SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக வேட்பாளருக்கு டர்ரை கிளப்பிவிட்டு சென்ற மத்திய அமைச்சர் பற்றி சொல்கிறார்...wiki யானந்தா

2019-04-15@ 00:42:16

‘‘மாங்கனி நகரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் கட்கரி கலந்துகொண்டார். முதல்வர் எடப்பாடி, மாம்பழ கட்சி நிறுவனர் ராமதாஸ் இருந்த மேடையில், விவசாயிகளை கொந்தளிக்கச் செய்யும் வகையில்,  சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என அதிரடியாக கட்கரி அறிவிச்சாராம். இதை கேட்டதும், எடப்பாடி, ராமதாஸ் முகத்தில் ஈயாடவில்லையாம். இறுதி கட்ட பிரசாரத்தில், நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது  கூட, மேல்முறையீடு குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனமாக இருக்கும் நிலையில், இப்படி வெண்ணெய் திரண்டு வந்தபோது பானையை கட்கரி உடைத்து விட்டாரே என மனதுக்குள் புழுங்கி தவித்தார்களாம். சில  இலை கட்சி முன்னணி நிர்வாகிகள், எலக்‌ஷன் முடியும் வரை 8 வழிச்சாலை பற்றி பேசாமல் இருந்து, விவசாயிகள் ஓட்டை வாங்கி விடலாம் என நினைத்திருந்தோம். ஆனா கட்கரி, அதுக்கு பெரிய ஆப்பு வைச்சிட்டாரே என  வெளிப்படையாக பேசினாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாங்கனி அதிமுக வேட்பாளர் அடிவயிற்றில் புளியை கரைத்துவிட்டு சென்றிருக்கிறார் கட்கரி என்று சொல்லுங்கள்..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘அதென்னமோ உண்மைதான்..’’ என்று பதிலுக்கு சிரித்தபடி சொன்ன விக்கியானந்தா, ‘‘அமைச்சரை நொந்துபோக வைத்த நடிகரை பத்தி தெரியுமா..’’ என பொடி போட்டு நிறுத்தினார்.

‘‘அது என்ன கதை’’ என்று ஆர்வத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.‘‘மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து, நடிகர் கார்த்திக், மதுரை கீரைத்துறையில் கடந்த 11ம் தேதி, மாலை 5 மணிக்கு பிரசாரம் செய்வார் என அறிவிச்சிருந்தாங்க... இதுக்காக அமைச்சர்  செல்லூர் ராஜூ, எம்எல்ஏ ராஜன்செல்லப்பா உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் 5 மணிக்கு முன்னாடியே கரெக்டாய் ஆஜராயிட்டாங்க.. நேரம் ஓடிக்கிட்டே இருந்தது... கார்த்திக் வந்தபாடில்லை... டீ, வடை, கடலைன்னு  போய்க்கிட்டே இருந்தது... பொறுத்து பார்த்த அமைச்சர், ராஜன்செல்லப்பாவிடம், ‘‘நடிகருக்காக எவ்வளவு நேரம்பா காத்து கிடக்கிறது... அப்புறம் எப்படி மத்த இடங்கள்ல போய் பிரசாரம் செய்ய முடியும்’’ என டென்ஷனாக  கடிந்து கொண்டாராம்... மறுபக்கம் நிர்வாகிகளோ, ‘‘கூட்டத்தை காட்ட பெண்களை எல்லாம் மதியம் 3 மணிக்கே கூட்டி வந்துட்டோம்ணே... 7 மணி ஆயிருச்சு... இன்னும் வரலைன்னா எப்படிண்ணே? அவங்க கலைஞ்சு  போய்ட்டாங்கன்னா எங்களை கேட்காதீங்க...’’ என்று நிர்வாகிகள் பேச அங்கே ஒரு களேபரமானதாம்... ஒரு வழியாக கடைசியாக இரவு 7.15 மணிக்குத்தான் நடிகர் கார்த்திக் வந்து பிரச்சாரத்தை துவக்கினாராம்... ‘‘ஒரு  பரபரப்பான ஹீரோவுக்காக கூட, பல மணி நேரம் காத்திருந்தாலும் பலன் உண்டு... வாய்ப்பே இல்லாத ஒருத்தருக்காக இவ்வளவு நேரமாய் காத்து கிடக்கிறாரு அமைச்சரு... இவரு ஷூட்டிங்கிற்கே ஒழுங்கா போக மாட்டாரு...  கூட்டத்துக்கு எப்படி கரெக்ட் டயத்துக்கு வருவாரு...’’ என தொண்டர்கள், அமைச்சர் காதுபடவே பேசிக்கிட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘தேர்தல் பிரசாரம் சூடுபிடிச்ச மாதிரி பணப்பட்டுவாடாவும் சூடா நடக்குது போல..’’ ‘‘ஆமா.. இடைத்தேர்தல் நடக்கும் தஞ்சையில் ஆளும்கட்சி பலே வேலையை செய்துவருகிறதாம். வாக்காளர்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையிலான கவனிப்பிற்கான பணியை முடுக்கிவிட்டுள்ளனராம்.. ஒரு ரேஷன் கார்டுக்கு  எத்தனை குடும்ப உறுப்பினர் இருந்தாலும் அதற்கு ₹10 ஆயிரம் என நிர்ணயம் செய்து பல லகரத்தை கட்சி நிர்வாகிகளிடம் முக்கிய நபர் ஒப்படைத்திருக்கிறாராம். தேர்தலுக்கு முதல்நாள் இரவோடு இரவாக அந்தந்த  பகுதிக்குட்பட்ட நிர்வாகிகளிடம் பணத்தை கொடுத்து வீடுதோறும் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். முடிந்தால் தடுத்து பாருங்கள் என தேர்தல் பறக்கும் படைக்கு சவால் வேறு விட்டிருக்கிறார்களாம்.. பறக்கும் படைக்கு  இந்த விஷயம் எல்லாம் தெரியுமா என தெரியவில்லை..’’ என்று சிரித்தபடி கூறினார் விக்கியானந்தா.

‘‘பவுன்சர்களை வைத்து கமல் மிரட்டுவதாக புகார் வருகிறதே..’’ ‘‘வேலூர் மாவட்டத்துக்கு சில நாட்களுக்கு முன் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் நடிகர் கமல் பிரசாரம் செய்ய வந்தார். அவருக்கு சால்வை அணிவிக்கவும், புத்தகங்கள் கொடுக்கவும் பலர் முண்டியடித்தனர். ஆனால்  பவுன்சர்கள் அனுமதிக்கவில்லை. எல்லோரையும் பிடித்து தள்ளிவிட்டனர். மறுநாள் கமல் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற கட்சி நிர்வாகிகளுக்கும் பவுன்சர்களிடம் இருந்து இதே பாணி தள்ளிடல்தான் கிடைத்தது. இதனால்  அவர்களுடன் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொண்டர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க விரும்புகின்றனர். இதற்கு மறுப்பதாக இருந்தாலும் இங்கிதமாக மறுக்கலாம், இப்படியா பவுன்சர்களை வைத்து  தள்ளிவிட்டு அவமதிப்பது என அவரது கட்சிக்காரர் களே புலம்பினர்..’’ என்றார் விக்கியானந்தா.n


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்