SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிறுவனர் நரேஷ்கோயல் விலகல் ஜெட் ஏர்வேஸ்-ஐ காப்பாற்ற ரூ.1,500 கோடி நிதி உதவி: நிர்வாகத்தை வங்கிகள் ஏற்றன

2019-03-26@ 00:17:32

புதுடெல்லி: கடனில் மூழ்கிய ஜெட்ஏர்வேஸ் நிறுவன நிர்வாகத்தை வங்கிகள் ஏற்றுள்ளன. அந்த நிறுவனத்துக்கு வங்கிகள் ரூ.1,500 கோடி நிதி உதவி வழங்குகின்றன. இதை தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் நிர்வாக குழுவில் இருந்து விலகினர். கடந்த 1993ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நரேஷ் கோயல், தனது மனைவி அனிதாவுடன் இணைந்து தொடங்கினார். நாட்டில் 2வது பெரிய விமான சேவை நிறுவனமாக இது இருந்தது. 25 ஆண்டுகளை கடந்த நிலையில், முறையற்ற நிர்வாகம், விமான பராமரிப்பில் கவனம் செலுத்தாதது, எரிபொருள் சிக்கனம் கொண்ட விமானங்களை பயன்படுத்த தவறியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்தது. கடன் சுமை சுமார் ரூ.7,000 கோடியை தாண்டியது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலுவைத்தொகை வழங்காததால் இந்த நிறுவனத்தின் 54 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு இல்லாததால் மேலும் 24 விமானங்களை இயக்க முடியவில்லை.

இதனால் மிக நெருக்கடியான நிலைக்கு ஜெட் ஏர்வேஸ் தள்ளப்பட்டுள்ளது. சம்பள பாக்கி கேட்டு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்தனர். தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசுக்கு இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க வங்கிகளுக்கு நிர்வாகம் கைமாறுகிறது. இதை தொடர்ந்து இதில் 51 சதவீத பங்குகள் வைத்துள்ள நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் நிர்வாக குழுவில் இருந்து விலகினர். பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் நிர்வாகத்தை ஏற்றுள்ளன. நிறுவனத்தை மீட்டெடுக்க ரூ.1,500 கோடி கடன் உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு 2013ம் ஆண்டும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்துக்கு இதேபோன்ற நிதி நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, அபுதாபியை சேர்ந்த எடிகட் விமான நிறுவனம் 24 சதவீத பங்குகளை வாங்கி 60 கோடி டாலர் முதலீடு செய்து உதவியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்