SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு வேலைக்கு வேட்டு

2019-03-19@ 00:26:58

நாட்டில் பற்றியெரியும் பிரச்னையாக இருப்பது வறுமையும், வேலையின்மையும் தான். இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 23.8 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் வேலைக்காக 84 லட்சத்து 64 ஆயிரத்து 136 பேர் வேலைவாய்ப்பகங்களில் பதிந்துவிட்டு  காத்திருக்கின்றனர். இதில் 2.45 லட்சம் பேர் பொறியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படித்த படிப்புக்கேற்ற  வேலை கிடைக்காததால்,  கிடைத்த வேலைக்குச் செல்லும் 18 முதல் 29 வயது வரம்புடைய இளைஞர்கள் தமிழகத்தில்தான் அதிகமாக  இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்காதது தான் வேலையின்மைக்கு முதல் காரணம்.  இந்நிலையில், தமிழக அரசின் அரசாணை ஒன்று, இனி அரசு வேலை  கிடைக்குமா என்ற அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் என்ற அளவில் ஊதியம் தரப்படுகிறது.  இதற்கிடையே சிறப்பு காலமுறை ஊதிய பணியிடங்களை காலமுறை ஊதியமாக மாற்றித்தரக் கோரி துப்புரவுப் பணியாளர்கள், 2014ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையின் முடிவில், காலமுறை ஊதிய பலன்களை பணியாளர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின்படி துப்புரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, பணப் பலன்களை வழங்குவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ்,  ‘‘இனிவரும் காலங்களில் 2012ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி வெளியிடப்பட்ட ஆணையின்படி உருவாக்கப்பட்ட அனைத்து துப்புரவாளர் பணியிடங்களும் நிரப்பப்படாது. அத்துடன்  சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்ட 2,213 துப்புரவுப் பணியாளர்களின் ஓய்வுக்குப் பின் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாது. இனிமேல் துப்புரவுப் பணியிடங்கள் அவுட்சோர்சிங்  மூலமாக மட்டுமே நிரப்பப்படும். இதற்கான ஆணைகள் தனியாக பிறப்பிக்கப்படும்,’’ என்று கூறியுள்ளார். இந்த அரசாணை அறிவிப்பு, கல்வித்துறை மட்டுமின்றி  இனி தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊடுருவுவதற்கான  ஏற்பாடு என்ற அச்சம் அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.   அவுட்சோர்சிங் மூலமே அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் வேலைவாய்ப்பகத்தில் பதிந்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும்? ஏற்கனவே வேலை கிடைக்காத விரக்தியில் குற்றச் சம்பவங்களில் அதிகமாக இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தெரிவிக்கிறது.  தற்போது அரசாணை 56ன் மூலம் அந்த எண்ணிக்கையை மேலும் அதிகமாக்க தமிழக அரசு முயற்சி செய்வது சமூகத்திற்கு ஆபத்து. எனவே, அரசாணை 56ஐ ரத்து செய்யவேண்டும். அத்துடன் அரசு பள்ளிகளில் அவுட் சோர்சிங் முறையில் துப்புரவு பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி துப்புரவு பணியிடங்களை நிரப்ப வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்