SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலுக்காக கொள்கை கோட்பாடு எல்லாம் நாணல் போல வளைந்த கதையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-02-20@ 00:32:48

‘‘என்ன அறிக்கைகளை என் கையில் கொடுத்துட்டு படிக்க சொல்ற...’’ என்று கேட்டார் விக்கியானந்தா. ‘‘முப்பத்துக்கும் மேற்பட்ட அறிக்கையின் தலைப்பை கவனித்தீர்களா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘எல்லாம் எடப்பாடிக்கு எதிரா டாக்டர் தாக்கி எழுதிய அறிக்கைகள்... இப்போது புரிஞ்சுபோச்சு... ஜெயில்ல போடணும்... சிபிஐ விசாரிக்கணும்... அடிமை அரசுன்னு விளாசு விளாசுன்னு விளாசிட்டு... இப்போது ஒற்றை இலக்க சீட்டுகளுக்காக கூட்டணி வைச்சதை பற்றி தானே கேட்கிற... அவர்தான் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாணல் ேபால வளைந்து சென்றால்தான் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் பிரச்னைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியும்னு சொல்லிட்டாரே... பீட்டர்  நீ காண்பித்தது நேற்றைய அறிக்கை... நான் சொல்றது இன்றைய கூட்டணி ஒப்பந்தம்... வடிவேலு பாணியில சொல்லணும்னா... அடி வாங்கினது நேற்று... இப்ப இல்லைன்னு சொல்ற மாதிரி இருக்கு...

அரசியல்ல எல்லாம் சகஜம்னு டாக்டரே ஒப்புக்கிட்டார்... எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையணும்னு ஒத்த கால்ல நின்னார்... என்னாச்சு, தேர்தல் அறிவிப்பு வந்ததும் எல்லாம் காற்றோடு போச்சு... எழுதியதும் போச்சு, பேசியதும் போச்சு...’’ என்று சிரித்தபடி சொன்னார் விக்கியானந்தா.‘‘ராஜ்ய சபா சீட்டு யாருக்காம்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மகன் அல்லது அவரோட மனையாளுக்கு தான் இருக்கும்னு அவங்க கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க... நமக்கு என்ன தேர்தல்ல ஓட்டு போடப்போவது மக்கள், அவங்களுக்கு எல்லாம் தெரியும்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘கலெக்டர் இருந்தால் எலக்‌ஷன்ல தடையா இருப்பார்னு யாரு சொன்னது...’’ என்று பீடிகை போட்டார் பீட்டர் மாமா.‘‘சிவகங்கை மாவட்ட அமைச்சர்தான் இப்படி புலம்பிக்கிட்டிருக்காரு... அவருக்கும் கலெக்டருக்கும் ஏதோ அரசல், புரசல் மேட்டர் ஓடிக்கிட்டிருக்காம்... கலெக்டரை தேர்தலுக்குள்ளே எப்படியாவது மாத்தணும்னு காய் நகர்த்திட்டு வர்றாராம்...

