SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும்: சேலம் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

2019-03-23@ 04:13:27

சேலம்: தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்றதும் சென்னை- சேலம் 8 வழிச் சாலை திட்டம் ரத்து ெசய்யப்படும்’’ என்று சேலத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.  தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று காலை நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து பேசியதாவது: திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கி, 3-வது நாளில் சேலத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு மக்கள் திரண்டிருப்பதை பார்த்தால், நாடும் நமதே.. 40ம் நமதே.. என்ற வெற்றி தெளிவாக தெரிகிறது. நம் மீது மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையை இந்த கூட்டம் எடுத்துக்காட்டுகிறது. அதேபோல், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. மீதும், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுக மீதும் மக்கள் வெறுப்பை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

சேலம் கோட்டை மைதானம் நிரம்பியிருக்கும் நிலையில், சென்னை கோட்டையில் தி.மு.க. ஆட்சி அமைக்க உதயசூரியன் உதயமாகி இருக்கிறது. எனவே, சேலத்தில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள். கொடநாட்டில் கொள்ளை, கொலை, குட்கா ஊழல், தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொலை, பொள்ளாச்சியில் பாலியல் கொடூரம், தெர்மாகோல் புகழ், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது என இப்படி சொல்லிக்கொண்டு செல்லலாம். ஜெயலலிதா மறைவுக்குபின், கொடநாட்டில் இருந்த ₹2000 கோடி பணம், ஓபிஎஸ், இபிஎஸ், அமைச்சர்கள் செய்த ஊழல் உள்ளிட்ட தவறுகள் குறித்த ஆதாரங்கள் ஆகியவற்றை 11 பேர் கொண்ட கேரள கூலிப்படை மூலம் கொள்ளையடித்து இருக்கிறார்கள். இதை அவ்வழக்கில் கைதான சயன் என்பவரே தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து, தண்டிக்கும் வகையில் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதுதான் எங்களது முதல்வேலையாக இருக்கும். சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி கொடுக்கிறேன்.

எடப்பாடி மட்டுமின்றி ஓபிஎஸ் மீது சொத்துகுவிப்பு வழக்கு, அமைச்சர் வேலுமணி மீது ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கு, தங்கமணி மீது நிலக்கரி ஊழல் வழக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் மற்றும்  முட்டை ஊழல், மின்விளக்கு ஊழல், கமிஷன் இல்லாத துறையே இல்லை என்று கிரிமினல் கேபினட் செயல்படுகிறது. கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் என்று இருக்கும் இந்த ஆட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்றால், அதன் தலைவராக இருக்கும் டிஜிபி மீது குட்கா ஊழல் இருக்கிறது. கவர்னர் மீதும் புகார் உள்ளது. பிரதமரிடம் செல்லலாம் என்றால் அவர் மீது ரபேல் ஊழல் சந்தி சிரிக்கிறது. அதனால் மக்களிடம் நேரடியாக புகார் தருகிறோம். நீங்கள் பரிசீலனை செய்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யுங்கள்.

பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மக்களை ஏமாற்றுகிறார்கள். தற்போது அவர்களுடன் டாக்டர் ராமதாசும் சேர்ந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாக திமுகவைவிட மிக மோசமாக அதிமுக அரசை திட்டித்தீர்த்தவர் ராமதாஸ். தற்போது அங்கு அவருக்கு சீட்டு மட்டுமா கிடைத்திருக்கிறது. கேட்டதை விட அதிமாகவே கிடைத்திருக்கும். கடவுள் இல்லை என்று கூறும் முதல்வர் உண்டு. கடவுள் உண்டு என்று கூறும் முதல்வர் உண்டு. ஆனால் நான் தான் கடவுள் என்று எடப்பாடி கூறுகிறார். அந்த எடப்பாடிக்கு மணி அடிக்க ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் என 2 பூசாரிகள் வந்துள்ளனர். ஆனால் எங்களது கூட்டணி தேர்தலுக்காக அமைந்தது அல்ல. இது கொள்கை கூட்டணி. திமுக தேர்தல் அறிக்கையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என கூறியிருக்கிறோம். தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்றதும் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தி கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்