SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வார்னர் அரை சதம் வீண் கொல்கத்தா த்ரில் வெற்றி

2019-03-25@ 00:23:47

கொல்கத்தா: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ஆந்த்ரே ரஸ்ஸலின் அதிரடியால் கொல்கத்தா அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஐதராபாத் தொடக்க வீரர்களாக வார்னர், பேர்ஸ்டோ களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 118 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். வார்னர் 31 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். பேர்ஸ்டோ 39 ரன் (35 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பியுஷ் சாவ்லா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வார்னர் 85 ரன் (53 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரஸ்ஸல் பந்துவீச்சில் உத்தப்பாவிடம் பிடிபட்டார். அடுத்து வந்த யூசுப் பதான் 1 ரன் மட்டுமே எடுத்து ரஸ்ஸல் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் விஜய் ஷங்கர் அதிரடி காட்ட, சன்ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. ஷங்கர் 40 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), மணிஷ் பாண்டே 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் ரஸ்ஸல் 2, சாவ்லா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

கிறிஸ் லின், நிதிஷ் ராணா இருவரும் துரத்தலை தொடங்கினர். லின் 7 ரன்னில் வெளியேற ராணா - உத்தப்பா ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 80 ரன் சேர்த்தது. உத்தப்பா 35 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 2 ரன்னில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த ராணா 68 ரன் எடுத்து (47 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ரஷித் கான் சுழலில் ஆட்டமிழந்தார். கடைசி 3 ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 53 ரன் தேவைப்பட்டதால், சன்ரைசர்ஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், 18வது மற்றும் 19வது ஓவரை எதிர்கொண்ட ஆந்த்ரே ரஸ்ஸல் பவுண்டரியும் சிக்சர்களுமாகப் பறக்கவிட, கொல்கத்தா ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இரண்டே ஓவரில் 40 ரன் கிடைக்க, கடைசி ஓவரில் 13 ரன் மட்டுமே தேவைப்பட்டது. ஷாகிப் ஹசன் வீசிய அந்த ஓவரில் ஷுப்மான் கில் தன் பங்குக்கு 2 இமாலய சிக்சர்களை தூக்கி மிரட்டினார். கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணி கடைசி 5 ஓவரில் மட்டும் 70 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
 ரஸ்ஸல் 49 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஷுப்மான் கில் 18 ரன்னுடன் (10 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரஸ்ஸல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கொல்கத்தா அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

கடைசி 3 ஓவரில் இதுவே அதிகபட்சம்...


* ஐபிஎல் வரலாற்றில் சேஸ் செய்த அணி கடைசி 3 ஓவரில் 53 ரன் எடுத்து வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
* சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்து 180+ ஸ்கோர் அடித்த 14 போட்டியில், 3வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது.
* கொல்கத்தா அணி 15.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்திருந்த நிலையில், ஸ்டேடியத்தில் இருந்த மின் விளக்குகள் திடீரென அணைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-07-2019

  23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்