SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டணி வைத்ததால் கட்சிக்காரர்களும், சொந்தக்காரர்களும் அர்ச்சனை செய்வதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2019-02-22@ 04:20:40

‘‘அய்யா என்ன சொல்றாரு...’ என்று கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘ஏன்டா கூட்டணி வைச்சோம்னு யோசிக்கிறாராம்... நெட்டிசன்கள்ல இருந்து... சொந்த கட்சியில இருந்து, அறக்கட்டளை தரப்பில் இருந்து... ஏகத்துக்கும் எதிர்ப்பாம்... இதனால சம்மந்திக்குள்ளேயே அதிருப்தியாம்... காங்கிரசில் உள்ள அவரது மைத்துனர் காய்ச்சி எடுத்துட்டாராம்... இது எல்லாம் அய்யா காதுக்கு போனதும் அரசியலுக்காக இப்படியா பேசுவது என்று வருந்தினாராம்... அதுக்கு அவங்க உறவினர்கள் உங்களால டெல்லி வரைக்கும் எங்க பெயர் ெகட்டுப்போச்சுனு கொந்தளிப்பாக இருப்பதாக தொண்டர்கள் மத்தியில பேச்சு ஓடுது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ உயர் பதவி கிடைக்க கோயில் கோயிலாக ஒரு அமைச்சர் சுத்தி வர்றாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஜெயலலிதா டூருக்கே ரூட் ேபாட்டு கொடுத்த அமைச்சர் சமீபத்தில் நெல்லைக்கு விசிட் அடித்தார். நேராக நெல்லையப்பர் கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்புறம் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சென்று அங்கு நடந்த சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார். லட்சுமி நரசிம்மர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். அமைச்சரவையில் மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர் இவர். அதிர்ஷ்டம் இல்லாததால படிப்பு துறையில காலம் ஓட்டிட்டு இருக்காரு. அவருக்கு கிடைக்க வேண்டிய, எதிர்பார்த்த உயர்ந்த பதவிகள் கிடைக்காமல் போனது. விவிஐபிக்களின் இடத்தில் இருக்க வேண்டியவர் இப்போது விஐபி இடத்தில் இருந்து கொண்டு எல்லாம் தலைவிதி என்று மாணவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் துறையில் ெஜாலித்து கொண்டிருக்கிறார். தேர்தலிலும் அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லையாம்... இருக்கும்வரை அமைச்சராக இருந்துவிட்டு போகலாம்னு விரக்தியில இருக்காராம்... ஆனால் அதை விரும்பாத சில அடிபொடிகள் நீங்கள் விஐபியா இருந்தா போதாது விவிஐபியாக மாறணும்னு சொல்லி வற்புறுத்தி லட்சுமி நரசிம்மரை தரிசிக்க வைக்க அழைச்சுட்டு போனாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மின்வாரியத்துல என்ன நடக்குதுனு... ஊழியர்கள் புலம்பறாங்களே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக மின்வாரியத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் வேலூரில் பாலகிருஷ்ணன் என்பவரும், திருப்பத்தூரில் மற்றொருவரும் ஹெல்பர்களாக பணி நியமனத்துடன் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வந்தனர். அவர்களை தினக்கூலி அடிப்படையில் அந்தந்த ஊர்களில் பணி நியமனம் செய்யுமாறு அவர்களை அழைத்து வந்த நிர்வாக மேற்பார்வையாளரான முத்தானவர் சிபாரிசு செய்து, உயர்அதிகாரியும் பணிநியமன ஆணையில் கையெழுத்திட்டதாக தெரிகிறது. இவ்விவகாரத்தில் சென்னை தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிலை தனி அலுவலரும் கையெழுத்திட்டார் என தெரிகிறது. இ்ந்நிலையில் போலி நியமன ஆணை என்ற விஷயம் வெளியே வந்ததும் இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதனால் பயந்துபோன போலி பணி நியமன ஆணையுடன் வந்தவர் தலைமறைவானார். அதேபோல் எதிர்காலத்தில் தன் மீது எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதால் முத்தானவரும் பள்ளிகொண்டாவுக்கு பணியிட மாற்றம் பெற்று சென்றுவிட்டார். இவ்விவகாரத்தில் தொடர்புடைய சென்னை தலைமை அலுவலக சிறப்பு தனி அலுவலரான இருளானவரும் ஓய்வு பெற்று சென்று விட்டார். எல்லாம் முடிஞ்ச பிறகுதான் போலீசார் புகாரில் எப்ஐஆர் போட்டு இருக்காங்க...  யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. சிறு தவறு செய்தாலும் சஸ்பெண்ட், மெமோ என்று கொடுத்து எங்களை அவமதிக்கும் அதிகாரிகள், அவர்கள் மீது எழுந்துள்ள புகார்களை மறைக்க முயல்வது ஏன் என்று மின்வாரிய ஊழியர்கள் கொந்தளிப்பில் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அவங்க கேட்பதும் நியாயம் தானே... வேறு என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ பதவி ஆசையில் ஒருவர் இருக்க... அதை தடுக்க பலரும் காய்களை நகர்த்தி வர்றாங்களாம்... இதை கேட்ட நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதால் என்னை தான் முதல் கமிஷனராக அறிவிப்பாங்கனு ஆர்வமாக இப்போதைய கமிஷனர் இருக்காராம்... என்னனு விசாரிச்சா, அதிமுக உயர்மட்டத்தில் நாகர்கோவில் நகராட்சி கமிஷனருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்காம். அப்புறம் நகராட்சிகளில் அதிக வருவாய் வசூலித்தவர்கள் பட்டியலில் இருக்காராம்... நிச்சயம் இவருக்காக விதிகள் திருத்தப்பட்டு, இவர்தான் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் கமிஷனராக நியமிக்கப்படுவார் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு ஓடுதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இல்லாத ஜீப்புக்கு டீசல் போட்டதாக பல லட்சம் சுருட்டியவர்கள் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘திருப்பூர் தாராபுரத்தில் பொதுப்பணி துறையின் நீர்வள ஆதாரத்துறை மணல் கண்காணிப்பு பிரிவு அலுவலகம் எண்.2 செயல்படுகிறது. இங்கு பணியாற்றும் அதிகாரிகள், அமராவதி ஆற்றுநீர் மற்றும் ஆற்றுமணல் சமூக விரோதிகளால் திருடப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், திருட்டை தடுக்கவும் ரோந்து செல்வது உண்டு. இதற்காக, அரசு சார்பில் ஒரு ஜீப் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஜீப் திடீரென காணாமல் போய்விட்டது. கடந்த ஒன்றறை வருடமாக இந்த ஜீப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி அதிகாரிகள் யாரும் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை. ஆனால், காணாமல் போன இந்த ஜீப்புக்கு தினமும் டீசல் போடுவதாகவும், வாகனத்தில் ரோந்து பணி மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தினமும் கணக்கு எழுதுகின்றனர். அலுவலக கோப்புகளில் இந்த பதிவு அன்றாடம் செய்யப்படுகிறது. இந்த ஊழலை பொதுப்பணி துறை உயரதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும், இதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாராபுரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ைவச்சு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்