SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் சேனல்

2019-04-07@ 04:07:13

இந்த கேஸை  கூடவா கிடப்பில்  போடுவீங்க...    
குமரி மாவட்டத்தில் போலீசார் அனைவரும் தேர்தல் வேலையில் பிஸியாக இருப்பதால், காவல் நிலையங்களில் புகார் மனு கூட வாங்க ஆள் இல்லாத நிலை உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் மிகவும் குஷியாக இருக்கிறார்களாம். மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது குறித்து புகார் அளித்தவர்கள், ஏதாவது தகவல் உண்டா? என்று போலீஸ் நிலையத்துக்கு சென்று கேட்டால், ஏப்ரல் 18ம் தேதி வரைக்கும் இந்த பக்கம் வராதீங்க. அதற்கு பிறகு யோசிப்போம். தேர்தல் வேலையே தலைக்கு மேல இருக்கு என்று போலீசார் விரட்டாத குறையா கூறி அனுப்பி வைக்கிறார்களாம். பணம், நகை திருட்டு வழக்காக இருந்தா பரவாயில்லை. பலாத்கார புகார் வழக்கை கூட பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று தான் காவல்துறையினர் நினைக்கிறார்களாம். இப்படி தான் சிறுமி பலாத்கார வழக்கு விசாரணையில் அலட்சியம் காட்ட, கடைசியில் எஸ்.பி. வரை தகவல் சென்று எப்.ஐ.ஆர். போட்டு உள்ளார்கள். எந்த கேஸை தான் கிடப்பில் போடனும்கிறது கூட இப்போது இருக்கிற போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிய மாட்டேங்குது என்று மூத்த போலீசார் புலம்புகிறார்களாம்.

பார் கலெக்‌ஷனில்  கில்லாடி போலீசார்
பாளை குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன், இரவு 10 மணிக்கு மேல் வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு சென்றுள்ளனர். சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கூறி, அங்கிருந்த கடை ஊழியர்களை மிரட்டி 80 குவார்ட்டர் மதுபாட்டில்கள் மற்றும் ₹2ஆயிரத்தை வசூலித்து சென்றுள்ளனர். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை சம்பந்தப்பட்ட மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை. 80 குவார்ட்டர் பாட்டில்கள் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. இதுபோல் பாளை என்ஜிஓ காலனி பகுதியில் தங்கியிருந்த வெளி மாவட்ட கட்டிட தொழிலாளர்களிடம், அந்த பகுதிகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக கூறி, கைரேகை எடுத்துள்ளனர். அவர்களை மிரட்டி பணத்தை கறந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தங்களை வேலைக்கு அழைத்து வந்த இன்ஜினியரிடம் தெரிவிக்கவே, அவர் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் தொடர்புடைய காவலர்களுக்கு ‘’மெமோ’’ கொடுக்கப்பட்டுள்ளது. குற்றத்தை தடுப்பது தான் குற்றப்பிரிவு போலீசின் வேலை. ஆனால் அவர்களே குற்றம் செய்தால் என்ன செய்வது என்பது தான் பொதுமக்களின் ஆதங்கம்.