ஏற்கனவே, மாவட்டத்துல தன் சொல்படி கேட்கிறவங்களைத்தான், உயரதிகாரிகள் போஸ்ட்ல அமைச்சர் உட்கார வச்சிருக்காராம்... அங்கன்வாடி பணியாளர்கள் பட்டியலை தயார் பண்ணி, தனக்கு வேண்டிய ஆளுங்களுக்குத்தான் போஸ்டிங் போடணும்னு சொல்லிக்கிட்டிருந்தாராம்.. ஆனால், பல ஆண்டுகளாய் இழுபறியாய் இருந்த அங்கன்வாடி பணியாளர் நியமனத்தை தகுதி அடிப்படையில் கலெக்டர் நியமனம் செஞ்சு முடிச்சுட்டாராம்... கடுப்பான அமைச்சர் மற்றும் அவரது சகாக்கள், அதிலிருந்தே கலெக்டருக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கிட்டாங்களாம்... மேலும், தன் தரப்புல இருந்து அமைச்சரின் சட்டவிரோத பணிகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் கலெக்டர் களமிறங்கினாராம்... இதனால் உச்சக்கட்ட கோபத்தில் இருந்த மிஸ்டர் பாஸ், மாவட்டத்துல நடக்கிற எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும் கலெக்டருக்கு முக்கியத்துவம் தருவதில்லையாம்... இதுகுறித்து அலுவலர்களிடமே கலெக்டர் சொல்லி வருத்தப்பட்டாராம்... எப்படியாவது கலெக்டரை ஒரு சில வாரங்களில் மாற்றியே தீருவேன்னு வேட்டியை வரிஞ்சுக்கிட்டு நிற்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ அல்வா மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கல்வித் துறையா... காசு கொட்டும் துறையான்னு தெரியல... அந்த அளவுக்கு காசு புகுந்து விளையாடுது என்கின்ற பிற துறைகளை சேர்ந்த ஊழியர்களின் பேச்சும் காற்று வாக்கில் என் காதில் வந்து விழுந்தது... அத்தோடு இல்லாம, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஒருவரே உளறிக் கொட்டி இருக்கிறார். பள்ளிக் கல்வித் துறையில் அதிகாரம் இருந்தால் யார் கையெழுத்தை வேண்டும் என்றாலும் போடலாம். கோடி, கோடியாக சம்பாதிக்கலாம். அவர் மீதே நடவடிக்கை இல்லையே என்பதுதான் அந்த அதிகாரியின் ஆதங்கம். இதை பேச்சுவாக்கில் அந்த நேர்முக உதவியாளர், ஆசிரியர் ஒருவரிடம் உளறிக் கொட்ட அந்த ஆடியோ அப்படியே வாட்ஸ் அப்பில் பரவ விடப்பட்டது. இதையடுத்து நேர்முக உதவியாளர் அவரது பணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணிக்கு அனுப்பப்பட்டார்.

அது மட்டுமல்லாது ஆடியோவில் கூறியது உண்மையா, இணை இயக்குநர் கையெழுத்தை போலியாக போட்டது யார்? அதுகுறித்து முறையாக பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதா என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்த முருகன் பெயர் கொண்ட இணை இயக்குநரை பள்ளிக் கல்வித் துறை நெல்லைக்கு அனுப்பியுள்ளது. உளறிக் கொட்டிய எக்ஸ் நேர்முக உதவியாளராகவும், போலி கையெழுத்து போட்டவரையும் அழைத்து இணை இயக்குநர் நேரடி விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணை சரிதான், நடவடிக்கை இருக்குமா...அல்லது சம்பிரதாய விசாரணை போல் நீர்த்துப் போய் விடுமா என சந்தேகம் எழுப்புகின்றனர் நேர்மறையான கல்வித் துறை அதிகாரிகள்...’’ என்று சந்தேகத்தோடு கேள்வி கேட்டார் விக்கியானந்தா.‘‘கரன்சி எல்லாவற்றையும் சரி செய்துவிடும்... பொய் புகார்னு விசாரணை முடிந்துவிடும்... அப்புறம் கோவையை பற்றி ஏதோ சொல்ல வந்தீங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கோவை அரசு மருத்துவமனை குழந்தை பிரிவில் உள்ள டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வர்றாங்களாம். தீவிர சிகிச்சை பிரிவுக்கு டாக்டர்கள் ஒழுங்காக வருவதில்லையாம். ஒருசில டாக்டர்கள் வந்தாலும், அவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காமல், தங்கள் அறைக்கு தூங்க சென்றுவிடுகிறார்களாம்... அனுபவம்வாய்ந்த டாக்டர்கள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காமல், பயிற்சிக்கு வரும் மருத்துவர்களை வைத்து சிகிச்சை அளிப்பதால்  பெற்றோர் டென்ஷன்லேயே இருக்காங்க... எமர்ஜென்சி வார்டில் ஆக்சிஜன் சிலிண்டர் இப்போது ஸ்டாக் இல்லையாம். என்ன ஏது என்று விசாரித்தால், வெளியில் இருந்து வாங்கும் சிலிண்டருக்கு பில் கட்டவில்லையாம். அதனால் தனியார் நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டரை நிறுத்திவிட்டதாம். இதை, கவனிக்க வேண்டிய அரசு மருத்துவமனை டீன் கோவை பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு எல்லா கோப்புகளையும் வரவழைத்து அங்கேயே அலுவலக பணிகளை முடித்துவிட்டு ஓடிவிடுகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.   


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்