SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் கண்டித்து பொள்ளாச்சியில் கடையடைப்பு போராட்டம்

2019-03-20@ 00:13:40

* இயல்பு வாழ்க்கை முடங்கியது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை ஐகோர்ட் நீதிபதி கண்காணிப்பில்  நடத்தக்கோரி பொள்ளாச்சியில் நேற்று நடந்த முழு கடையடைப்பு போராட்டத்தால்  மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பொள்ளாச்சி பாலியல்  பலாத்கார வழக்கை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரிக்க  வேண்டும், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது  செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சியில் முழு கடையடைப்பு  போராட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அழைப்பு  விடுத்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர்,  பொதுநல அமைப்பினர், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பில் இருந்தும்  ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் மாலை  6 மணி வரை நடந்த இப்போராட்டத்தில் பொள்ளாச்சி நகரில் உள்ள அனைத்து  கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள  கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. இதேபோல பொள்ளாச்சியில் உள்ள காந்தி தினசரி காய்கனி மார்க்கெட், மீன்  மார்க்கெட்  உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளும் திறக்கப்படவில்லை.  பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டு வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதுதவிர  ஆட்டோ ஓட்டுநர் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு  சங்கங்களும் ஆதரவு தெரிவித்ததால் கடையடைப்பு போராட்டம் முழு வெற்றி  பெற்றதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். போராட்டம்  காரணமாக பொள்ளாச்சியில் ரூ.10 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

 பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாததால் பள்ளி குழந்தைகளை பெற்றோர்களே அழைத்து  செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பஸ்கள் வழக்கம் போல ஓடிய போதிலும் பயணிகள்  கூட்டம் இன்றி காணப்பட்டது. மேலும் பால், மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து  கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொள்ளாச்சி மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து  செய்யப்பட்டன. மாதர் சங்கம் சிபிசிஐடியில் மனு: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்ட செயலாளர்  ராதிகா மற்றும்  மாதர் சங்க நிர்வாகிகள் கோவை சி.பி.சிஐ.டி எஸ்.பி  அலுவலகத்தில் நேற்று  அளித்த மனுவில்,   சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டும் யார்  விசாரிக்கிறார்கள் என்ற  குழப்பம் நீடிக்கிறது. மூடி மறைக்கும்  நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட  பெண்கள் பயந்து போயிருக்கிறார்கள்.  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு  தரவேண்டும். இழப்பீடு வழங்கவேண்டும் என   தெரிவித்துள்ளனர். முன்ஜாமீன் தள்ளுபடியானவரை கைது செய்ய தயங்கும் போலீஸ்: பொள்ளாச்சி  விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் செய்த கல்லூரி மாணவியின் சகோதரரை தாக்கியதாக பார் நாகராஜன், செந்தில் பாபு,  வசந்தகுமார், மணிவண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைதாகி ஜாமீனில் விடப்பட்டனர். இவர்களில் மணிவண்ணன் முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், ஆளும் கட்சி ஆதரவாளர் என்பதால் அவரை போலீசார் கைது  செய்ய தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

4 பேருக்கு காவல் நீட்டிப்பு
பொள்ளாச்சியில்  பாலியல் வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு(27), சபரிராஜன்(25)  சதீஸ்(28), வசந்தகுமார்(24) ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.  இதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில்,  நேற்றுடன் இவர்களது நீதிமன்ற காவல் முடிந்ததால் மீண்டும், நேற்று மாலையில் வீடியோ  கான்பரன்ஸ் மூலம் சிஜேஎம் கோர்ட்டில் நீதிபதி நாகராஜ் முன்  ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 4 பேரையும் ஏப்ரல் 2ம் தேதி  வரை மேலும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். திருநாவுக்கரசை மட்டும் காவலில் எடுத்து விசாரித்த சிபிசிஐடி போலீசார், அவரது கூட்டாளிகள் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கருக்கலைப்பு?
கடந்த ஓராண்டுக்கு  முன்பு மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரை  இக்கும்பல் பாலியல்  பலாத்காரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில்   கர்ப்பமடைந்த அந்த பெண்ணை பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனைக்கு  அழைத்து சென்று கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.  இதற்கு தனியார்  மருத்துவமனை நர்ஸ் ஒருவர் உதவி செய்துள்ளார். இந்த நர்ஸ்  கைது செய்யப்பட்ட 4  பேரில் ஒருவரின் உறவினர் என கூறப்படுகிறது. அந்த நர்ஸ்  யார்,  இதுபோல வேறு யாருக்கும் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதா என சிபிசிஐடி போலீசார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

 • 23-04-2019

  23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்