SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தையல் கூலி தராமல் ஏமாற்றியவருக்கு அதிமுகவில் சீட்டு கொடுத்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-03-21@ 03:23:31


‘‘என்னப்பா... பெரும்பாலான கட்சிகள் சார்புல வேட்பாளர்களை அறிவிச்சுட்டாங்க... சுவாரஸ்யமான வேட்பாளர் யாராவது இந்த பட்டியலில் இருக்காங்களா...’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘அதை ஏன்பா கேக்குறே... போயும், போயும் டெய்லருக்கு கூலி தராம ஏமாற்றினவருக்கு அதிமுகவுல சீட் கொடுத்திருக்காங்கப்பா... அதாவது, மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல்ல அதிமுக சார்பில் நாகராஜை வேட்பாளராக அறிவிச்சுருக்காங்க... எப்போதுமே மானாமதுரை சட்டமன்ற தேர்தல்ல வேட்பாளர் தேர்வுல பிரச்னை காலங்காலமாக நடந்துக்கிட்டிருக்கு... ஏற்கனவே 2 முறை எம்எல்ஏவாக இருந்த குணசேகரனுக்கு, கடந்த முறை சீட் கிடைக்கவிடாமல் செய்ததற்கு மானாமதுரை ஊராட்சி ஒன்றிய சேர்மனாக இருந்த மாரிமுத்துதான் காரணமுன்னு குணசேகரன் தரப்பு குமுறிக்கிட்டு இருக்கு... இந்த முறை மாரிமுத்து தனக்கு சீட் கிடைக்கும் என்று ரொம்பவே நம்பியிருந்தாராம்...  ஆனால் பழிக்குப்பழியாக மாரிமுத்துவுக்கு சீட் கிடைக்காமல் செஞ்சதுல குணசேகரனுக்கு முக்கிய பங்கு இருக்காம்... மேலும், தனது தீவிர ஆதரவாளரான இளையான்குடியை சேர்ந்த நாகராஜூக்கு ஒன்றிய செயலாளர் என்ற முறையில் சீட் வாங்கி கொடுத்துள்ளராம்....’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அந்த தையல் கூலி பிரச்னை...’’
‘‘வருது.. வருது..’’
‘‘இப்போ சீட்டு கொடுத்துள்ள நாகராஜ்... ஒரு தையற்கடையில் 8 சட்டைகளை தைக்க கொடுத்து விட்டு கூலி கொடுக்காமல், பல மாசங்களை இழுத்தடிச்சாராம், அப்புறம் உள்ளூருக்குள்ள பஞ்சாயத்துப்பேசி கடைசியா பணத்தை வாங்கிக் கொடுத்ததாக அமமுக காரங்க மத்தியில ஒரே டாக்கா இருக்காம்... அதிமுகவுல இவருக்கு போயி சீட்டு கொடுத்திருக்காங்களேன்னு இப்போ இந்த பேச்சு தொகுதி முழுக்க பரவிப்போச்சாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எதிரும்புதிருமான வேட்பாளர்கள் ஒரே நாளில் களமிறங்கினதால நெல்லையில் பரபரப்பா இருந்ததாமே..’’
 ‘‘ஆமா... நெல்லை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், அமமுக வேட்பாளரும் ஒரே நாளில் களத்தில் குதித்தனர். முதலில் சிலைக்கு மாலை போடும் வைபவம் தான். இதற்காக நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையை சுற்றி அதிமுகவினர் மலர் அலங்காரம் செய்து அருகிலேயே ஜெயலலிதா படத்தையும் வைத்து மாலை போட்டிருந்தனர். அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் முதலாவதாக வந்து கட்சியினர் புடை சூழ மாலை அணிவித்து சென்று விட்டார். அதன் பிறகு அமமுக வேட்பாளர் வந்த போது கையிலேயே ஒரு ஜெயலலிதா படத்தை கொண்டு வந்து அதற்கு மட்டும் மாலை போட்டார். அதிமுகவினர் வைத்த ஜெயலலிதா படத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை. அதிமுக திறந்த எம்ஜிஆர் சிலைக்கு மட்டும் மாலை போடுவாங்களாம், அதிமுக காரங்க வைத்த ஜெயலலிதா படத்திற்கு மாலை போட மாட்டாங்களா. எக்கு கோட்டை இப்படி ஆயிடுச்சே என இலை கட்சியின் நிலைமையை பார்த்து ஆதங்கப்படுகின்றனர் தொண்டர்கள்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அனல் பறக்கும் நிலையில், சத்தியமூர்த்திபவனில் கட்சிக்காரர்களையே காணோமாமே...’’
