SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உலக தாய்மொழி தின கொண்டாட்டம்: தமிழக கவர்னர் பங்கேற்பு

2019-02-22@ 04:17:25

சென்னை: வி.ஐ.டி. பல்கலைக்கழக சென்னை வளாகத்தில் உலக தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது. வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டி. பல்கலைக்கழகத் துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வரவேற்றார். தேசிய சிந்தனைக் கழகத் தலைவர் மா.வீ.பசுபதி, கல்வியாளர் வா.வி.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் கலந்துக் கொண்டு தாய்மொழியின் அவசியம் குறித்து பேசினார். தேசிய சிந்தனைக் கழக மாநில அமைப்பாளர் மா.கொ.சி. இராஜேந்திரன் நன்றி கூறினார்.  இந்த நிகழ்ச்சியில் ஜி.விஸ்வநாதன் பேசியதாவது: 2011ஆம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் இந்தியாவில் 121 மொழிகள் நடைமுறையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழங்குடி மக்கள் பேசும் மொழிகள், வட்டார மொழிகள் ஆகியவற்றையும் சேர்த்தால் 19500 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி 22 மொழிகள் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டவணையில் 38 மொழிகள் சேர்க்கப்பட உள்ளன. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் போஜ்புரி மொழியை இந்தியாவில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும், உலக அளவில் பிஜி, மொரிஷியஸ், நேபாளம் ஆகிய நாடுகளிலும் அதிகம் பேர் பேசுகின்றனர். கணக்கெடுப்பின் அடிப்படையில் இம்மொழியை ஐந்தரை கோடி பேர் பேசுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் 44 மொழிகளைச் சேர்ந்தவர்கள் படிக்கின்றனர். அதனால் 44 மொழிகள் பேசப்படுகின்றது. நாங்கள் இந்தி, தமிழ் மொழிகளை மட்டும் அவற்றை தெரியாதவர்களுக்கு போதிக்கிறோம். அது மட்டுமின்றி பிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட 7 உலக மொழிகளையும் எங்கள் மாணவர்களுக்கு போதிக்கிறோம். இந்திய அரசின் மும்மொழிக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
 
நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது பேச்சை தமிழில் தொடங்கினார். ‘’அனைவருக்கும் வணக்கம், எப்படி இருக்கீங்க’’ என்று கேட்ட அவர் தமிழ் இனிமையான மொழி, நான் தமிழை விரும்புகிறேன் என்று தமிழில் பேசினார். இதைத்தொடர்ந்து அவர் பேசும்போது, நான் கடந்த 16 மாதங்களாக தமிழ்நாட்டில் வசிக்கிறேன். இன்னும் மூன்றரை வருடங்கள் இங்குதான் இருப்பேன். தமிழில் உள்ள சைவ சித்தாந்தம், திருக்குறள் உள்ளிட்ட நூல்களை மொழி பெயர்த்து வாசித்து வருகிறேன். 2500 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் ஆட்சியமைப்பு, வாழ்வியல் நெறி குறித்த அனைத்து தகவல்களும் குறைந்த வார்த்தைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, கம்பர் உள்ளிட்டோர் தமிழ் மொழிக்கு செய்த சேவைகளை நான் அறிவேன். மேலும், சோழர், பல்லவர் காலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்துள்ளது.

அதேபோன்று பெரிய புராணம் எழுதிய சேக்கிழார், தமிழிசையை வளர்த்த அருணாச்சல கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத்தாண்டவர் ஆகியோரின் பணிகள் போற்றத் தக்கவை ஆகும். ஒவ்வொருவரும் தாய்மொழி தவிர பல மொழிகளை தெரிந்து கொள்வது அவசியம். ஆனால், தாய்மொழி மட்டுமே இதயத்திற்கு நெருக்கமானது. ஒருவர் தனது தாய்மொழியில் பேசும்போது, படிக்கும்போது அது இதயத்திற்குள் ஊடுருவிச் செல்வதை உணரலாம். ஒருவரின் எண்ணங்களை ஈர்க்க அவருக்குத் தெரிந்த மொழியில் பேச வேண்டும். ஆனால் அவரின் மனதைக் கவர அவரது தாய்மொழியில் பேச வேண்டும் என்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகளை நாம் உணர வேண்டும். இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், பொங்கல் விழா, தீபாவளி போன்ற பண்டிகைகள் மொழிகள் கடந்து நம்மை இணைக்கிறது.இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ், இந்தி, மராத்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி மற்றும் ஆப்பிரிக்க மொழிகளைப் பேசும் மாணவ, மாணவியர் தங்களின் மொழியின் பெருமைகள் குறித்து அந்தந்த பாரம்பரிய உடை அணிந்து பேசினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்