SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்சபட்ச மின்தேவையின் அளவு உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: நத்தைவேக திட்டங்களால் மாநிலம் இருளில் மூழ்கும் அபாயம்

2019-04-15@ 05:35:46

சென்னை: தமிழகத்தில் மின்சார தேவை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நத்தைவேகத்தில் நடைபோடுவதால் மாநிலம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் கருத்து தெரிவித்தனர். ஆண்டுதோறும் புதிதாக மின் இணைப்பு பெறுவோரின் எண்ணிக்கை 6 முதல் 8 லட்சம் அளவிற்கு உள்ளது. ஒவ்வொரு ஆண்டின் உச்சபட்ச மின்தேவையின் அளவு என்பது உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு உச்சபட்ச மின்தேவையின் அளவு 15,300 மெகாவாட் அளவிற்கு இருந்தது. இது நடப்பாண்டில் உயர்ந்து கோடைகாலம் துவங்குவதற்கு முன்னதாகவே கடந்த 4ம் தேதி 16,050 மெகாவாட் அளவை தொட்டது.

 இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இரவு 10.30 மணியில் இருந்து 2 மணிவரை பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சந்தோஷபுரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அவ்வப்போது ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் மாநிலத்தில் பல இடங்களில் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மின்தேவையின் அளவும் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படாததால், தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:

2016ம் ஆண்டுக்கு பிறகு கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. வாரியத்தால் அமைக்கப்பட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சார அளவு 7142 மெகாவாட். மத்திய தொகுதிப்பில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 6312 மெகாவாட். இரண்டையும் சேர்த்தால் 13,455 மெகாவாட் அளவு மின்சாரமே கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், பெரும்பான்மையான நாட்களில் மொத்த மின் உற்பத்தி திறனான 13,455 மெகாவாட்டில் 10,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. கடந்த ஆண்டு உச்சகட்ட மின்தேவையின் அளவு 15,300 மெகாவாட்டாகும். இந்நிலையில் இவ்வாண்டு கடந்த ஏப்ரல் 4ம் தேதி 16050 மெகாவாட் அளவிற்கு மின்சார தேவை உயர்ந்து இருந்தது.

வரும்காலங்களில் மின்சாரத்தின் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி மின்தேவையின் அளவு 16,300 மெகாவாட் அளவிற்கு உள்ளது. தமிழக மின்சார வாரியமும், மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவும் 10,500 மெகாவாட்டாக உள்ளபோது இடைவெளி என்பது சுமார் 5,800 மெகாவாட்டாக உள்ளது. இந்த இடைவெளியை எதிர்கொள்ள ஏற்கனவே 3,189 மெகாவாட் குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ. 5.50 என்ற விலையில் வாங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு உற்பத்தி செலவு ரூ. 4.25 பைசா மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு திட்டமிட்டுள்ள மின் நிலையங்களில், எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்க திட்டம் 2018-19ம் ஆண்டுகளில் முடித்திருக்க வேண்டும். ஆனால், பணிகள் தடைபட்டதால், இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் கிடைப்பது என்பது 2022ம் ஆண்டுக்கு முன்பு கிடைக்காது. எண்ணூர் சிறப்பு பொருளாதார அனல் மின் திட்டம், வடசென்னை மின் நிலை-3, உப்பூர் அனல் மின் திட்டம், உடன்குடி அனல் மின்நிலை-1 ஆகியவை 2019-20ல் உற்பத்தியை துவங்கிட வேண்டும் என்பது திட்டமிட்டபடி நடந்தால் கூடுதல் மின்தேவையை ஓரளவிற்கு சமாளிக்க முடியும். எனவே இப்பணிகளை சுணக்கம் காட்டாமல் அரசு விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-06-2019

  21-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • adayaru_makkal_kumbha1

  அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

 • oranguttan_monkey111

  50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

 • malai_vangam11196

  196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

 • amerikaa_aathal11

  900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்