SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்மீகத்தையும் அரசியலையும் கலக்கும் அதிகாரிகளால் அர்ச்சகர்கள் குழப்பத்தில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-03-20@ 00:13:30

‘‘என்ன விக்கி தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது போல...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அரசியலை விடு... ஆன்மிகத்தை பற்றி ெசால்கிறேன் கேளு... வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் தான் தமிழக சின்னமாகும். அந்தக் கோயிலிலேயே ேதர்தல் அதிகாரிகள் புகுந்து பக்தர்கள் வரைந்த ‘தாமரை' கோலம் தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கூறி அழித்தனர். இந்த நடவடிக்கையை ஜீயர்கள் கண்டித்ததுடன் போர்க்கொடியும் தூக்கினர். பொதுவாக வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் கூடாது என்பது தேர்தல் கமிஷன் விதியாகும். அங்கிருந்த கோலம் தேர்தல் விதிமுறைகளில் அடங்குமா என்ற சர்ச்சையும் எழுந்தது. இதையடுத்து அழித்த கோலத்திற்கு பதில் தாமரை இல்லாமல் வேறு கோலங்கள் வரையப்பட்டது. இதுபோல்  நெல்லையில் வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்த பிள்ளையார் கோயிலில் அந்த ஊரின் பெண் கலெக்டர் சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்த பூஜையில் பிரதானம் அனைத்தும் தாமரை மலர்கள் தான். அடடா தாமரை பாஜவின் சின்னமாச்சே என்ற சர்ச்சையை கிளப்புகின்றனர் அரசியல் கட்சியினர். வில்லிபுத்தூரில் நடந்தது தேர்தல் விதிமுறை மீறல் என்றால், நெல்லையில் நடந்த தாமரை பூஜை தேர்தல் விதிமுறை மீறலில் வராதா? இதை எந்த லிஸ்டில் சேர்ப்பது? மாவட்ட தேர்தல் அதிகாரியே இந்த சர்ச்சையில் சிக்கலாமா? என்ற குழம்புகின்றனர் அரசியல் கட்சியினர்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அப்டினு பார்த்தால் லட்சுமி, சரஸ்வதி போன்றவர்கள் தாமரையில் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்... ஏதோ சில தேர்தல் அதிகாரிகள் செய்யும் தவறுகளால் கடவுள்களும் தேர்தல் விதிமுறையில் சிக்குகின்றனர்... ஈரோடு மேட்டர் என்னாச்சு...’’ என்றார் பீட்டர் மாமா.
 
‘‘ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்தவர். இவரது தம்பி ‘குட்சாமி’. இவர், வீரப்பன்சத்திரம் பகுதி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது, மற்ற கோஷ்டியினர் இவருக்கு எதிராக செயல்பட்டனர். ஆனால், எம்.எல்.ஏ. தலையிட்டு அதிகாரிகளை சரிகட்டி தனது தம்பிக்கு சங்க தலைவர் பதவியை வாங்கிக்கொடுத்தார். இந்த சங்கத்தின் தலைவராக உள்ள தனது தம்பிக்கு தமிழகத்திலேயே ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு துணிநூல் பதனிடும் ஆலைக்கு தலைவராக எம்எல்ஏ முடிவு செய்திருந்தார். ஆனால், இதற்கு மற்ற கோஷ்டியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும்,் தனது அண்ணன் எப்படியும் கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலைக்கு தலைவராக தன்னை ஆக்கிவிடுவார் என கனவு கண்டு வந்தார். ஆனால், எதிர்ப்புகள் வலுத்த நிலையில் வேறு யாருக்காவது இந்த பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். இதற்கான தேர்வு நடந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் எம்.எல்.ஏ. பிரச்னையை தவிர்க்க தானே இந்த கூட்டுறவு சங்கத்திற்கு தலைவராக பொறுப்பேற்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்துவிட்டார். இதனால், அதிமுக கோஷ்டியை சேர்ந்தவர் அதிர்ச்சி அடைந்தார்களோ இல்லையோ பதவி கிடைக்கும் என கனவு கண்ட எம்.எல்.ஏ.வின் ‘குட்சாமி’ கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார். ஏற்கனவே ஆளும்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தனது மகன், மனைவி, மருமகள் என்று குடும்பத்திற்கே பல்வேறு கூட்டுறவு சங்கத்தில் பதவி வாங்கி கொடுத்த நிலையில் கட்சிக்காரருக்கு கிடைக்க இருந்த வாய்ப்பையும் தட்டிப்பறித்துள்ளார். இச்செயலை உள்ளூர் அமைச்சர்களும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இதன்மூலம், ஈரோடு மாவட்ட அதிமுகவில் கடும் புகைச்சல் கிளம்பியுள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இதை தடுக்க கடுமையான விதிமுறைகளை கொண்டு வருவதே சிறந்தது...’’ என்ற பீட்டர் மாமா,  மின்வாரிய மோசடி குறித்து சொல்லுங்களேன்...’’ என்று கேட்டார். ‘‘பேரணாம்பட்டு நகர மின்வாரிய இளநிலை பொறியாளராகவும் உதவி மின்பொறியாளராகவும் பொறுப்பு வகித்து வருபவர் ராஜமான பெயர் கொண்டவர். இவர் மாவட்ட அமைச்சரான வீரமானவரின் சிபாரிசில் பதவிக்கு வந்தவர். மேலும் இவரது உறவினர் பேரணாம்பட்டு ஒன்றிய அதிமுக செயலாளராக இருப்பதால் மின்வாரிய இளநிலை பொறியாளர் தன்னுடைய அரசியல் பலத்தை காட்டி அதிகாரத்தை தன் இஷ்டம் போல் பயன்படுத்துவதால் நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர் அதிகாரியான செயற்பொறியாளரும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்களாம். இளநிலை பொறியாளர் காலையில் அலுவலகத்திற்கு வந்த சில மணி நேரத்திலேயே தனக்கு விசுவாசமான ஊழியர்களை வைத்து நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் வரை வசூல் செய்து விடுவாராம். இதற்காக தனது அலுவலக பணியையே தனது வீட்டிற்கு மாற்றி விட்டாராம். அவரது அறையில் உள்ளூர் ஆட்களை வைத்து வசூலில் ஈடுபடுவாராம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகரின் அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவர் வீட்டின் மின்மீட்டர் எரிந்து விட்டதால் அவரிடமிருந்து அதற்குண்டான தொகையை பெற்றுக் கொண்டு தனக்கும் செயற்பொறியாளருக்கும் பங்குபிரித்துக் கொண்டதுடன், மீண்டும் அந்த நபரிடம் மீண்டும் மின்கட்டண தொகையில் மீட்டர் கட்டணத்தை செலுத்தும்படி கேட்டாராம். இதனால் பாதிக்கப்பட்ட அவர் அதிகாரிகளிடம் முறையிட்டது தெரிந்ததும், உள்ளூர் ஆட்களை வைத்து பிரச்னையை சரி செய்து விட்டாராம். அதுமட்டுமின்றி தினக்கூலிகளை நியமனம் செய்ததில் பல லட்சங்களை பார்த்து விட்டாராம். கரண்டை தொட்டால்தான் ஷாக்கடிக்கும். திருப்பதி கடவுள் பெயரை கொண்ட இவரை பார்த்தாலே ஷாக்கடிக்குதே என்பதுதான் பேரணாம்பட்டு மின்நுகர்வோர்கள் மத்தியில் டென்ஷனில் இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்