SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யாரெல்லாம் கண்தானம் செய்யலாம்... அதற்கான வழிமுறைகள் என்னென்ன?

2019-02-18@ 15:50:48

கண்தானத்தை பொறுத்தளவில் ஒருவயது நிரம்பிய குழந்தை முதல் எந்த வயதினரும் செய்யலாம். கண்ணாடி அணிந்தவர்களும் கண்ணில் கண்புரை நீக்க அறுவைசிகிச்சை (காட்ராக்ட்) செய்தவர்களும்கூட தானம் அளிக்கலாம். எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, வெறிநாய்க்கடி, பாம்புக்கடி, புற்றுநோய், மூளைக்கட்டி போன்றவற்றால் இறந்தவர்களின் கண்கள் தானமாக பெற முடியாது. இறந்தவர்களின் கண்களை அப்படியே எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தப்படுகிறது என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. கண்ணில் உள்ள கார்னியா எனும் கருவிழியை மட்டுமே எடுத்து பார்வையிழந்தவர்களுக்கு பொருத்தப்படுகிறது. கண்தானம் பெற்றபிறகு இமைகளை மூடி தைத்துவிடுவதால் முகம் விகாரமாக தோன்றாது.

பதிவுசெய்யாதவர்களிடம் இருந்து கூட கண்கள் தானமாக பெறப்படுகிறது. இதற்கு இறந்தவரின் மகன், மகள் ஆகியோரின் ஒப்புதல் இருந்தால் போதுமானது. இறந்து சுமார் 6 மணிநேரத்திற்குள் இவற்றை பெற்று 48 மணிநேரத்திற்குள் மற்றவர்களுக்கு பொருத்திவிட வேண்டும். மருத்துவர்குழு வரும்வரை கண்களில் சுத்தமான தண்ணீர்விட்டு இமைகளை மூடிவைக்க வேண்டும். அல்லது சுத்தமான ஈரத்துணியை போட்டு வைக்கலாம். இது கார்னியா குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையணை வைத்து இறந்தவர்களின் தலையை உயர்த்தி வைக்க வேண்டும். மின்விசிறியை அணைத்து வைக்க வேண்டும்.

15முதல் 20நிமிடத்திற்குள் கண்கள் தானமாக எடுத்து கொள்ளப்படும். தானம் அளிக்க விரும்பும் உறவினர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, கண் வங்கிகளுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் போதும். 40 லட்சத்திற்கும்மேல் கார்னியா குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு கருவிழிக்காக ‘காத்துக்கொண்டுள்ளனர்’. ஆனால் கிடைக்கும் கருவிழிகளோ ஆண்டிற்கு 19 ஆயிரம் மட்டும்தான். இதனால் ‘உலகை பார்க்கும் வாய்ப்பு இருந்தும்’ லட்சக்கணக்கானோர் தொடர்ந்து இருளிலே பரிதவித்து வருகின்றனர். பற்றாக்குறை இருப்பதால்தான் ஒருகண்ணிற்காவது பார்வை கிடைக்கட்டுமே என்ற நோக்கில் ஒருவர்க்கு ஒரு கருவிழி வீதம் பொருத்தப்பட்டு வருகிறது. இறந்த பிறகு எந்த பயன்பாடும் இன்றி மண்ணிற்கும் செல்லும் கண்களை பயனுள்ளதாக்குவோம்.

* காசியில் அஸ்தியை கரைப்பது ஏன்?  

உடலை காசி கங்கை கரையில் எரித்தால் இறந்தவர் சொர்க்கலோகம் செல்வர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் அஸ்தியை காசிக்கு எடுத்து சென்று கங்கையில் கரைக்கும்பழக்கம் சிலரிடம் இருந்து வருகிறது. இவ்வளவு ஈர்ப்பிற்கும் காரணம் ஒருகாலத்தில் இம்மயானத்தை அரிச்சந்திரன் காவல்காத்து விஸ்வநாதரின் நேரடி ஆசியுடன் வரம்பெற்றதுதான் என்பது ஐதீகம். இதனால் பூலோகத்தில் உள்ள அனைத்து மயானங்களையும் அரிச்சந்திரன்தான் காவல்காக்கிறார் என்ற நம்பிக்கை பலரிடத்திலும் உள்ளது. இதன்படி ஒவ்வொரு மயானத்திலும் அரிச்சந்திரனுக்கு கோயில்கள் அமைத்து அவருக்கு அபிஷேகம் செய்து ஆசீர்வாதத்துடன் அனுமதி பெற்றே மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு ஈமச்சடங்குகள் செய்யப்படுகின்றன.

