SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாமகவை விட குறைந்த சீட் கொடுத்ததால் அதிருப்தி : அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு பற்றி பரபரப்பு தகவல்கள்

2019-02-23@ 00:11:56

சென்னை: பாமகவை விட குறைந்த சீட் கொடுத்ததால் அதிருப்தி அடைந்த பாஜக, அதிமுகவை மிரட்டுவதற்காக திடீரென்று ரெய்டு நடத்தி எச்சரிக்கை விடுத்திருப்பதாக தமிழக அமைச்சர்கள் பீதியடைந்துள்ளனர்.ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலா ஆதரவாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். பாஜவுக்கும், சசிகலாவுக்கும் மோதல் வெடித்தவுடன் எடப்பாடி பழனிசாமி, பாஜ ஆதரவாளராக மாறி, சசிகலாவை கட்சியில் இருந்து விரட்டினார். இதனால் டிடிவி தினகரன் தனிக் கட்சி தொடங்கினார். அதேநேரத்தில் தமிழக அமைச்சர்கள் எல்லா வகையிலும் கொள்ளையடிப்பதாக புகார்கள் எழுந்தன. பல முறை நீதிமன்றங்களும் கண்டித்தன.

 பல அமைச்சர்களுக்கு வேண்டிய ஏன் முதல்வருக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் வீடுகள், தொழில் அதிபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிரடி சோதனை நடத்தின. இதனால் அதிமுக அமைச்சர்களை ஒரு வித பயத்திலேயே பாஜக வைத்திருந்தது.அதேபோல, தமிழக பாஜ தலைவர்கள் தமிழிசை முதல் பல தலைவர்களும் அவ்வப்போது தமிழக அமைச்சர்களை மிரட்டும் வகையில் பேட்டியளித்து வந்தனர்.குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக அதிமுக மீதான தாக்குதலை பாஜ நிறுத்திக் கொண்டது. தமிழக நலனுக்கான பணிகளை விட தங்களுடைய தனிப்பட்ட நலன்களையே அதிமுக தலைவர்கள் கேட்டு பெற்றுக் கொண்டனர். மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜ என்ன சொல்கிறதோ அதையே அமைச்சர்கள் செயல்படுத்தி வந்தனர். தேர்தல் நெருங்க ஆரம்பித்ததும், தமிழகத்தில் பாஜ தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான வேலைகளில் மேலிட தலைவர்கள் இறங்கினர்.ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, திடீரென்று அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று அறிவித்து, கூட்டணி அமைக்கும் வேலைகளில் மளமளவென இறங்கினர்.அதிமுககூட்டணி அறிவிக்க பாஜ தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருவதாக இருந்தது. ஆனால் முதலில் பாமகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்க ஓபிஎஸ், இபிஎஸ் முடிவு செய்திருந்தனர். பாஜவை விட அதிக சீட்டுகளை வழங்க இருக்கும் தகவல்கள் மத்திய உளவுத்துறை மூலம் அமித்ஷாவுக்கு தெரிந்ததும், தனது பயணத்தை ரத்து செய்தார். தமிழக பாஜ பொறுப்பாளர் பியூஸ் கோயலை அனுப்பி வைத்தார். ஆனால் பாஜவை விட பாமகவுக்கு அதிக சீட்டுகளை வழங்கியதோடு, தமிழக பாஜவுக்கு வெறும் 5 சீட்டுகளையே வழங்கினர். இதனால் தமிழக பாஜ அதிர்ச்சி அடைந்தது. தமிழகத்தில் பாஜ மலரும், ஆட்சிைய பிடிப்போம் என்று கூறி வந்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அதிர்ச்சியை காட்டிக் கொள்ளாமல், நீங்கள் எப்போதும் எங்கள் பிடிக்குள்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்பதை மறைமுகமாக அதிமுக தலைவர்களுக்கும், முதல்வருக்கும் தெரிவிப்பதற்காக அமைச்சர் வீரமணி வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கையால் தமிழக அமைச்சர்கள் பீதியடைந்துள்ளனர். அடுத்தது தங்களை குறி வைப்பார்களோ என்று அவர்கள் பயப்படுகின்றனர். தொகுதிப் பங்கீடு முடிந்த 2 நாளில் ஐடி ரெய்டு நடந்ததால் அதிமுக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தேர்தல் முடியும்வரை பாஜ என்ன வேண்டுமானாலும் செய்யும் என்ற அதிர்ச்சியில் அதிமுக தலைவர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு நிலவுகிறது.

என்ன சொல்கிறது பாஜ?
பாஜ தலைவர்கள் இதுபற்றி கூறுகையில், சீட் குறைவாக கொடுத்ததால் எங்களுக்கு அதிருப்திதான். ஆனால் அதற்காக எல்லாம் ஐடி ரெய்டு நடக்கவில்லை. அமைச்சர் வீட்டில் சோதனை என்றவுடன் மேலிடத்தில் விசாரித்தோம். இது தனிப்பட்ட பிரச்னை. ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக உள்ளவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட சோதனை. அது தெரியாமல், அமைச்சர் சிக்கிக் கொண்டார். வருமான வரித்துறையில் பணியாற்றும் ஒரு உயர் அதிகாரிதான் சோதனைக்கு உத்தரவிட்டார். மேலிடத்துக்கு தெரியாது என்று கூறி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-03-2019

  22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • NerthikkadanTriplecane

  பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்