SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகுபாடு கூடாது

2019-03-25@ 01:33:38

தேர்தல் கமிஷன் கண்கொத்தி பாம்பாக வேட்பாளர்கள் கூடவே பயணிக்கிறது. அரசியல் தலைவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் இடப்படும் முட்டுக்கட்டைகள், அவர்கள் சிறிது பிசகினாலும் தேர்தல் விதி மீறல் வழக்கு வந்துவிடுகிறது. பணம், வாகனங்கள், பிரசார நேரம், பிரசார இடம், சாப்பாடு செலவு உள்ளிட்ட செலவீனங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வழக்கிற்கு மேல் வழக்குகள் போடப்படுகின்றன. இவற்றை தாண்டியே வேட்பாளர்களும், தலைவர்களும் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்க வேண்டியதுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாத கால அவகாசம் கூட இல்லை. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழகத்தின் நகர்ப்புற பகுதிகளில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள், தெருமுனைகள், முக்கிய சாலைகள் ஆகியவற்றில் பொதுக்கூட்டம், பேரணி, ஊர்வலம் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் நடத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த ஆட்சேபனை இல்லை.

தேர்தல் திருவிழாவை பொறுத்தவரை ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் பொதுக்கூட்டம் என்பது மாற்றத்திற்கான முக்கிய களம். பொதுக்கூட்டங்களில் தெறிக்கும் கருத்துக்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை சென்று சேர்வது வழக்கம். அதிலும் சாமானிய மக்கள் படும் துயரங்களை பொதுக்கூட்டங்கள் மூலமே எடுத்துச் சொல்ல முடியும். இந்த சமயத்தில் பொதுக்கூட்டத்திற்கு தடை என்ற காவல்துறையின் அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே தேர்தல் பிரசாரத்திற்கு நாட்கள் போதாது என வேட்பாளர்கள் புலம்பி வருகின்றனர். இச்சூழலில் பொதுக்கூட்டத்திற்கு தடை என்பது அவர்களை திண்டாட வைப்பதாகும். எதிர்க்கட்சியினர் கேட்கும் இடத்தையெல்லாம் அது மக்கள் கூடும் இடம் என காவல்துறை பொதுக்கூட்டம் நடத்தவிடாமல் நிராகரிக்கவும் வழியுண்டு. நகருக்கு வெளியே மக்கள் நெரிசல் இல்லாத இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தினால் யார் வருவர்? என  வேட்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் சென்றால், அதுவும் தேர்தல் விதிமுறை மீறல் வழக்கிற்கு வழிவகுக்கும்.

அரசியல் கட்சிகளின் பேரணி மற்றும் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு ஊர்வலம் ஆகியவற்றால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதிலும் நகர்புறங்களின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தே முடங்கி விடுகிறது. ஆனால் பொதுக்கூட்டங்கள் சிறிதளவு மாறுபடுகின்றன. அவை முன்னரே திட்டமிடப்பட்டு, ஓரிடத்தில் நிலையாக நடத்தப்படுகிறது. பொதுக்கூட்டத்தை கணக்கில் கொண்டு போலீசாரே போக்குவரத்தை மாற்றி விடுவதும் உண்டு. கருத்து சுதந்திரத்தை காக்கும் வகையில் பொதுக்கூட்டங்களை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமாவது போலீஸ் அதிகாரிகள் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்பதே வேட்பாளர்களின் விருப்பம். அவ்வாறு தடை அமலாக்கப்பட்டால் அதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடுகள் இருக்கவே கூடாது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்