SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அல்வா மாவட்ட வேட்பாளருக்கு அல்வா கொடுக்கிறார்களா என்பதை சொல்கிறார் : wiki யானந்தா

2019-04-12@ 04:21:46

‘‘அல்வா மாவட்டத்துல வேட்பாளருக்கு அல்வா கொடுக்கிறாங்களாமே... அப்படியா’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா.‘‘ம். பணப்பட்டுவாடா செய்வதில் நெல்லை அதிமுகவினர் மும்முரமாக இறங்கியுள்ளனர். ஆனால் கட்சி நிர்வாகிகள் பணத்தை முறையாக கொண்டு போய் சேர்ப்பார்களா என்ற சந்தேகம் வேட்பாளருக்கு... கடந்த சட்டசபை தேர்தலில் பணப் பட்டுவாடாவை முறையாக நடத்தாமல் கரன்சியை வீட்டில் போய் பதுக்கி வைத்துக் கொண்டு ஓய்வெடுத்த சில நிர்வாகிகள் மீது வேட்பாளருக்கு பயங்கர சந்தேகமாம்... அல்வா மாதிரி பேசி கத்தை கத்தையாக பணத்தை வாங்கிட்டு நமக்கு அல்வா கொடுத்துடுவாங்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாம். இவர்களுக்கு செக் வைக்க  வக்கீலான அவர் ஒரு மூத்த வக்கீல் தலைமையில் பல வக்கீல்களை கொண்ட ஒரு கண்காணிப்பு குழுவையும் ரகசியமாக அமைத்துள்ளாராம்... இந்த கண்காணிப்பு குழு நெல்லை மாநகராட்சியில் சில வார்டுகளுக்கு சென்று வாக்காளர்கள் எண்ணிக்கை, சாதக, பாதக விபரங்களை தொகுத்து வருகிறதாம். இதனால் மாவட்ட நிர்வாகிகளும், வட்ட நிர்வாகிகளும் கடும் கோபத்தில் இருக்காங்களாம். தங்களுக்கு தெரியாமல் பணப் பட்டுவாடா செய்தால், அதை தேர்தல் கமிஷனிடம் போட்டுக் கொடுத்து பணத்தை கைப்பற்றவும், அவர்களை பறக்கும் படையிடம் சிக்க வைக்கவும் உள்ளடி வேலையில் இறங்கியுள்ளனர். இதனால் பணப்பட்டுவாடா நேரத்தில் கட்சிக்குள்ளேயே பூசல் வெடிக்க வாய்ப்புள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பாதி ஆட்டையை போடலாம்னு நினைச்சு இருப்பாங்க... அதிலும் மண் விழுந்ததால வந்த கோபமாக இருக்கும். ‘‘தூங்கா நகரம் அமைந்துள்ள மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தேர்தல் பணிகள் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக இருக்கும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் தேர்தல் பணிகள் மந்த கதியில் நடக்குதாம். வெளியே தெரியாத அளவிற்கு ஒவ்வொன்றும் ரகசியம் காக்கப்படுதாம். கலெக்டருக்கான நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடம் நிரப்பப்படவில்லையாம். அந்த பொறுப்பை நேர்முக உதவியாளரே (பொது) சேர்த்து பார்க்கிறாராம். இதுக்கு பின்னாடி அரசியல் பின்னணி இருப்பதாக அரசு ஊழியர்களே பேசிக்கொள்கின்றனர்... கொளுத்தும் வெயிலை காரணம் காட்டி தேர்தல் அவசரம் என ஒட்டப்பட்ட ஜீப்கள் எல்லாம் மரத்தடியில் ஓய்வெடுக்குதாம். தேர்தல் பற்றிய செய்திகள் வெளிவராத அளவிற்கு ரகசியம் காக்கப்படுதாம்... தேர்தல் பணிகளை தாசில்தார், துறை அதிகாரிகளிடம் பிரித்து ஒப்படைத்து விட்ட நிலையில், அதற்கான பணத்தை மட்டும் வாரிச் சுருட்டும் வேலை நடக்குதாம். பிரிண்டிங், வாடகை டிவி, சாப்பாடு, டீ, காபி முதல் அனைத்திலும் பில் தொகைக்கு ஏற்ப கமிஷன் குவியுதாம். ஒரு டிவிக்கான வாடகையில் புதிதாக இரண்டு டிவி வாங்கும் அளவிற்கு வாடகை இருக்குதாம். அத்தனை கமிஷனையும் சிலர் மட்டும் வாரி சுருட்டி வருகிறார்களாம், மாவட்ட தேர்தல் அலுவலரோ கண்டும் காணாமல் இருக்கிறாராம். கமிஷன் விபரம் தெரிந்த அலுவலர்கள் ஏனோ தானோ என பணியாற்றுவதால் தேர்தல் பணியில் சுணக்கம் நிலவுவதாக கலெக்டர் அலுவலக அதிகாரிகளின் குமுறல் நான்கு வழிச்சாலை வரை கேட்குதாம்...’’ என்றார் விக்கியனந்தா.

‘‘ஆளுங்கட்சி சம்மதத்துடன் சுருட்டல் நடப்பதால் அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக இருப்பார்கள் என்று இலை கூட்டணி வேட்பாளர் நினைக்கிறார் போல... அப்புறம்.. இந்த கிரெடிட் கார்டுகளை கண்டு பயப்படும் போலீஸ்காரர்களை பற்றி சொல்றேன்னியே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஓ.. அந்த விஷயமா.. சொல்றேன்.. வேலூர்ல போலீஸ் வாகனங்களுக்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் டீசல், பெட்ரோல் போடுவதற்காக செப்டம்பர் மாதம் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டது. இந்த கார்டு மூலம் எரிபொருள் பயன்பாடு குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்து வந்தனர்... கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறை வாகன டிரைவர் ஒருவர் தனது வாகனத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்க்கிற்கு சென்றார். அப்போது, பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பி விட்டு, கிரிடிட் கார்டு கொடுத்த போது, அந்த கார்டில் பணம் இல்லை. இதையடுத்து அந்த காவலர் உடனடியாக அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கிரிடிட் கார்டில் பணம் போட சொல்லி உள்ளார். அதைத்தொடர்ந்து அந்த கார்டுக்கு பணம் செலுத்திய பிறகு எரிபொருள் நிரப்பப்பட்டது. இதனால் பல மணி நேரம் அந்த காவலர் பங்க்கை விட்டு வெளியே செல்ல முடியாமல் அங்கேயே நின்றிருந்தாராம். இச்செய்தி போலீசார் மத்தியில் வேகமாக பரவியது. இதையடுத்து எரிபொருள் நிரப்ப செல்லும் காவலர்கள் கார்டில் எவ்வளவு பணம் உள்ளது என்பது தெரிந்து கொண்டே எரிபொருள் நிரப்பி வருகின்றனர்... இதில், உயர் அதிகாரிகளின் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் கார்டில் மட்டும் பணத்தை உடனடியாக செலுத்தி விடுகின்றனராம். மற்ற காவலர்களின் கார்டுகளுக்கு பணம் ெசலுத்துவதில் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனராம். இதனால், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப கார்டு வேண்டாம் என போலீசார் புலம்பி வருகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2019

  20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • motor_strike1

  புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

 • jellifish_shapee1

  உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

 • malar_palam11

  கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

 • banglore_fire11

  பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்