SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐ.டி. ஊழியர் டூ மாரத்தான் மங்கை!

2019-03-07@ 14:42:34

நன்றி குங்குமம் தோழி

மகளிர் தின ஸ்பெஷல்


‘பல தடைகளைத் தாண்டி தடகளத்தில் தடம் பதித்தவர் பூர்ணிமா’ என்று கூறுவது உண்மையில்  மிகையில்லை. தன்னுடைய லட்சியப் பயணத்தில் இவர் சந்தித்த சவால்கள் ஏராளம். ஒரு தாயாக, மனைவியாக குடும்பச்சுமை என தடைகள் தாண்டி, இன்று  சென்னையில் நடக்கும் பல மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகள் குவிக்கும் வீராங்கனையாகவும், தனிப் பயிற்சியாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் பூர்ணிமாவை சந்தித்தோம்…காலை 4 மணியிலிருந்து மற்றவர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டு, தானும் பயிற்சி எடுத்துக் கொண்டு, தன் வீட்டையும் கவனித்துக் கொண்டு,  இப்படி நாள் முழுவதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பூர்ணிமா தன் புன்னகை மாறாமல் பேசத் தொடங்கினார்…  

உங்களைப் பற்றி

நான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவள். என் அப்பா ஸ்டேஷ்னரி ஷாப் வைத்து நடத்தி வந்தார். என் தாயார் வீட்டு நிர்வாகி. நானும், என் தம்பியும் பக்கத்தில் உள்ள பள்ளியில் பயின்று வந்தோம். எனக்கு சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் இருந்தது.  ஓட்டம்.. ஓட்டம். ஓட்டம் தான். காலை, மாலை என எல்லா நேரங்களிலும் மைதானத்திலேயே தீவிரமாக பயிற்சி செய்து கொண்டிருப்பேன். ஓடுவது என்றால் எனக்கு தீராத தாகம். ஓட்டப்பயிற்சி மட்டுமல்லாது, உயரம் தாண்டும் போட்டி, நீளம் தாண்டும் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.  

ஓட்டப்பந்தய வீராங்கனையாக உங்கள் வாழ்க்கைப் பயணம்…

7ம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் விளையாட்டு வகுப்பில் நடந்த ஓட்டப் போட்டியில் முதன் முதல் கலந்து கொண்டேன்.  அதில் 3வது பரிசு வென்றேன். அதன்பின்னர் என் திறமையைப் பார்த்து பள்ளியின் விளையாட்டு வீரர்கள் குழுவில் சேர்த்து பயிற்சி அளித்தார்கள்.  8ம் வகுப்பு முதல் தீவிரமாக பயிற்சி எடுத்துக்கொண்டு, ஜூனியர் லெவல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளேன். மாநில அளவில் மதுரையில் நடந்த 800 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் கிடைத்தது உற்சாகமாக இருந்தது.

12ம் வகுப்பு வரையிலுமே, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கிடையே நடந்த போட்டிகள், மாநில அளவில் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் என்று எல்லாவற்றிலும் கலந்து கொண்டு சாம்பியன்ஷிப் வாங்கிவிடுவேன். 200 மீட்டர், 400 மீட்டர், 400 ரிலே, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என எல்லா போட்டிகளிலும் கோல்டு மெடல் வாங்கிவிடுவேன்.  2000வது ஆண்டிற்கான தேசிய அளவிலான 400 மீட்டர் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கிறேன்.  தேசிய அளவில் நடந்த ஜூனியர் நேஷனல் மற்றும் ரூரல் நேஷனல் ஓட்டப்பந்தயத்தில் 2 முறை முதல் பரிசு வென்றிருக்கிறேன்.  எல்லா தடகள போட்டிகளிலும் தமிழ்நாடு சார்பாக நான் கலந்து கொண்டிருக்கிறேன். படிப்படியாக முன்னேறி பதக்கங்கள் வாங்க ஆரம்பித்தேன். மாநில அளவில் கோல்டு மெடல் வாங்குபவர்கள்தான் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்.  

என்னுடைய பர்ஃபார்மன்ஸை பார்த்து, ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா (SAI) அமைப்பு என்னைத் தத்தெடுத்துக் கொண்டார்கள். கல்லூரி படிப்பு வரையிலும் அங்கே பயிற்சி எடுத்துக் கொண்டேன். SAI மூலம் பல போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  அந்த ஆணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அங்கேயே ஹாஸ்டலில் தங்கவைத்து பயிற்சி கொடுப்பார்கள். 40 பேரில், நான் ஒருத்தி மட்டும் தான் பெண். அதுவும் போர்டிங் இல்லாமல், வெளியிலிருந்து பயிற்சி பெற்றுவந்தேன்.  அவர்கள் ஸ்போர்ட்ஸ் ஸ்காலர்ஷிப் வாங்கித் தருவார்கள். ஆனால், அதையெல்லாம் எதிர்பார்த்து ஓடியது கிடையாது. என்னுடைய சொந்த ஆர்வத்திற்காக மட்டுமே போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பிடிப்பேன். என்னுடைய டிகிரி எக்ஸாம் எழுதிய ஒரே மாதத்தில் சென்னையில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது. லீவு நாட்களிலும் கடுமையாக உழைத்ததால் சீக்கிரமே புரொமோஷன் கிடைத்தது. அதன்பின் வேலை, வேலைதான். வேலை கிடைத்தவுடன் எனக்குப்பிடித்த என்னுடைய ஓட்டத்தை  நிறுத்தி விட்டேன்.  

ஓட்ட வீராங்கனையாக நீங்கள் மீண்டு வந்தது எப்போது?

