SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிக் டாக் ‘செக்?’

2019-04-16@ 01:16:35

வளர்ச்சியின் உச்சம் தருகிற பயன்கள், இருபுறமும் கூர்மையான கத்திக்கு ஒப்பானவை. சிறிது பிசகினாலும், ஆறாத காயத்தையும், தீராத வடுவையும் ஏற்படுத்தி விடுகிற ஆபத்து நிறைந்தவை. அறிவியல் வளர்ச்சி நமக்கு தந்த கொடைகளுள் பல, திசைமாறி, எய்தவரையே பதம் பார்த்த உதாரணங்கள் நிறைய நமக்கு உண்டு. சமீபத்திய உதாரணம் - டிக் டாக். பார்த்தால் பரம சாதுவாக, சேர்ந்தாற்போல நாலு வார்த்தை பேசத் தயங்குகிற நம்மூர் இளைஞர்களும், யுவதிகளும், டிக் டாக் செயலியில் பதிவேற்றி, அரங்கேற்றுகிற ஆட்டம், மெய்யாகவே மெய்சிலிர்க்கச் செய்கிறது. திரையில் வருகிற நிஜ கலைஞர்களையே சமயத்தில் மிஞ்சுகிற அளவுக்கு முக பாவனைகளும், உடல் அசைவுகளும் சபாஷ் தான். எல்லை மீறுகிற போதுதான் பிரச்னை.

2016, செப்டம்பரில், சீனாவில் அறிமுகமாகி தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் டிக் டாக் செயலி சபாஷ்களை விடவும், சர்ச்சைகளையே அதிகம் கொண்டு வந்து சேர்க்கிறது. அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள், சமூகச் சிக்கல்கள், இளைஞர்களின் திசைமாறல் சம்பவங்களுக்கு இந்தச் செயலியும் ஒரு காரணமாக அமைவதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்தன. சமூக ஆர்வலர்களின் தொடர் வற்புறுத்தல்களையடுத்து, இந்தச் செயலியை தடை செய்யவேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு பரிந்துரைத்தது. இளைஞர்களை தவறான வழிக்குக் கொண்டு செல்லும் இந்தச் செயலியை தடைசெய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமூக ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இணையத்தில், குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அமெரிக்கா மற்றும் இந்தோனேசியாவில் இந்தச் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடைசெய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், ‘‘ப்ளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடை விதிக்கவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயலவேண்டும். டிக் டாக் செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து, டிக் டாக் செயலியை உருவாக்கிய சீனாவின் ‘பைட் டான்ஸ் (Byte Dance)’ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ‘‘எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது’’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தடையை நீக்க திட்டவட்டமாக மறுத்து விட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, வளர்ந்து வரும் இந்தியாவின் இளம் தலைமுறையினர் மீது அது கொண்ட அக்கறையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தை கட்டமைக்கும் இளைஞர்களின் நிகழ்காலம், திசைமாறி விடாமல் பாதுகாக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்ற கருத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கிறது!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்