SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொன்னுகொண்டான் ஆற்றில் 15 ஆண்டுகளாக இடிந்து கிடக்கும் இணைப்பு பாலம்

2019-02-23@ 12:49:40

திருத்துறைப்பூண்டி :  திருத்துறைப்பூண்டி அருகே பொன்னுகொண்டான்  ஆற்றில் பழுதாகி 15 ஆண்டுகளாகியும் சீரமைக்காத  விஸ்வநாதர்- திருக்களார் இணைக்கும் பாலத்தை சீரமைக்க வேண்டும்  என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நுணாக்காடு ஊராட்சி விஸ்வநாதபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றனர்.

இங்குள்ளவர்கள் பல்வேறு பணிக்காக அருகில் உள்ள திருக்களார் செல்வதற்கு பொன்னுகொண்டான் ஆற்றில் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நடைபாலம் வழியாக சென்று வந்தனர்.பாலம் பழுதடைந்து சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. முற்றிலும் போக்குவரத்து தடைபட்டு இரண்டு ஆண்டாகிறது. நிரந்தரமாக பாலத்தை சீரமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக சீரமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விஸ்வநாதபுரம் வாசுகி கூறுகையில்,  விஸ்வநாதபுரத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள திருக்களார் கடைத்தெருவிற்கு சென்று வந்தோம். மேலும் திருக்களாருக்கு சென்று மன்னார்குடிக்கும் செல்லலாம்.தற்போது இந்தபாலம் முற்றிலும் தடைபட்டதால் 4 கி.மீ தொலைவில் உள்ள கொத்தமங்களம் சென்று அங்கிருந்து மினி பேருந்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க  திருத்துறைப்பூண்டிக்கு போக வேண்டும். விஸ்நாதபுரத்தில் சாலை பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிறது.

இதனால் எங்கள்கிராமத்திற்கு பெண் கொடுப்பதற்கும், பெண் எடுப்பதற்கும் யாரும் முன்வருவதில்லை. இதனால் பலருக்கு திருமணம் தள்ளிப்போகிறது. சேதமடைந்த பாலம் அருகில் படித்துறையும் இருந்தது. அது தற்போது முற்றிலும் சேதமடைந்து படித்துறை இருந்த இடம் தெரியவில்லை. எனவே சாலையை சீரமைக்க வேண்டும், சேதமடைந்த பாலத்தை தற்காலிகமாக சீரமைத்து மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக பேருந்துகள், வாகனங்கள் செல்லக்கூடிய அளவிற்கு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்றார்.

மாலதி கூறுகையில்,  விஸ்வநாதபுரத்தில் உள்ளவர்கள் சாகுபடி செய்வதற்கும் கால்நடைகளை மேய்ப்பதற்கும் பாலம் வழியாக சென்று வந்தனர். இந்த பாலம் வழியாக கால்நடையை மேய்க்க ஓட்டி சென்ற போது ஏற்கனவே பல பேர்  விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. உடைந்த பாலத்தில் பலகை போட்டு தற்போது ஆற்றின்  மறு பக்கத்திற்கு  பயத்துடன் சென்று வருகிறோம் என்றார்.

விஜயகுமார் கூறுகையில்,  விஸ்வநாதபுரத்தில் உள்ளவர்களுக்கு சுமார் 30 ஏக்கர் நிலம் ஆற்றுக்கு  மறு பக்கம் உள்ளது. மேலும் திருக்களார் கடைத்தெரு, பிரசித்தி பெற்ற கோயிலுக்கு செல்வதற்கும் இந்தபாலத்தை பயன்படுத்தி வந்தனர்.தற்போது பாலம் சேதமடைந்துள்ளது. தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆற்றில் இறங்கிவிவசாயிகளும், பொதுமக்களும் திருக்களார் சென்று வருகின்றனர். ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் போகும்போது விவசாயிகள் சாகுபடி செய்ய சென்று வர முடியாது.திருத்துறைப்பூண்டியிலிருந்து வரும் மினி பேருந்து இந்தபாலம் வழியாக திருக்களார் செல்வதற்கு பெரியபாலம் அமைத்து தர வேண்டும்.அதுவரை இடிந்த ஒரு பகுதியை தற்காலிகமாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றார்.  

ராஜேந்திரன் கூறுகையில்: விஸ்வநாதபுரம் சாலை பழுதடைந்து பல ஆண்டுகள்ஆகிறது. தற்போது சாலை முற்றிலும் சேதமடைந்து பொதுமக்கள் நடந்துகூட செல்லமுடியவில்லை. சாலை வசதிஇல்லாததால் இவ்வூரில் திருமணம் செய்பவர்கள் அருகிலுள்ள நகரில் வாடகை வீட்டிற்கு சென்று திருமணத்தை முடித்து கொண்டு ஊருக்கு வருவார்கள் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்