திருநங்கைகளுக்கு  பச்சை கொடி காட்டிய ஏ.சி.,
மாங்கனி மாநகரின் மையப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் திருநங்கைகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுசா இன்ஸ்பெக்டரா வந்தவரு, பயணிகளுக்கு தொல்லை தரும் திருநங்கைகளை அழைத்து பேசி, எச்சரிக்கை விடுத்தார். அடுத்த சில நாட்களில் 2 பயணிகளை தனியாக அழைத்துச் சென்று, பணம் பறிப்பில் ஈடுபட்ட 2 திருநங்கைகளை கைது செய்து கறார் காட்டினார். கொந்தளித்து போன திருநங்கைகள், திடீரென ஸ்டேஷனை முற்றுகையிட, உயர் அதிகாரியான ஏரியா ஏசி பதறிப்போனாராம். ஸ்பாட்டுக்கு வந்த அவரின் காலில் திருநங்கைகள் விழ.. சிறிது நேரத்தில் சில திருநங்கைகளை மட்டும் தனியாக அழைத்து பேசிய ஏசி, பிரச்னையின்றி கலைந்துச் செல்லுங்க எனக்கூறி அவர்களின் காலில் கவிழ்ந்து அடித்து விழுந்தாராம். அதிலும், வழக்கம்போல் நீங்க பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லுங்க... மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என பச்சை கொடியும் காட்டினாராம். சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்ற திருநங்கைகள், ஸ்டேஷன் காக்கிகளுக்கு பெப்பே காட்டிச் சென்றனராம். இது மாநகரின் தலைமை அதிகாரியின் கவனத்திற்கு செல்லவும், அந்த ஏசியை அழைத்து விளக்கம் கேட்டதாக கொசுறு தகவலும் உள்ளது. இதனால், தேர்தல் முடியட்டும்... மீண்டும் ஒரு கை பார்த்து விடுவோம் என காத்திருக்கின்றனராம் ஸ்டேஷன் காக்கிகள்.

ஒத்தக்கடை போலீசார் ஓவர் வசூல் வேட்டை
மதுரை, ஒத்தக்கடை சுற்றியுள்ள பகுதியில் நரசிங்கம்பெருமாள், திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயில்கள் உள்ளன. மதுரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து வாரத்தில் எல்லா நாட்களிலும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் ஏராளமானோர் தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்த இரு பகுதிகளிலும் மாலை நேரங்களில் தனியாக வரும் பெண்களை குறி வைத்து, நகை பறிப்பு மற்றும் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாக நடக்கிறது. இரவு நேரங்களில் கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்ற செயல்களை தடுக்க சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விசாரணை என்ற பெயரில் சமூக விரோதிகளிடம் போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபட்டு குற்றச்செயலுக்கு துணை போகும் அவலம் தொடர்கிறது. குற்றங்களை தடுக்க தவறிய போலீசார் மீது, எஸ்பி நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சாராயத்தில் முத்துக்குளிக்கும்  காக்கி அதிகாரி
திருப்பத்தூர் தாலுகா கந்திலியில் ஆண்டி கடவுளின் பெயரை கொண்ட காக்கி அதிகாரிக்கு சாராயம், கஞ்சா ஆசாமிகள் மூலம் மாமூல் மாத, மாதம் கொட்டுகிறதாம். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் புதூர் நாடு பகுதியில் சாராய தொழிற்சாலையையே நடத்தி வருகிறார்களாம். அங்கிருந்து லாரி டியூப்களிலும், அரிசி மூட்டைகளில் வைத்தும் சாராயம் கந்திலி, குனிச்சி, பல்லலப்பள்ளி, காக்கங்கரை என கந்திலி சுற்று வட்டார பகுதிகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறதாம். இது ஒருபுறம் என்றால் கந்திலியில் பள்ளிகள் பகுதி மற்றும் மறைவான இடங்களில் பெண் ஒருவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வருகிறாராம். இப்போதெல்லாம் கந்திலி ஒன்றியம் என்றாலே சாராயமும், கஞ்சாவும் பிரபலமாம். இப்போது மக்களவை தேர்தலுக்காக எல்லாதுறையிலும் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டது போல, காவல்துறையிலும் பணியிட மாறுதல்கள் நடந்தது. ஆனால், கந்திலி ஆண்டி கடவுளின் பெயர் கொண்ட அதிகாரிக்கு மட்டும் பணியிட மாறுதல் வழங்கவில்லையாம். இது எப்படி என்பதுதான் யாருக்கும் புரியவில்லையாம். இதை வைத்து அவர் சாராயத்திலும், கஞ்சாவிலும் முத்துக்குளித்து வருகிறாராம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்