SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காசு மேல காசு பார்க்கும் ஆளுங்கட்சி ஆட்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-02-17@ 04:46:38

அதிகாலை வாக்கிங் வந்திருந்த விக்கியானந்தாவும் பீட்டர் மாமாவும் சூரியோதயத்தின் அழகிய காட்சியை ரசித்தபடி நின்றனர். சில நொடிகளுக்குப் பின் மீண்டும் சீரியசான விவாதத்துக்குள் இறங்கினர்.
 ‘‘காசு மேல காசு வந்து கொட்டுவதால் ஆளும்கட்சி ஆட்கள் காட்டுல மழைன்னு பேசிக்கிறாங்களே.. அது என்ன விஷயம்..’’ என்று நடையை தொடர்ந்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘அங்கன்வாடி பணியிடம் மூலமா அள்ளுற விஷயம் பத்தி ேகட்கிறேன்னு நினைக்கிறேன். விரிவாகவே சொல்றேன் கேட்டுக்கோ...’’ என்று சிரித்தபடி கூறினார் விக்கியானந்தா.
 ‘‘அதுக்குத்தான நான் இருக்கிறேன். வேணா கொஞ்சம் வாக்கிங்கை நிறுத்தி அப்படி உக்காந்து பேசலாமா’’ என சற்று தூரமாக இருந்து பெஞ்சை காட்டினார் பீட்டர் மாமா.
 ‘‘வம்பு விஷயங்களை ஆற அமர கேட்கணும்னு நினைக்கிற.. ஓகே வா போகலாம்... ’’ என்று பெஞ்சில் சாவகாசமாக உட்காந்து, விஷயத்தை சொல்ல ஆரம்பித்தார் விக்கியானந்தா. ‘‘விருதுநகர் மாவட்டத்துல அங்கன்வாடி மையங்களில் காலியாக இருக்கிற 104 உதவியாளர்கள், 81 பொறுப்பாளர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களை வேகவேகமாக வாங்குறாங்களாம்... எந்த மையங்கள்ல பணியிடம் காலியா இருக்கிறதுங்கிற மேட்டரை மட்டும், அடிச்சு கேட்டாலும் யாரும் சொல்ல மாட்டேங்குறாங்களாம்... ஆளுங்கட்சிக்காரங்க, புரோக்கர்கள், அதிகாரிகள் கைகளில் மட்டும் காலியிட பட்டியல் இருக்காம்... அதனால் வேலைக்கு பணத்தோட அலையுறவங்க கட்சிக்காரங்கள பார்த்து காலியிட விபரம் கேட்கிறப்ப, உதவியாளருக்கு 2 லகரம், பொறுப்பாளருக்கு 4 லகரம் என பேரம் நடக்குதாம்...’’ என்றார்.
‘‘அவங்களே சம்பளம் கம்மியாதானப்பா வாங்குவாங்க...’’.
‘‘உண்மைதான்... பணம் கொடுக்கிறவங்களும், இதுக்கு முன்னால ஒண்ணு, ரெண்டு தான் வாங்குனாங்க... இப்ப எதுக்கு இவ்வளவு பணம் கேட்கிறீங்கனு கேட்டா, ‘‘அரிசி, பருப்பு, முட்டை கணக்குன்னு நீங்க எழுதி எடுக்குற காச எதுல சேப்பீங்க’’ன்னு திருப்பி கேட்குறாங்களாம்.... ஒவ்வொரு இடத்துக்கும் பல பேர் போட்டி போடுறதால தொகை கூடுறதுக்கும் சான்ஸ் இருக்காம்... தேர்தலுக்கு முன்பாக பெரும்பணம் கை சேருங்கிற சந்தோஷத்துல அதிமுக வட்டாரம் ஓவர் குஷியாக இருக்காம்... மேலும், காலியிடங்கள்ல விதவைகளுக்கு முன்னுரிமை இருக்கிறதால, விதவை சான்றிதழ் வாங்கவும் கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில மொய்க்குதாம்... அதுக்கும் ஈவு இரக்கமின்றி ஒரு கணக்கு போட்டு வசூலிக்கிற புரோக்கர் கும்பலும் ஒரு பக்கம் திரியுதாம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
‘‘கோவை அரசு துறைகளில் பணிகளே நடப்பதில்லையாமே..’’
 ‘‘கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் நீண்ட நாட்களாக விடுப்பில் உள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன்தான் இந்த பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். ஹரிகரனுக்கு இடமாற்றம் நிச்சயம் என்பதை முன்கூட்டியே அறிந்த அவர், விடுமுறையில் சென்றுவிட்டார். இன்னும் சில தினங்களில் புதிய கலெக்டர் வந்துவிடுவார் என்று பரபரப்பா பேசினாங்க; இப்ப என்னடான்னா, இன்னிக்கு அதிரடியா அறிவிச்சிட்டாங்க தெரியுமா? இதுவரைக்கும் ‘தலை’ இல்லாத காரணத்தால் மாவட்டத்தில் எந்த அரசுத்துறையிலும் பணி நடக்கறதே இல்லையாம். ஒவ்ெவாரு துறை கண்காணிப்பாளர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எல்லோருமே ஹாயாக சுற்றி வந்தாங்க; இனி அப்படி இருக்க முடியாது. முதியோர் உதவித்தொகை விண்ணப்பம், பட்டா மாறுதல், ஏழை பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை.... என எல்லா துறையிலும் பணியில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்து விட்டால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும். தேர்தல் பணியை காரணம் காட்டி, ஒரு வேலையும் நடக்காது. அதேநேரம், தேர்தல் கமிஷன் ஒதுக்கும் நிதியில், நிறைய ‘பில்’ அடிக்கலாம் என விவரம் அறிந்த ஊழியர்கள் காய் நகர்த்துகின்றனர். வடிவேல் ஒரு படத்தில், ‘கடையை எப்ப சார் திறப்பீங்க..’ என கேட்டு கலாய்ப்பார். அதேபோல், கோவை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், ‘எலக்‌ஷன் எப்ப சார் வரும்...?’ என கேட்டு கலாய்த்து வருகின்றனர். நல்லவேளை இப்போ புது கலெக்டர் வந்துட்டார்.
 ‘‘பிடிஓ அலுவலகத்தை ஆட்டி வைக்கிறாராமே ஓய்வுபெற்ற துணை பிடிஓ’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘ஆமா.. வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியத்தில் சொர்ணமான பிடிஓ காவேரிப்பாக்கத்தில் இருந்து மாதனூருக்கு பணியிட மாற்றம் செய்தபோது, பிடிவாதமாக திமிரிக்கு கேட்டு பெற்று வந்து பணியில் சேர்ந்தாராம். கிருஷ்ண பகவானின் அண்ணன் பெயரை கொண்ட ஓய்வுபெற்ற துணை பிடிஓவானவர் சொர்ணமானவருக்கு 10 ஆண்டுகளாக நட்பானவராம். அதை வைத்து தினமும் வேலூரில் இருந்து திமிரி ஒன்றியத்தில் சொர்ணமானவர் அலுவலகம் வந்து விடுவாராம். அங்கு அவரின் எதிரில் அமர்ந்துகொண்டு பைல்களில் குறிப்பெழுதுவது, அவருக்கு உத்தரவிடுவது என செயல்படுகிறாராம். இதனால் அலுவலக ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் என எல்லோரும் சொர்ணமானவர் பிடிஓவா, ரிட்டையர்டு ஆன அவர் பிடிஓவா என்று தலையை பிய்த்துக் கொள்கிறார்
களாம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்