SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை மறக்காதீர்

2019-04-17@ 00:22:56

இந்திய ஜனநாயகத்தின் சிறப்பம்சமாகவும், தனித்துவமிக்கதாகவும் இருப்பது தேர்தல். சோழர் காலத்தில் குடவோலை முறையில் நடந்த தேர்தல், படிப்படியாக விஞ்ஞான வளர்ச்சி காரணமாக இன்று ``இ.வி.எம்.’’ என்னும்  வாக்குப்பதிவு இயந்திரம் வரை எட்டிவிட்டது. வளர்ந்து விட்ட பல நாடுகளும், நம்மை  பார்த்து வியக்கும் வகையில் தற்போது நம் நாட்டில் தேர்தல் நடக்கிறது. ஆனால், 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பது எட்டாக்கனியாகவே  உள்ளது. தேர்தல் ஆணையம் என்னதான் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டாலும், 100 சதவீதம் வாக்குப்பதிவை இதுநாள் வரை எட்ட முடியவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1951-52ம் ஆண்டில் துவங்கி, தற்போது 17-வது மக்களவை தேர்தல் நடக்கிறது.  68 ஆண்டு உருண்டோடி விட்ட பிறகும், மக்கள் தாமாக முன்வந்து 100 சதவீதம் ஜனநாயக கடமை ஆற்றுவது  என்பது அரிதாகவே உள்ளது. முதல், மக்களவை தேர்தல், 1951 அக்டோபர் 25ம்தேதி துவங்கி, 1952 பிப்ரவரி 21ம்தேதி வரை நடந்தது. இத்தேர்தலில் 44.99 சதவீதம் வாக்குப்பதிவானது. தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்தல்களிலும் சராசரியாக 47 சதவீதம் முதல் 57 சதவீதம் வரை  மட்டுமே வாக்குப்பதிவாகி உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த 16-வது மக்களவை தேர்தலில், 66.38 சதவீதம் வாக்குப்பதிவானது.  இதுவே, இந்திய தேர்தல்  வரலாற்றில், மிக அதிகமாக வாக்குப்பதிவான தேர்தல் ஆகும்.

17-வது மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் இதுவரை, நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், மதுபானம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றின் பட்டியலை தேர்தல் ஆணையம்   வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை ₹1‌‌83 கோடியே 21 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ₹284 கோடியே 67 லட்சம் மதிப்புள்ள  1,602 கிலோ தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்   செய்யப்பட்டுள்ளது. இந்த பறிமுதல் இந்தியாவிலேயே, தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. இது, தமிழ்நாட்டுக்கு பெருமை அல்ல, தலைக்குனிவு.ஓட்டுப்போடுவதற்கு, வாக்காளர்களுக்கு பணம் தருவது என்பது தேசத்திற்கு அவமானம். இந்த அவமானத்துக்கு வாக்காளர்கள் ஒருபோதும் இடம் அளிக்கக்கூடாது. வாக்குச்சீட்டால் தீர்ப்பு வழங்கும் உரிமை ஜனநாயக நாட்டில்  மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எவ்வித மிரட்டலுக்கும், சபலத்துக்கும் ஆட்படாமல் துணிந்து, ஜனநாயக கடமை ஆற்றுவோம்.100 சதவீதம் வாக்குப்பதிவு  நடந்தால்தான், உண்மையான ஜனநாயக தீர்ப்பாக அமையும். ஜனநாயகம் தழைக்கவும்,  எதிர்கால சந்ததியினர் பயன்பெறவும் தேர்தல் உதவ வேண்டும். பெரும்பான்மை மக்கள் ஆதரவுடன் நாட்டின்  பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும்.  இதற்கு, 100 சதவீதம் வாக்குப்பதிவு கட்டாயம். நாளை நமது ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிப்போம். நாட்டை தலைநிமிர செய்வோம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்