருகனின்  மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சின்னத்தில் புதிய நீதிக்கட்சித் தலைவர்  ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் சுயேச்சைகளும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில், மார்ச் 27ம் தேதி வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீடு,  அவரது மகன் கதிர்ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென  சோதனை நடத்தினர்.  சோதனையில் கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்களின் இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை வைத்திருப்பதாக கூறி வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்யும் பரிந்துரையை தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு அனுப்பியது. அதன்படி தேர்தலை ரத்து  செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், சாவி சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சுகுமார் ஆகியோர் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர். இந்த  வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி தாஹில் ரமானி அனுமதி அளித்தார். அதன்படி இந்த வழக்குகளுக்காக நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய சிறப்பு டிவிஷன்  பெஞ்ச் அமைக்கப்பட்டது.அப்போது ஏ.சி.சண்முகம் சார்பில் மூத்த வக்கீல் சதீஷ் பராசரன் ஆஜராகி,  தேர்தலை ரத்து செய்து  ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், தி.மு.க., அதன் வேட்பாளர் கதிர்ஆனந்தை தவிர வேறு  கட்சியினர் மீதோ,  வேட்பாளர்கள் மீதோ முறைகேடு புகார் கூறப்படவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டால், தேர்தல் நடவடிக்கையில் ஜனாதிபதி உள்பட யாரும் தலையிட முடியாது. எனவே, வேலூர் தேர்தலை ரத்து செய்தது  செல்லாது என்று அறிவித்து தேர்தலை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முறைகேடுகள் நடைபெறும்போது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிறீர்களா என்று கேட்டனர்.

அதற்கு மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 22 பேர் போட்டியிடுகின்றனர்.  கதிர்ஆனந்த் மீது மட்டும்தான் குற்றச்சாட்டு  உள்ளது. அவர் போட்டியிட தகுதி நீக்கம் செய்யலாம். அதைவிட்டுவிட்டு  ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்து விட்டு, அனைத்து வேட்பாளர்களுக்கும் ஏன் தண்டனை  வழங்கவேண்டும்? அசாதாரண சூழ்நிலை, வாக்குச்சாவடி கைப்பற்றுதல், கலவரம் உள்ளிட்ட சம் பவங்களின் அடிப்படையில்தான் தேர்தலை ரத்து செய்ய முடியும். அப்படி ஒரு நிலை வேலூர்  தொகுதியில் இல்லை. வாக்காளர்களுக்கு பணம்  கொடுப்பதை  முன்கூடியே அதிகாரிகள் தடுத்து விட்டனர். வாக்காளர்களுக்கு பணம் சென்றடையவில்லை.  எனவே, தேர்தலை ரத்து செய்தது சட்டவிரோதம் என்றார்.  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் தகுதி நீக்கம் என்ற பேச்சே எழுகிறது. இப்போது, தேர்தலே நடக்கவில்லை. எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும். இந்த வாதத்தை ஏற்க முடியாது  என்றனர்.  இதையடுத்து சுயேச்சை வேட்பாளர் சுகுமார் சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர், நாடு முழுவதும் சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் தேர்தல் பறக்கும் படை  அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன்படி பார்த்தால், நாடாளுமன்ற தேர்தலை ஒட்டு மொத்தமாக ரத்து செய்யவேண்டியது வரும். அவ்வாறு செய்யாமல், நாட்டிலேயே ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்து  செய்வது சட்டவிரோதமாகும் என்றார்.

 இதற்கு பதிலளித்து தேர்தல் ஆணைய வக்கீல் நிரஞ்சன் வாதிடும்போது, கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்  செய்ததற்காக மட்டும் வேலூர் தொகுதிக்கு தேர்தலை ரத்து செய்யவில்லை. அங்கு அசாதாரண  சூழ்நிலை  நிலவுகிறது. அதற்கான ஆதார ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இதன் அடிப்படையிலேயே தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. ஒரு தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலை தேர்தல் ஆணையம்  ரத்து செய்தால், அதில் நீதிமன்றம் உள்பட யாரும் தலையிட முடியாது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ததற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதில், வருமான வரித்துறையினரின் அறிக்கை, தேர்தல் செலவின பார்வையாளர், மண்டல தேர்தல் செலவின  பார்வையாளர் ஆகியோரது அறிக்கை அடிப்படையில்தான் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.  தேர்தலை நடத்துவது குறித்து அறிவிப்பாணை வெளியிட அதிகாரம் உள்ள தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது. கலவரம், வாக்குச்சாவடி கைப்பற்றுதல், இயற்கை சீற்றங்கள் போன்ற  காரணங்களுக்காகத்தான்  தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. தேர்தலை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் தேர்தலை ரத்து செய்து  தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியும். தேர்தல்  ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது செல்லும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

* தேர்தலை நடத்துவது குறித்து அறிவிப்பாணை வெளியிட அதிகாரம் உள்ள தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது.
* கலவரம், வாக்குச்சாவடி கைப்பற்றுதல், இயற்கை சீற்றங்கள் போன்ற காரணங்களுக்காகத்தான்  தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
* தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்