 ‘‘எப்படி இருப்பார்கள்.. எல்லோரும் சீட்டு கேட்டு டெல்லிக்கு பறந்துட்டாங்க.. வேட்பாளர்களை தேர்வு செய்து தான் தொகுதிகளை காங்கிரஸ் தலைமை கேட்டதாம்.. ஆனால் இப்போ அப்படியே நிலமை தலைகீழா மாறிடுச்சாம். ஏற்கனவே தேர்வு செய்த பட்டியலை மேலிடம் அப்படியே மாற்ற முடிவு செய்தது தான் அதற்கு காரணமாம். காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதின்னு அடிச்சி சொல்லக்கூடிய கன்னியாகுமரிக்கு இப்போ கடும் போட்டி ஏற்பட்டிருக்காம். 50க்கும் மேற்பட்டோர் கடுமையா முட்டி மோதுவதால் யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கட்சி தலைமையே திணறுதாம்.. அதேபோன்று தான் திருவள்ளூர் தனித் தொகுதி நிலமையும் இருக்காம். நாளுக்கு நாள் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருவதால் வேட்பாளர் தேர்வை உடனே முடிவுக்கு கொண்டு வந்தாக வேண்டும் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் ராகுல் காந்திக்கிட்ட சொல்லியிருக்காராம்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘ஓட்டுக்காக பொது குழாய்களில் ஓட்டை போடும் ஆளுங்கட்சி நிர்வாகிகள்
 ‘‘ஓட்டுக்காக  பணம், பரிசு பொருட்களை வழங்குவது எல்லாம் பழைய பாணி. வேலூர்  மாநகராட்சியில் மக்களவை தேர்தலுக்காக வாக்காளர்களை கவருவதற்கு ஆளும்  அதிமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகள் எல்லாவற்றையும் கடந்து புதிய  திட்டத்தை வகுத்துள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள  பொதுக்குழாய்களை படிப்படியாக அகற்ற வேண்டும். வீடுகளுக்கு அனுமதியில்லாத  குடிநீர் இணைப்புகளை அகற்றிக் கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட எச்சரிக்கைகளை கடந்த சில மாதங்களுக்கு  முன்பு மாநகராட்சி அதிகாரிகள் விடுத்திருந்தனர். ஆனால்,  மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களை கவருவதற்கு அதிமுகவினர் மற்றும்  கூட்டணி கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களிடம் ‘உங்களுக்கு  தேவையான குடிநீர் இணைப்பை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். யாராவது  அதிகாரிகள் கேட்டால், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று கூறி  வாக்காளர்களிடம் தாஜா செய்ய தொடங்கி விட்டனர். இதை நம்பிய  சிலர் வீடுகளுக்கு அனுமதியில்லாத குடிநீர் இணைப்பை எடுக்க தொடங்கிவிட்டனர்.  தற்போது மாநகராட்சி அதிகாரிகள் தேர்தல் பணியில் பிசியாக இருப்பதால், இதை  கண்டுகொள்ளவில்லை. ஆனால், எப்போது வேண்டுமானாலும் குடிநீர் இணைப்பை  அகற்றுவதோடு, அபராதமும் விதிக்கப்படுவது நிச்சயம் என்று அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்..’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘தேர்தலுக்காக எந்த லெவலுக்கும் போவார்கள் போல...’’ என சிரித்துக்கொண்டார் பீட்டர் மாமா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்