SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரும் அத்துமீறல்...

2019-03-26@ 00:11:15

சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளை ஐந்து வகையாக பிரித்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என  அதற்குப் பெயரும் இட்டனர். வாழும் நிலத்திற்கேற்ற தொழில்களை அமைத்துக் கொண்டனர். ஐவகை நிலங்களில் வாழும் மனிதர்களில் நெய்தல்  நிலத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை அலை போல் நிலையில்லாமல் மாறி விட்டது. கடலும், கடல் சார்ந்த நிலமும் கொண்ட நெய்தல் நிலத்து  மனிதர்கள், உப்புக் காற்றை சுவாசித்து வாழ்வதாலோ என்னவோ, கண்ணீருடன் வாழ்க்கையைத் ெதாடரும் அவலம் இலங்கை கடற்படையால்  ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,076 கிமீ தொலைவிற்கு கடற்கரை உள்ளது. இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களும், 10 லட்சத்திற்கும்  மேற்பட்ட மீனவ மக்களும் வாழ்கின்றனர்.

மீன்பிடி தொழில் மற்றும் மீன் வளர்ப்பு தொழிலில் இந்தியாவில் தமிழகம்  நான்காவது இடத்தில் உள்ளது. 2017-18ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டின்  மொத்த மீன் உற்பத்தி 7.12 லட்சம் டன் என கூறப்படுகிறது. மீன்பிடித்தொழில் மூலம் இந்தியாவில் பெருமளவு வருவாயை ஈட்டித்தரும் தமிழக  மீனவர்கள், உயிரைப் பணயம் வைத்தே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அசுர அலைகளுக்கும், உயிர்பறிக்கும் மீன்களுக்கும் அஞ்சாத அவர்கள்,  இலங்கை கடற்படையின் படகு சத்தத்தை கேட்டாலே பதறுகின்றனர். இதனால், பல ஆண்டுகளாக தமிழக கடற்கரை பரப்பு இயல்பு நிலையில்  இல்லை. எப்போது எது நடக்குமோ என்ற அச்சம் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் மத்தியில் உள்ளது.

இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் பலியாகியுள்ளனர். மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்,  இத்தனை எண்ணிக்கையில் கொல்லப்பட்ட வரலாறு எந்த நாட்டிலும் இல்லை. இத்தனை படுகொலைகள் நடந்த பின்னும், இலங்கை அரசு தனது  போக்கை மாற்றிக் கொள்ளாமலே உள்ளது. எல்லைமீறி மீன்பிடித்தார்கள் என்று இலங்கை கடற்படையால் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக  மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று   ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து  500க்கும் மேற்பட்ட  விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

ஞாயிறன்று அதிகாலை வேளையில் 7 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது பாட்டில், கற்களைக் கொண்டு  தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன்  30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து நாசப்படுத்தியுள்ளனர். இரண்டு விசைப்படகுகளை  பறிமுதல் செய்ததுடன் அந்தப்படகுகளில் இருந்த  11 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இதுபோன்ற  சம்பவங்கள் தமிழக கடற்பகுதியில் தொடர்ந்து நடந்து வந்தாலும், அதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை  எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றன.

கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு உள்ளது. ஆனால், அதனை மீறி இலங்கை கடற்படை  தமிழக மீனவர்களை கைது செய்து வருகிறது. உடனடியாக மத்திய அரசு, இலங்கை அரசை தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு, கைது செய்யப்பட்ட 11  தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கைதான மீனவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

 • 23-04-2019

  23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்