SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டணிக்கு ஆள் கிடைக்காததால இடைத்தேர்தலில் ஜெயிப்பது பற்றி குக்கர் திட்டமிட்டு வருவதை சொல்கிறார் wiki யானந்தா

2019-02-21@ 01:38:00

‘‘உள்ளாட்சி துறை அதிகாரிகள் உச்ச கட்ட உற்சாகத்தில் இருக்காங்களாம்... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் அதிகாரிகளின் கொண்டாட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அதனால் பல பகுதிகளிலும் முடிந்த வரை சுருட்டுவதில் தீவிர கவனம் செலுத்தறாங்களாம்... குமரி மாவட்டத்தில் சில பேரூராட்சிகளில் பணிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் நடைபெறும்போது பெருமளவில் பணம் கைமாறுவதாக ஒப்பந்தகாரர்கள் சிலரே லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளை நேரில் அழைத்து பேசினர். இது பற்றிய விபரங்கள் முழுமையாக கிடைத்ததும் களமிறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை முதலில் வேர்க்கிளம்பி பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகத்தில் சோதனையிட்டு கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தாங்க. கையோடு இரண்டு நாள் கழித்து ஒட்டுமொத்த பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளரையும் குறிவைச்சாங்க. அவர் பணி முடிந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும் வரை காத்திருந்தனர். 


சினிமா ஸ்டைலில் கலெக்டர் அலுவலக பிரதான வாசலில் வைத்து அவரது ஜீப்பை மடக்கிய லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை மீண்டும் அவரது அலுவலகத்திற்கு அழைத்து வந்து ஜீப்பை சோதனையிட்டனர். அதில் கணக்கில் வராத நாலு லட்சம் கத்தை கத்தையாக சிக்கியது லஞ்ச ஒழிப்பு துறையினரை மிரள வைத்தது. கடந்த ஐந்தாண்டுகளில் பல கோடிகளில் கல்லா கட்டிய இவர் இப்போதுதான் சிக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாம லஞ்சம் வாங்கி போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து புது ஒப்பந்தத்தை விடணும்னு கான்டிராக்டர்கள் வற்புறுத்தறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிவகங்கையில வீடு, கடை கட்ட மதுரையில லஞ்சம் கொடுக்கிற கதை தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா. 


‘‘சிவகங்கை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்துல லஞ்சம் கொடி கட்டி பறக்குதுன்னு ஏகப்பட்ட புகாரு... இதனால கடந்த 19ம் தேதி இரவு  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியா ரெய்டு நடத்தினாங்க... அப்போது ஆபிசுல, துணை இயக்குநர் கார்ல பணம், ஆவணங்களை எல்லாம் பறிமுதல் செஞ்சாங்க... தொடர் விசாரணையில வெளிவந்த தகவல் லஞ்ச ஒழிப்புத்துறையை நடுங்க வச்சிருச்சாம்... எந்த வேலையாக இருந்தாலும் மொத்த மதிப்பீட்டில் 3 சதவீதத்தை ஆபீசர்களுக்கு லஞ்சமாய் தரணுமாம்... அதை தாண்டின பட்ஜெட்னா அதிமுக பிரமுகர்களோடு தொடர்புடைய மதுரையை சேர்ந்த சில பெரும்புள்ளிகளிடம் 3 சதவீதம் லஞ்சம், அப்புறம் சிவகங்கையில ஆபீசர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் பணம் லஞ்சமாக கொடுக்கணுமாம்.. அப்பத்தான் அப்ரூவல் ஆகுமாம்... ‘சிவகங்கை ஆபீசுல போய் பணத்தை கொட்டி அழுதா கூட ஏதோ பிரயோஜனம் உண்டு.. நாங்க எதுக்குய்யா மதுரைக்கு போய் பணத்தை கொட்டணும்னு’ கடுப்பான சிலர்தான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பத்த வச்சிட்டாங்கன்னு ஒரே பேச்சாய் ஓடுது ஓய்... இப்ப மதுரையில இருக்கிற அந்த பெரும்புள்ளிகள் யாருன்னு போலீஸ் விசாரிச்சுக்கிட்டிருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. 


‘‘சீட்டே வாங்காத நிலையில் பூ கட்சி பிரசாரத்தை ெதாடங்கினதை கவனிச்சீங்களா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் கூட்டணி, தொகுதி பங்கீடு என படு பிஸியாகிவிட்டனர். பலர், தங்களுக்கு ‘சீட்'' பெற நேரடியாகவும், மறைமுகமாவும் டிரை பண்றாங்க. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தனித்தொகுதி. தற்போது, இத்தொகுதி எம்.பி.யாக அதிமுகவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளார். ஜெயித்ததில் இருந்து தொகுதி பக்கமே தலைகாட்டாத இவர் மீண்டும் சீட் கேட்டு வருகிறார்...


அதேசமயம், பாஜவினர் நீலகிரி தொகுதியில் மறைமுகமாக பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒருவர்தான் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைதலைவர். விநாயகரின் தம்பி பெயர் கொண்ட இவர், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் கண்டிப்பாக சீட் பெறுவேன் என்ற முனைப்பில் உள்ளார். அதை மனதில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் இவர் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்... குறிப்பாக, மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளும் இவர், அடித்தட்டு மக்களான துப்புரவு பணியாளர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களையும் சந்தித்து வருகிறார். சப்தம் இல்லாமல் இப்போதே பிரசாரத்தை துவக்கிவிட்டார்...’’ என்றார் விக்கியானந்தா.


‘‘குக்கர் என்னாச்சு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் ஏறக்குறைய கூட்டணியை உறுதி செய்துட்டாங்க... எல்லாவற்றிலும் தெளிவாக பேசி... மற்றவர்களை மட்டம் தட்டும் குக்கர் மட்டும் அப்டியே அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்காம்... இலை கட்சிக்கு யாரும் போக மாட்டாங்க... எல்லோரும் நம்ம பக்கம்தான் வருவாங்கனு நினைச்சாராம்... குறிப்பாக மயிலாப்பூர், கிச்சன் கேபினேட், சிறைபறவைனு எல்லோரும் நினைச்சதுக்கு மாறாக கூட்டணி காற்று திசை மாறி திரும்பியதால்... நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா... 21 தொகுதிகளில் மட்டும் வெயிட்டான ஆட்களை களமிறக்கி இடைத்தேர்தலில் சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றுவதா... எவ்வளவு செலவு செய்தால் இலையை உதிர வைக்க முடியும்... இல்லை குக்கரில் போட்டு வேக வைக்க முடியும்னு ஆலோசனை செய்துட்டு இருக்காராம்... கடை விரித்தும் கொள்வாரில்லை என்ற கணக்கில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க லெட்டர் பேடு கட்சிகள் கூட ரெடியாக வில்லையே என்ற அதிருப்தி குக்கர் முகாமில் வெடிக்குதாம்... அவரை நம்பி போனவங்கள்ல சிலர் இன்னும் வீட்டை விட்டு வெளியவே வர மறுக்கிறாங்களாம்.. இன்னும் சிலரோ எலக்‌ஷன் முடிந்த பிறகு வெளியே வர்றேன்... அதுவரை என் தொழிலை பார்க்கிறேன்னு ஒதுங்கிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்