SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிதி கொடுப்பதில் கெடுபிடி காட்டும் இலை கட்சி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-03-17@ 00:20:16

‘‘திரும்பவும் திருத்தமா...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘வாக்காளர் பட்டியல் திருத்தம் இல்லப்பா... ஏற்கனவே இலை கட்சி கூட்டணியில முதலில் அதிக தொகுதி கேட்டு பல கட்சிகள் முரண்டுபிடித்தது. அதையும் ஒருவாறு இலை கட்சி தலைமை சரிகட்டியது. இப்போது வேறு ஒரு பிரச்னை தலை தூக்கி இருக்கு...’’ என்று பீடிகை போட்டார் பீட்டர் மாமா.‘‘என்ன...’’‘‘எதிர்க்கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியானதுதான் தாமதம்... உடனே கூட்டணி கட்சிகள் இலை கட்சி தலைமையுடன் தொடர்பு கொண்டு... நாங்கள் முன்பு கேட்ட தொகுதி வேண்டாம்... மாற்றி இப்போது நாங்கள் கேட்கும் புது தொகுதி கொடுங்கள் என்று அடம் பிடிக்கிறாங்களாம்... அதற்கு மற்ற கட்சிகள் எண்ணிக்கையை விட்டு கொடுத்தோம்... இனி தொகுதியை விட்டு தர மாட்டோம்... கொடுத்ததே குறைந்த எண்ணிக்கை இதுல அந்த கட்சிக்காக எங்கள் நிலையை மாற்ற மாட்டோம்னு பிடிவாதம் பிடிக்கிறாங்களாம்... எனவே, இலை கட்சி தலைமை மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கிறதாம்... காரணம் கூட்டணி கட்சிகள் கேட்கின்ற எம்பி தொகுதியில்தான் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளும் வருகிறதாம்... அதனால இலை கட்சி டென்ஷனில் இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஏதோ ஒரு கட்சி நேரடியாக தேர்தல் நிதி கேட்டதற்கு இலை கட்சி தர மறுத்ததாமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘அப்டி இல்லை... நீங்கள் தேர்தலில் போட்டியிடுங்கள்... உங்கள் ஆட்களுக்கு நீங்கள் பணம் கொடுத்து தேர்தல் வேலைகளை பார்க்க சொல்லுங்கள்... இலை கட்சி முழு மனதுடன் உங்களுக்கு வேலை செய்யும் எங்கள்கட்சி நிர்வாகி, தொண்டர்களுக்கு நாங்களே பணம் கொடுத்து உங்களை ஜெயிக்க வைக்கிறோம்னு சொல்லி பணத்துக்கு செக் வைச்சுட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இதனால பாதி பணத்தை ஆட்டை போட்டுட்டு இலை கட்சி தயவால ஜெயிக்கலாம்னு நினைச்சவங்க மனசு நொறுங்கி போச்சாம்... பதிவாளர் அலுவலகம் என்னாச்சு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘வேலூர் மாவட்ட பத்திர பதிவுத்துறையில் ஊழல் தலைவிரித்தாடுதாம்... மார்க்கெட்டில் காய்கறி வாங்கி தர்றவங்களும் புரோக்கராக இருக்காங்க... அப்புறம், ஆனால், பிரதான பத்திரப்பதிவு அலுவலகங்கள் தவிர ஊரகப்பகுதிகளில் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பழைய நடைமுறையே பின்பற்றப்படுகிறதாம். இதனை பயன்படுத்தி முறைகேடும், ஊழலும் தலைவிரித்தாடுகிறதாம். அதற்கேற்ப வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா சார்பதிவாளர் காரில் செல்லும்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழியிலேயே ₹2.26 லட்சத்துடன் பிடிபட்டார்.
இந்த நிலையில் கணியம்பாடி பதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் மூலம் வெளியில் தெரியாத வண்ணம் பணம் வாங்கப்படுகிறதாம். வேலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமீபத்துல ஒரு பார்ட்டியை மிரட்டி பத்திர பதிவு செய்து வைச்சாங்க... அதை மனை விற்பவர் எவ்வளவோ மன்றாடியும் பதிவாளர் காதில் போட்டுக்கொள்ளவே இல்லையாம்... கையில் பெரிய தொைக கிடைச்சதால... மிரட்டி மனை வாங்கியவர் பத்திரப் பதிவை தன் பெயருக்கும் அடுத்த இரண்டு நாளில் தன் மகன் பெயருக்கும் மாற்றிட்டாராம்... இதுல அரசுக்கு மட்டும் 20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு இருக்காம்... தன் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டவர்... அரசு கஜானாவை காலியாக்கிவிட்டாராம்... இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையும் பதிவுத்துறையும் விசாரித்து வருதாம்... ஆன்லைனில் வந்தும் இந்த நிலைமையாம்... புரோக்கர்கள் முன்கூட்டிய பணத்தை பெற்றுக் கொண்டு பத்திரப்பதிவு நடைமுறையை மேற்கொள்கிறார்களாம். பணம் கொடுத்தால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் எதுவும் செய்யலாம் என்ற நிலை...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா மாவட்டத்துல கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டி இருக்காமே...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நெல்லை இலை கட்சியில கோஷ்டி பூசல் தலைதூக்கியுள்ளது. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பதவி பல மாதங்களாக காலியாக இருந்த நிலையில், சமீபத்தில்தான் இந்த பதவிக்கு பிள்ளையார் பெயரைக் கொண்ட ஒருவரை மாவட்ட செயலாளராக நியமித்தனர். அவர் கட்சியில் யார் யார் எல்லாம் பதவியில் இருந்து கொண்டு கட்சிப்பணிகளை சரிவர செய்யாமல் இருக்கிறார்கள் என்ற பட்டியலை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளார். ஒருவர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் மேலும் பலரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட செயலாளரை ஒரு சில முக்கிய நிர்வாகிகள் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சிவபெருமான் பெயரைக் கொண்ட மாநில அமைப்பு செயலாளர் மாவட்ட செயலாளர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார். தான் அம்மா காலத்தில் இருந்தே 2 முறை மாவட்ட செயலாளராக இருந்துள்ளேன். அம்மாவால் மாநில அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டவன். கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பதில்லை என்று புலம்புகிறார். இதே கருத்தை அவைத்தலைவரும் தெரிவிக்கிறார். இதனால் நெல்லை அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த கோஷ்டி பூசலே அதிமுக வேட்பாளர்களை காலி செய்து விடும் என ஆதங்கப்படுகின்றனர் அதிமுக தொண்டர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சி விவிஐபி திடீர்னு கோயம்பேடு கட்சி தலைவரை பார்த்து இருக்காரே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சீட் ஷேரிங்கில் பிரச்னை அதை சரி செய்யவே விவிஐபி போனாராம்... உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு பிரச்னையை குறித்து பேசினாராம்... அவரது பேச்சை கேட்ட கோயம்பேடு தலைவர், தன் மனைவியை பார்த்தாராம்...அவரும் தலையாட்ட இப்போதைக்கு கூட்டணியில் ஒரு பிரச்னை முடிந்து இருக்காம்... அடுத்த பிரச்னை எந்த ரூபத்தில் வெளியாகுமோ என்ற எண்ணத்தில் விவிஐபி கோயம்பேடு தலைவரை சந்தித்து வெளியே வந்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்