SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீர் நிலைகள் தப்புமா?

2019-02-18@ 00:23:29

நீர் மேலாண்மை என்பது தமிழர்களின் தனித்துவம். சேர, சோழ, பாண்டியர்கள் நிர்மாணித்த ஏரிகள், அணைகள், கால்வாய்கள் இன்றும் வரலாறு பகிர்கின்றன. நகர்மயமாக்கல் மெல்ல மெல்ல நீர்நிலைகளை விழுங்கி வருகிறது. அதுவும் தமிழக ஆட்சியாளர்களின் அகோர ஆசைகளுக்கு நீர்நிலைகள் அடிக்கடி பலிகடா ஆக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கேரளாவில் வந்த வெள்ளம் நமக்கு மட்டும் வந்திருந்தால் தமிழகத்தின் கதி அதோ கதிதான். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நீர்நிலைகள் எப்படி இருக்கின்றன என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. சென்னையில் நீர்நிலைகளை சரியாக பராமரிக்கவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசிற்கு தற்போது விதித்துள்ள ₹100 கோடி அபராதமே அதற்கு அத்தாட்சி. அடையாறு மற்றும் கூவம் ஆறுகள், பக்கிங்காம், விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய்கள் எப்படி இருக்கின்றன என்பது சென்னைவாசிகளுக்கே வெளிச்சம்.

கூவம் ஆற்றில் 13 ஆயிரத்து 592 இடங்களிலும், அடையாறில் 10 ஆயிரத்து 437 இடங்களிலும், பக்கிங்காம் கால்வாயில் 26 ஆயிரத்து 320 இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கடந்தாண்டு அரசே பசுமை தீர்ப்பாயத்தில் ஒப்புக்கொண்டது. இவ்வளவு ஆக்கிரமிப்புகள் இருந்தால் தண்ணீர் எங்கே செல்லும்? கட்டுமான கழிவுகள், மணற்குவியல்கள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை கொட்டும் இடமாக நீர்நிலைகள் மாறினால் தண்ணீருக்கு போக்கிடம் ஏது? நீர்நிலைகளை பராமரிக்க தொடர்ந்து தமிழக அரசு தயக்கம் காட்டியதன் விளைவு தற்போது 100 கோடி அபராதத்தை தலையில் சுமக்கிறது. சென்னையில் மட்டுமே இவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களையும் கணக்கெடுத்தால் ஆயிரக்கணக்கான கோடிகளை தமிழக அரசு இழக்க வேண்டியதிருக்கும். கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு நீர்நிலைகளை பராமரிக்க எடுத்த நடவடிக்கைகள் எதுவும் திருப்தியில்லை.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியில் இருந்த காலத்தில் அவ்வப்போது மழைநீர் சேகரிப்பு திட்டம் பேச்சளவில் இருந்தது. இப்போதைய ஆட்சியாளர்கள், மன்னர் காலத்துக்கு பின்னர் இப்போதுதான் குளங்களை மராமத்து செய்கிறோம் என்கிற பெருமிதத்தோடு களம் இறங்கினர். உலக வங்கி உதவியுடன் தமிழகம் முழுவதும் குளங்களை மராமத்து செய்ய ேகாடி, கோடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குளங்கள் மராமத்து பணிகளில் 10 குளங்களுக்கு சேர்த்து பெரும் தொகை ஒதுக்குவதால் எவ்வளவு செலவீனம் என்பதையே அறிய முடிவதில்லை. குளங்களை தூர்வாருவதற்கு பதிலாக மணலை எடுத்து மத்தியில் குவித்து வைக்கின்றனர். விவசாயிகளுக்கு வண்டல் மணலை குளங்களில் இருந்து இலவசமாக வழங்குகிறோம் என கூறிக்கொண்டு அவர்களை அங்குமிங்கும் அலைக்கழிக்கின்றனர்.

எந்தவொரு நகரம் விஸ்தரிப்புக்கு உள்ளானாலும் நீர் நிலைகளை தொடக்கூடாது என்பது விதி. ஆனால் தமிழகத்தில் நீர்நிலைகளை நிரப்பியே நகர விரிவாக்கம் நடைபெறுகிறது. நகரமயமாக்கல் அடிக்கடி கால்வாய்களையும், ஏரிகளையும் காவு கொள்கிறது. 1980ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையை சுற்றிலும் சுமார் 650 நீர்நிலைகள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது அதில் சுமார் 20 இருந்தாலே பெரிய விஷயம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ரியல் எஸ்டேட், தொழிற்சாலைகள், காற்றாலைகள் என வருவாய் குவிப்பு நிறுவனங்களின் வளர்ச்சியில் நீர்நிலைகளும், விவசாய நிலங்களும் அழிந்து வருகின்றன. பசுமை தீர்ப்பாயம் சென்னை நீர்நிலைகளை மறுசீரமைக்க, மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் சயின்ஸ் உள்ளிட்டவைகளின் உதவியோடு நடத்திட முன்வந்துள்ளது. இப்பணிகளுக்கு பின்னராவது சென்னை நீர்நிலைகள் சாபவிமோசனம் பெற வேண்டும். நீராதாரங்களை அலட்சியப்படுத்தும் தமிழக அரசுக்கு இத்தகைய அபராதங்கள் படிப்பினையாக இருக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-05-2019

  20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்