SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைரேகை உண்மையானது அல்ல என்ற தீர்ப்பின் மூலம் அப்பல்லோவில் ஜெ.வின் உடலை வைத்து நாடகம் ஆடியது அம்பலம்

2019-03-23@ 05:18:14

தர்மபுரி: ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானது அல்ல என்ற கோர்ட் தீர்ப்பின் மூலம் அப்பல்லோவில் ஜெயலலிதாவின் உடலை வைத்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது என்று தர்மபுரியில் மு க ஸ்டாலின் பேசினார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணியம் எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், அரூர் வேட்பாளர் மணி, பாப்பிரெட்டிப்பட்டி கிருஷ்ணகுமார் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இது பிரசார பொதுக்கூட்டமா, மாநாடா என வியக்கும் அளவுக்கு எழுச்சியுடன் நீங்கள் திரண்டு வந்துள்ளீர்கள். நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில், 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், ஆட்சி காணாமல் போய்விடும் என்பதால், 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 18 தொகுதிகளின் முடிவுகளும், கண்டிப்பாக இந்த ஆட்சியை அகற்றும். நாடாளுமன்ற தேர்தலில்,திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளோம். அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட முழுமையான குடிநீர் வழங்கப்படும். மேகதாது அணை கட்டும் திட்டம் தடுத்து நிறுத்தப்படும் என்று வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். எனவே,நீங்கள் எங்களுக்கு வாய்ப்பளித்து 6வது முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சியை உருவாக்கித் தர வேண்டும்.

அதிமுகவில் உள்ள தம்பிதுரை உள்பட பலர், பாஜவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்றனர். ஆனால், தங்களுடன் கூட்டணி வைத்தே ஆகவேண்டும் என்று பாஜ மிரட்டி, கூட்டணி வைத்துள்ளனர். இன்னெரு பக்கம் சின்னய்யா, பெரியய்யா கூட்டணி வைத்துள்ளனர். அவர்கள் நமது தேர்தல் அறிக்கையை பார்த்து 90 சதவீதம் காமெடி என்கிறார்கள். அதே நேரத்தில், தாங்கள் அறிவித்த திட்டத்தை காப்பியடித்து விட்டதாகவும் கூறுகிறார்கள். அப்படியானால் உங்கள் தேர்தல் அறிக்கை 90 சதவீதம் காமெடியா?. பிரதமர் மோடியையும், எடப்பாடியையும் நம்மை விட கேவலமாகவும், அசிங்கமாகவும், கொச்சைப்படுத்தியும் பேசியவர்கள் இவர்கள். பெரியய்யா அதிமுகவின் கதை என்ற ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார். அதில் ஜெயலலிதா, சசிகலா, ஓபிஎஸ். இபிஎஸ் என்று எல்லோரை பற்றியும், ஆற்று  மணல் ஊழல், தாதுமணல் ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் ஊழல், பருப்பு மற்றும் முட்டையில் ஊழல் என்று 70 லட்சம் கோடி ஊழல் நடந்ததாகவும், இதில் தாது மணலில் மட்டும் ₹50 லட்சம் கோடி ஊழல் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு மிகுந்த அரசாங்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கவர்னரிடம் மனு கொடுத்தவர் சின்னய்யா. ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவர்கள் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை டயர் நக்கிகள் என்று சொன்ன சின்னையா, அவர்களுடன் கூட்டணி சேர்ந்தது பற்றி, இதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை.

இன்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து ஒரு தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில் தேர்தல் சின்னம் ஒதுக்குவதற்காக,பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டதால், வேட்பாளர் வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அப்பல்லோவில் இறந்து போன ஜெயலலிதாவின் உடலை மட்டும் வைத்துக்கொண்டு,ஒரு நாடகம் நடத்தி இருப்பது அம்பலமாகியுள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால்,மக்களுக்காக நலத்திட்டங்களை செயல்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டிப்போம். அதிமுக தொண்டர்களுக்காகவும் சொல்கிறேன்.இதுதான் ஸ்டாலினின் முதல் வேலையாக இருக்கும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்