எல்லா பெண்களைப் போல எனக்கும் திருமணம் நிச்சயமாச்சு. ஆண் குழந்தை பிறந்து 2 வருடம் வரை ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டீஸ்  எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்தாயிற்று. ஒன்றரை வயது இருக்கும் போது குழந்தைகளுக்கான ஓட்டப்போட்டியில் என் மகன் பெயரை பதிவு செய்து, அதில் கலந்து கொள்ள வைப்பதற்காக நானும் உடன் சென்றிருந்தேன். அந்நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்தது. அங்கு போன பின்புதான், சென்னையில் பெண்களுக்கான மாரத்தான் போட்டிகள் நடப்பதும், பெண்கள் தாயான பின்பும் கலந்து கொள்ள முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன்.  அந்த நாள் எனக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  நம்மால் மீண்டும் ஓட முடியும் என்ற நம்பிக்கை வந்தது. 2014ம் ஆண்டு முதல் மீண்டும் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். வேளச்சேரியில் ஓட்டத்திற்கான குழு இருப்பதை அறிந்து அதில் சேர்ந்தேன்.

பயிற்சியாளராக மாறிய தருணம்…

2015ல் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்த நான், 2018ல் ஓட்டத்திற்கான தனிப்பயிற்சியாளர் சான்றிதழ் கோர்ஸை முடித்தேன். இந்த பயிற்சியை முடிக்க என் கணவர்  எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அவருடைய ஃபுல் சப்போர்ட்டால்தான் நான் மீண்டும் என்னுடைய லட்சிய பயணத்தை தொடர முடிந்தது. அதன்பின் ஒரு முழு நேர பயிற்சியாளராகவே மாறிவிட்டேன். என்னிடம் பயிற்சிக்கு வருபவர்கள் ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் பெண்கள், ஆண்கள் மற்றும் நாற்பதுகளில் இருக்கும் வீட்டை நிர்வகிக்கும் பெண்கள் என எல்லா வயதினரும் இருக்கிறார்கள்.   வேலைக்குச்செல்லும் பெண்களுக்கு, குறைந்த நேரமே  உடற்பயிற்சிக்காக செலவழிக்க முடியும் என்பதால், அதற்கேற்றவாறு எளிமையான பயிற்சிகளை கற்றுத் தருகிறேன்.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான மிதமான பயிற்சிகள். மூட்டுவலி உள்ள பெண்களுக்கு மூட்டு இணைப்புகளின் நெகிழ்வு ஆகியவற்றுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கிறேன். பிரசவத்திற்குப்பின் பெண்களுக்கு ஏற்படும் உடல்பருமன், வயிற்று தசைகளில் உண்டாகும் தளர்ச்சி ஆகியவற்றுக்காக தனிப்பட்ட பயிற்சியும் அளிக்கிறேன். உடல் வலிமையுடன் இருப்பவர்களுக்கு ஆற்றல் வாய்ந்த பயிற்சிகள், உடல் தசைகள் தளர்ச்சி அடைந்தவர்களுக்கு தசை இறுக்க பயிற்சிகள் என ஒவ்வொருவரின் உடல்நிலை மற்றும் தேவைக்கேற்ற பொதுவான பயிற்சிகளை கொடுத்து வருகிறேன். மாரத்தான் ஓட்டக் குழுவினர் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கான ஸ்ட்ரென்த் ட்ரெயினிங்கும் இங்குண்டு. இதெல்லாம் என்னுடைய காலை நேர வேலை. மதியத்தில் மான்டிசரி பள்ளி ஒன்றில், குழந்தைகளுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.ஓட்டப்பந்தயம்  இல்லாது,  ட்ரெக் கிங்கிலும் எனக்கு ஆர்வம் உண்டு. அதற்கான பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை இமயமலைக்கு ட்ரெக்கிங் போயிருக்கிறேன்.  நானும், என் கணவரும்  வருடத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு  மலையைத் தேர்ந்தெடுத்து ட்ரெக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

உங்களுடைய ஒரு நாளைய பொழுது…


காலை 4 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணிவரை என்னுடைய புரொஃபஷனல் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு விடுவேன். மதியம் 3 மணிக்கு மேல் என் மகன் பள்ளியிலிருந்து வந்தவுடன் அவனுடனான என்னுடைய நேரத்தை ஒதுக்கிவிடுவேன். இதற்கு நடுவில் நான் பயிற்சி செய்வது,  மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்வது என என்னுடைய தனிப்பட்ட பயிற்சிகள், வேலை மற்றும் குடும்பம் என்று சமநிலையில் பராமரிக்கிறேன்.

ஒரு தடகள வீராங்கனையாக பெண்களுக்கு கூற விரும்புவது…


‘நமக்குதான் கல்யாணம் ஆகிவிட்டதே; எல்லாம் முடிந்து+விட்டது என்று நினைக்கக்கூடாது.  எனக்கு எப்படி ஓட்டத்தில் ஆர்வமோ, அதுபோல ஒவ்வொரு பெண்ணுக்கும் மனதில் குட்டி குட்டி ஆசைகள், லட்சியங்கள் இருக்கும்.  குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு அதேநேரத்தில் நம் லட்சியங்களையும் விட்டுக்கொடுக்காமல்,  நமக்கான தேடுதல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாக எனக்கு நேரம் இல்லை என்று சாக்கு சொல்லாமல் நமக்கான நேரத்தை நாம் எடுத்துக் கொண்டு,  எதில் விருப்பமோ அதை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். நாம் நினைத்தால் முடியாதது இல்லை” என்று ஊக்கமளிக்கிறார் நம் சென்னையின் மாரத்தான் மங்கை பூர்ணிமா.

-மகாலட்சுமி


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்