SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீழட்டும் பணநாயகம்

2019-04-15@ 05:30:36

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இடைத்தேர்தல் நடந்தால் மட்டுமே தொகுதியில் பணமழை பொழிந்தது. சமீபகாலமாக பொதுத்தேர்தலிலும் ஓட்டுக்கு துட்டு சர்வசாதாரணமாகிவிட்டது. வாக்காளர்களே அந்த கட்சி அவ்வளவு, இந்த கட்சி இவ்வளவு என கூட்டல், கழித்தல் கணக்குகளை போடுகிற நேரமிது. நூறு சதவீதம் ஓட்டுப்பதிவு, லஞ்ச லாவண்யமற்ற வெளிப்படையான தேர்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் கமிஷன் தொடர்ந்து கதறிக் கொண்டிருந்தாலும் யார் காதிலும் அது விழுந்ததாக தெரியவில்லை. தேர்தல் காலத்தில் இந்தியாவிலேயே அதிகம் பணம் புரளும் இடமாக தமிழகம் இருக்கிறது. அரசியல் கட்சிகள் பணத்தாலே வாக்காளர்களை அடிக்க சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருக்கின்றன. வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதும் குற்றம், வேட்பாளர்கள் பணம் தருவதும் குற்றம். இவ்விரண்டுக்குமே ஜெயில் தண்டனை உண்டு என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையை அரசியல் கட்சிகள் பொருட்டாக எடுத்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை. வரும் 17ம் தேதிக்குள் வாக்காளர்கள் கையில் தங்கள் பணத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளோடு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

 தமிழகத்தில் தேர்தலுக்காக அமைக்கப்படும் பறக்கும் படைகள் வெறும் கண்துடைப்பு என்றே கூறலாம். ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக கூறி பறக்கும் படையினர் ரூ. 130 கோடியை கைப்பற்றியுள்ளனர். ரூ. 8 கோடி மதிப்பிலான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். இவற்றில் எவ்வளவு அரசியல் கட்சிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் என கணக்கிட்டாலே உண்மை வெட்டவெளிச்சமாகும். பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ள பணத்தில் அதிகளவு விருதுநகரிலும், கோவையிலும் காணப்படுகிறது. இவை இரண்டுமே தொழில் நகரங்களாகும். பறக்கும் படையினர் தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்தே அதிகளவில் தேர்தல் சமயத்தில் பணத்தை கைப்பற்றுகின்றனர். ஆனால் அரசியல் கட்சியினரை கண்டு கொள்வதே இல்லை. இது ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகள் தெளிவாக பணத்தை மாவட்ட நிர்வாகிகள் மூலம் பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகளுக்கு முறையாக கொண்டு போய் சேர்த்து வருகின்றனர்.

இப்பணம் முறையாக வாக்காளர்களுக்கு செல்கிறதா என்பதை கண்காணிக்க கூட கட்சிகளில் தனித்தனி குழுக்களும் இயங்குகின்றன. இவற்றையெல்லாம் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. அப்படியே ஏதாவது ஓரிடத்தில் பணத்தை கைப்பற்றினால் கூட வழக்கு, குற்றப்பத்திரிக்கை என தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும் முன்பு அடுத்த மக்களவை தேர்தல் வந்துவிடும். பணம் தரும் வேட்பாளர்கள், வாங்கும் வாக்காளர்களுக்கு உடனடி ஜெயில் என தண்டனை அறிவித்து, அதை செயல்படுத்தினால் ஓரளவுக்கு நியாயமான வாக்குப்பதிவு நடக்கும். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஜனநாயகத்தை பணநாயகம் ஆட்கொண்டு விட்டது. இந்த தேர்தலிலும் அதற்கான அறிகுறிகளே தெரிகிறது. பணப்புழக்கம் இப்படி தாராளமாக இருந்தால் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் 50, 100 ஓட்டுக்களை கூட பெற முடியாமல் போகும். வாக்காளர்களை பணத்தால் வளைக்கும் வேட்பாளர்கள் பிடியில் இருந்து தேர்தல்களை விடுவிக்க ஆணையம் திறந்த மனதுடன் முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • milkashake1111

  பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்