SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு இந்திய பொருளாதாரம் விரைவில் ரூ355 லட்சம் கோடியை எட்டும்: முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு அழைப்பு

2019-02-22@ 00:31:08

சியோல்: ‘‘இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் ரூ355.5 லட்சம் கோடியை எட்ட உள்ளது. எங்கள் நாட்டில் முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன’’ என தென் கொரியாவில் பிரதமர் மோடி பேசினார். தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அந்நாட்டுக்கு நேற்று சென்றார். தலைநகர் சியோல் விமான நிலையத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடந்த இந்திய-தென் கொரிய தொழில் கருத்தரங்கில் மோடி பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் மிகவும் வலுவானது. உலகில் வேறெந்த மிகப்பெரிய பொருளாதார நாடுகளும், அடுத்தடுத்த ஆண்டுகளில் 7 சதவீத வளர்ச்சியை எட்டவில்லை. மிக விரைவிலேயே இந்திய பொருளாதாரம் 355.5 லட்சம் கோடியை தொட்டுவிடும்.

அங்கு முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. தொழில் செய்யும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமல்படுத்தியது மற்றும் பல்வேறு துறைகளில் அரசு மேற்கொண்ட கடினமான கொள்கை முடிவுகளால் இன்று, உலக வங்கியின் எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 65 இடங்கள் முன்னேறி 77வது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் நாங்கள் டாப்-50க்கும் இடம்பிடித்து விடுவோம்.
இன்று, அந்நிய நேரடி முதலீட்டிற்கான கதவுகளை திறந்து வைத்திருக்கும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 90க்கும் மேற்பட்ட  துறைகளில் அந்நிய முதலீட்டுக்கான அனுமதி, தானியங்கி நடைமுறையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவின் மீதான நம்பிக்கை அதிகரித்து,  கடந்த 4 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு குவிந்துள்ளது. இந்தியர்களின் கனவை நனவாக்க பாடுபடும் நாங்கள், ஒத்த சிந்தனையுடைய கூட்டாளிகளை எதிர்பார்க்கிறோம். அந்த வகையில், தென் கொரியாவை எங்களின் உண்மையான இயற்கையான கூட்டாளியாக பார்க்கிறோம்.

கொரியாவின் முன்னணி 10 வர்த்தக கூட்டு நாடுகளில் இந்தியா இடம் பெற்றுள்ளது. கடந்த 2018ல் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2,150 கோடி  டாலருக்கு நடந்துள்ளது. இதை 2030ம் ஆண்டுக்குள் 5000 கோடி டாலராக உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இந்தியாவில் சாம்சங், ஹூண்டாய், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 600 கொரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. அந்த பட்டியலில் கார் நிறுவனமான கியாவும் விரைவில் இணைய உள்ளது. இன்னும் நிறைய நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன. வரும் 2022ம் ஆண்டில், உள்கட்டமைப்பு துறையில் மட்டும் 7000 கோடி டாலருக்கான முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  6வது பெரிய பொருளாதார நாடாக  உள்ள இந்தியா, பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த நிலைமாறி தொழிற்சாலை, சேவைகளில் முன்னேறி வருகிறது என்றார்.

காந்தி சிலை திறப்பு
சியோலின் யான்செய் பல்கலைக் கழகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்,  முன்னாள் ஐநா பொதுச் செயாலளர் பான் கி மூன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘தற்போது மனித இனம் தீவிரவாதம், பருவநிலை மாற்றம் ஆகிய 2 மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. இதை சமாளிக்க காந்தியின் போதனைகள் நமக்கு உதவும்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்