SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேசினால் தீரும்

2019-02-17@ 05:44:53

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் அந்த யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட நிர்வாக அதிகார மோதல் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. இந்த அதிகாரப் பகிர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் விசாரணையில் உள்ளது. அதேபோன்ற மோதல் தற்போது புதுச்சேரியிலும் ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் அரசு பரிந்துரை செய்து ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் துணை நிலை ஆளுநர்கள், மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான மற்றொரு கட்சி யூனியன் பிரதேசத்தில் ஆட்சியில் அமர்ந்தால் அதற்கு பெரும் நெருக்கடி கொடுக்கின்றனர். அந்த அரசுகள் செயல்படவிடாமல் முடக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு டெல்லியைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் சாலை விபத்துகளால் உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இரு சக்கர மோட்டார் வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்னர் அமல்படுத்தலாம் என்று அரசு முடிவு எடுத்தது. ஆனால், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் துறை தலைவருக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நேரடியாக உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்தும், அரசு அனுப்பிய நலத்திட்டங்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமைச்சர்களுடன் முதல்வர் கடந்த 4 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

இந்த பிரச்னை தொடர்பாக முதல்வரை அழைத்து பேச்சு நடத்தாமல் கிரண் பேடி டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார். மக்கள் நலத் திட்டங்களுக்கு உரிய அனுமதி கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதனால், புதுச்சேரியில் பதற்றமான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் கேள்விகள் கேட்டு முட்டுக்கட்டை போடுவது எந்தவிதத்தில் நியாயம்.
அரசின் திட்டங்களில் சந்தேகம் எழுந்தால் அது குறித்து முதல்வரிடம் உரிய விளக்கத்தை பெற்று கோப்புகளுக்கு உரிய அனுமதி வழங்கலாம். அரசின் கொள்கை முடிவுகளில் எல்லாம் தலையிட்டு நெருக்கடி தருவது என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல என்பது நாட்டின் நலனில் அக்கறையுள்ளவர்களின் கருத்து. கிரண் பேடி, விரைவில் முதல்வரை அழைத்து பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே ஜனநாயகத்தில்
நம்பிக்கை உள்ள அனைவரின் எதிர்பார்ப்பு.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • NerthikkadanTriplecane

  பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

 • StalinElectionCampaign19

  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்