இந்துவாக பிறந்த அனைவராலும் காசிக்கு சென்று தகனம் செய்ய முடியாது என்பதால் அந்தந்தப்பகுதி மயானத்தில் அரிச்சந்திர கோயில்கள் எழுப்பப்பட்டன. இங்கு காசியில் நடப்பது போன்றே பிணம் எரியூட்டப்படும். இருப்பினும் காலமாற்றத்தில் இதுபோன்ற ஆலயங்கள் மயானத்தில் காணப்படுவதில்லை. அரிச்சந்திர வழிபாடும் நடைபெறுவதில்லை. ஆனால் சம்பிரதாயமாக இன்னமும் இதற்கான காரியங்கள் நடைபெற்றே வருகின்றன. அதாவது ஒரு கருங்கல் அருகே சடலத்தை வைத்து அதனை அரிச்சந்திரனாக பாவித்து விபூதி, சந்தனம் திலகமிடப்படும். பின்பு மாலை சாற்றி ஆராதனை நடைபெறும்.

தொடர்ந்து மயானஊழியர், ஒருவர் இறந்தால் அவர் எங்கு செல்வார், ஆன்மாவின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறுவார். ஒருமனிதன் இறந்தபிறகு 13,14,15,16ம் நாளில் அவரது ஆன்மா இறைவனை அடையவேண்டும். தனக்கு முன்பு இறந்த 7 தலைமுறையினருடன் இணைந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு ஈமக்காரியங்கள் செய்யப்படுகின்றன. இருப்பினும் இன்றைக்கு மயானங்கள் பல்வேறு வகையில் மேம்பட்டுவிட்டன. மின்மயானங்களாக அரை மணிநேரத்தில் உடலை எரித்து சாம்பலை தந்துவிடுகின்றன. இதனால் மேற்கண்ட பல்வேறு வழிபாட்டு முறைகள் மறைந்து வருகின்றன. இருப்பினும் பின்தங்கிய மாநிலங்களிலும், பல்வேறு கிராமங்களிலும் இதுபோன்ற வழிபாடுகளும், நம்பிக்கைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

* அனல் மின்நிலையம் என்றால் என்ன?

அனல் மின்நிலையம் என்பது மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்நிலையங்களில் ஒன்றாகும். இவ்வகை மின்நிலையங்களில் நீராவி உருளைகள் சுழற்றப்படும்போது கிடைக்கும் இயந்திர ஆற்றலை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை எரித்து அதில் இருந்து வெளிப்படும் வெப்பத்தினால் நீராவி உற்பத்தி செய்து  நீராவிச்சுழலியை இயக்கு ஜெனரேட்டரில் இருந்து மின்சக்தியை உற்பத்தி செய்வது அனல் மின்நிலையம் ஆகும். இந்தமுறையிலான மின்உற்பத்திக்கு நீர், நிலக்கரி முக்கிய தேவை ஆகும்.

அதனால்தான் இவை அதிகமாக அல்லது எளிதாக கிடைக்கக்கூடிய இடங்களில் அனல் மின்நிலையங்கள் நிறுவனப்படுகின்றன. பொதுவாக அனல் மின்நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக உபயோகித்தாலும் இயற்கை எரிவாயு, எண்ணெய் ஆகியவற்றை எரிபொருளாக கொண்ட பல அனல் மின்நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் காந்திநகர் அனல் மின்நிலையம் (குஜராத்), ராஜீவ்காந்தி அனல் மின்நிலையம் (ஹரியானா), சஞ்சய்காந்தி அனல் மின்நிலையம் (மத்தியப்பிரதேசம்), துர்காபூர் அனல் மின்நிலையம் (மேற்குவங்காளம்), பானிபட் அனல் மின்நிலையம் (ஹரியானா), ராஜ்காட் மின்நிலையம் (டில்லி), தூத்துக்குடி அனல் மின்நிலையம் (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் அனல்மின்நிலையங்கள் அமைந்துள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

 • airportchina2019

  சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

 • nevadaarea11

  அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்