SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தை தொடர்ந்து: காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திலும் 5 கோடி ஊழல்?

2019-02-23@ 00:08:56

* முறைகேடுகளை மறைக்க போலி பில் இணைப்பு
* ஆளும்கட்சி மீது நெசவாளர்கள் பரபரப்பு புகார்

சிறப்பு செய்தி
சென்னை: காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடந்த 5 கோடி ஊழல் முறைகேடுகளை மூடி மறைக்கும் விதமாக, தணிக்கைத்துறை அறிக்கையில், போலி ஆவணங்களை சேர்க்கும் முயற்சியில் சங்க நிர்வாகக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் 22 அரசு பட்டு கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 50 ஆயிரம் குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு, அரசு பட்டு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழுவுக்கு தேர்வான ஆளுங்கட்சியினரின் ஊழல் முறைகேடுகள், நிதி மோசடிகள், நிர்வாக திறமையின்மை காரணமாக பட்டு கூட்டுறவு சங்கங்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டன. பல ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வந்த முன்னணி சங்கங்களான அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம், முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவை இந்த ஊழல் முறைகேடு காரணமாக நஷ்டத்துக்கு தப்பவில்லை.

இதனால் கைத்தறி தொழிலை நம்பி வந்த 1 லட்சத்துக்கு மேற்பட்ட நெசவாளர்கள் பாதிக்கப்பட்டனர். பலர் தொழிலை விட்டு செக்யூரிட்டி, கட்டிட மேஸ்திரி, தினக்கூலி பணிக்கு சென்றுவிட்டனர். இதையடுத்து, பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டு சேலை தயாரிப்பு நாளுக்கு நாள் அழியும் நிலைக்கு மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அரசியல்வாதிகளுடன், கூட்டுறவு சங்க அதிகாரிகள், ஊழியர்கள் சேர்ந்து கூட்டு ெகாள்ளை அடித்ததுதான். இந்த விவரமெல்லாம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடந்த தணிக்கை அறிக்கை மூலமாக வெளிச்சத்திற்கு வந்தது. இது நெசவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஊழல் காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை காரணம் காட்டி இச்சங்கத்தில் பொங்கல் போனஸ் குறைக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த நெசவாளர்கள்  போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, ஊழல் புகாரில் சிக்கிய சங்க மேலாண் இயக்குநர் பிரகாசம் ஓய்வு பெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு தலைவர், துணைத்தலைவர் ஆகியோரால் நடந்த நிதி மோசடிகள், ஊழல் காரணமாக இச்சங்கத்தில் உறுப்பினராக உள்ள 3500 நெசவாளர்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கத்தின் ஊழல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் சங்க பதிவேடுகள், வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது, முறைகேடு நடந்தது உறுதியானது. அதன்பேரில், சங்க நிர்வாக இயக்குநர் உள்பட 3 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டனர். காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவினர் ஆளுங்கட்சியின் மாவட்ட நிர்வாகி வாலாஜாபாத் கணேசனின் தீவிர ஆதரவாளர்களாக உள்ளனர். இதனால், நிர்வாகக்குழு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். மேலும் ஆண்டுதோறும் உறுப்பினர்களுக்கு வழங்கிய பொங்கல் போனஸ், ஊழல் புகார் காரணமாக நடப்பாண்டு தரப்படவில்லை. இதை கண்டித்து, நெசவாளர்கள் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியும் பலனில்லை.

முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடந்த நிதி மோசடிகள், ஊழல் முறைகேடுகள் தணிக்கை அறிக்கையில் வெளியாகும் என்பதால், அதனை வெளியிடாமல் நிர்வாகக் குழுவினர் காலம் கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தணிக்கை அறிக்கையில், ஊழல்களை மூடி மறைக்கும் விதமாக போலி ஆவணங்களை இரவு, பகலாக சங்கத்திலும், இயக்குநர் அலுவலகத்திலும் தயார் செய்து இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கைத்தறித்துறை அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்து செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அண்ணா பட்டு கூட்டுறவு சங்க ஊழல்கள் தொடர்பாக நிர்வாகக் குழுவை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பிய கைத்தறித்துறை துணை இயக்குநர் அலுவலகம், நிதி மோசடிகளில் ஈடுபட்ட முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

இதற்கு காரணம் என்ன, இதில் காஞ்சிபுரம் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநரிடமும், கைத்தறித்துறை உயர் அதிகாரிகளிடமும் எவ்வளவு, எந்த முறையில் பண பேரம் நடந்துள்ளது என்ற விசாரணை நடந்தும் வருகிறது. ஆனால் இதில் முடிவுதான் வரவில்லை. 2017-18ம் ஆண்டில்,  முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் 5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டள்ளது. இதில் முறைகேடுகள் நடைபெறவில்லை என கூறும் சங்க நிர்வாகக்குழு தலைவர், தணிக்கை அறிக்கையில் ஏன் இதுவரை கையொப்பம் இடவில்லை என கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2017- 18ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, கடந்த ஜூலையில் முடித்திருக்க வேண்டும். ஆனால், கடந்த 6 மாதமாக காலம் கடத்தி வருவது ஏன்? கடந்தாண்டு டிசம்பரில் கூட்ட வேண்டிய மகாசபை சங்க தணிக்கை அறிக்கை முடிவடையாததால் கூட்ட முடியாத நிலையை உருவாக்கிய நிர்வாகக்குழு மீது ஏன் துறை ரீதியாக நோட்டீஸ் அனுப்பவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து முருகன் கூட்டுறவு சங்க நெசவாளர்கள் கூறியதாவது:
நடப்பாண்டுக்கான தணிக்கை இதுவரை துவங்காத நிலை உள்ளது. தற்போது முடிக்கப்பட்ட தணிக்கை அறிக்கையில் உள்ள ஊழல், முறைகேடுகளை மறைக்க விடுமுறை நாட்களில் சங்க அலுவலர்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயார் செய்கின்றனர். சென்னை கூட்டுறவு தணிக்கைத்துறை இணை இயக்குநரிடம் 15 நாட்களுக்கு முன்பு முருகன் பட்டு கூட்டுறவு சங்க தணிக்கை அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இதுவரை தணிக்கை சான்று தரவில்லை. நிர்வாகக்குழு கையாடல் செய்த 5 கோடியை இதுவரை ஏன் சம்பந்தப்பட்ட துறை வசூலிக்கவில்லை. இதனால், எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

பட்டுப்புடவை விற்பனை கணக்கு இல்லை
முருகன் பட்டு கூட்டுறவு சங்க ஊழல் குறித்து நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில், ஏராளமான கணக்குகளை திருத்தம் செய்து, பொய் கணக்குகள் எழுதி வந்துள்ளனர். குறிப்பாக, பட்டு புடவை விற்பனையில், சுமார் 12 லட்சத்திற்கு புடவைகள் விற்பனையாகி இருப்பதை கணக்கில் காட்ட வில்லை. மேலும், இருப்பு புடவைகள் மற்றும் லாபம் எவ்வளவு என்பது குறித்து கணக்கு காட்டப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் வழங்கிய மானியம் எவ்வளவு என்றும் கணக்கு இல்லை. இவையெல்லாம், தணிக்கை செய்யும்போது கணக்கில் காட்டாதது தெரிய வந்துள்ளது. எனவே, இவற்றை மறைக்கும் வகையில், தலைவர் மற்றும் அதிகாரிகள் முன்னதாகவே இந்த ஆண்டு நெசவாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கி உள்ளனர்.

இதை வைத்து நடக்காத பேரவை கூட்டத்தை நடத்தியதாகவும் கணக்கு காட்டியுள்ளனர். மேலும், இவைகளை கண்டுபிடித்த பின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் கட்சியின் நிர்பந்தத்தால் அதிகாரிகளும் மவுனமாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் மற்றும் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு நேர்மையான அதிகாரிகளை கொண்டு சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-05-2019

  20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்