SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விசாரணை தேவை

2019-03-24@ 06:18:10

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பெற்ற வெற்றி செல்லாது என்று தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏன் செல்லாது என்ற காரணம்தான் ஜனநாயகத்தில் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அவரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்தார். அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டிருந்த ஏ,பி படிவங்களில் அதிமுக கட்சியின் அங்கீகார கடிதத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.  

வேட்பாளர் மனுத் தாக்கல் செய்தபோது, ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனவே போலியான கைரேகையுடன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் செய்து தேர்தலில் போட்டியிட்டதால் அதிமுக வேட்பாளரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கில், இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏ,பி படிவங்களில் கைரேகை வைத்தது செல்லாது என கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது தவறு என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கைரேகை வைத்தது ஜெயலலிதா அல்ல, அது போலி கைரேகை, சுயநினைவு இல்லாத ஒருவர் எப்படி கைரேகை வைப்பார்? என்ற கேள்வி எல்லாம் எழுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் கைரேகையை இப்படி பயன்படுத்த அதிகாரம் படைத்தது யார் என்ற கேள்வி எழுகிறது. எனவே, இது குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் சட்டவிதிகளுக்கு முரணாக வேட்புமனுவை ஏற்ற அதிகாரி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதியில் உடனடியாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தேர்தல் அதிகாரியும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக, தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் 18 தொகுதி இடைத்தேர்தலுடன் இதற்கும் தேர்தல் நடத்த ஒப்புதல் பெற்று அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்