SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-02-16@ 01:27:43

‘‘என்னப்பா எம்பி தேர்தல் வரப்போகுது... ஏதாவது பரபரப்பான செய்தி இருக்கா...’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘ம்ம்ம்... இருக்குப்பா... காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தலைவராக இருந்தவரு சோ.பாலகிருஷ்ணன். ராமநாதபுரம் மாவட்டத்துலயும் தனி செல்வாக்கோடு இருந்தவர். ‘சோபா’ என அனைவராலும் அழைக்கப்பட்டவர். காங்கிரஸ் கட்சியிலிருந்து தமாகா பிரிந்தபோது மூப்பனாருடன் சென்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக இருந்தவர்... அவரது மறைவுக்கு பிறகு அவரது மகன் தமாகாவில் தொடர்ந்து இருந்து வருகிறார்... காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்தும் தமாகாவிலே தொடர்ந்து இருந்து வந்தார்... தற்போது தமாகா மேற்கு மாவட்ட தலைவராக இருக்கிறார். தமிழக அரசியலில் தமாகாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாவட்டத்தில் இவருக்கு கணிசமான ஆதரவாளர்கள் இருக்காங்க... கட்சி தலைவர் வாசன் வரும்போதெல்லாம் மாவட்டத்துல தடபுடலாய் செலவு செய்வாரு... ஆனால், தனது தந்தை சோபா, சிலை திறப்பு விவகாரத்துல சில பிரச்னைகள் வந்தபோது, வாசன் எதையும் கண்டுகொள்ளவில்லை என்ற மனவேதனையில் இருந்து வந்தார். அதனால காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர், இவரை மீண்டும் கட்சியில் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தினாங்க... முதலில் யோசித்தவர் தற்போது தாய்க்கட்சியில் இணைவதற்கு தயாராகி வருகிறாராம்... காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை கொண்டு, தந்தை சிலையை திறப்பதற்கான வேலைகளையும் பார்த்துக்கிட்டு இருக்காரு.. விரைவில் தனது ஆதரவாளர்களுடன் இணைவார் என மாவட்டத்துல பரபரப்பாக பேசிக்கிட்டிருக்காங்கப்பா....’’ என்றார் விக்கியானந்தா.

'‘மாங்கனி மாவட்ட காம்ரேடுகள் மத்தியில் புகைச்சலாமே..’’ ‘‘உண்மைதான்.. மாங்கனி மாவட்ட இந்திய கம்யூ கட்சியில் தலைமை பொறுப்பில் இருக்கும் நிர்வாகி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி, அக்கட்சியில் உள்ள முன்னணி நிர்வாகிகள் பலரும் திடீரென கட்சியில் இருந்து வெளியேறிட்டாங்களாம். ஒவ்வொரு ஏரியாவிலும் உண்டியல் வசூலுக்கு செல்லும்போது, அந்தந்த பகுதி கிளை நிர்வாகிகளுக்கு முறைப்படி தெரிவித்து, அவர்களுடன் செல்வது தான் வழக்கமாம். ஆனால், இந்த தலைமை நிர்வாகி, தனியாக தனது பட்டாளத்தை கிளப்பிக்கொண்டு ஒரே சுருட்டாக வசூலில் இறங்கிவிடுவாராம். இப்படி பல இடங்களில் கை வைத்ததால், அதிருப்தியடைந்த இதர நிர்வாகிகள், கட்சியின் மாநில தலைமைக்கு தகவலை தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கிருந்தும் அந்த நிர்வாகிக்கு ஆதரவாக குரல் வந்திருக்கு. இதனால், ஒரேயடியாக கூடாரத்தை காலி செய்துவிடுவோம் எனக்கூறி 1,500க்கும் மேற்பட்டோர் வெளியேறி தனியாக கூட்டம் நடத்தி, ஆர்எஸ்பி பார்ட்டியில் இணைந்து கொண்டார்களாம். தேர்தல் நேரத்தில் இதர நிர்வாகிகள் காட்டிய இந்த அதிரடியால் தற்போது, அந்த புகாருக்குள்ளான நிர்வாகியின் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருக்குன்னு பரபரப்பா பேசிக்கிறாங்க‘‘ என்றார் விக்கியானந்தா. ‘‘கோவையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலக டிரைவர் பத்தி பரபரப்பான தகவலா வந்துட்டிருக்கே..’’

‘‘இந்த டிரைவர் இங்குள்ள ஊழியர்களை மிரட்டி, அவ்வப்போது வசூல் குவிக்கிறார். எப்படி சாதாரண சாரதியால், இப்படி மிரட்டி பணம் குவிக்க முடிகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது. உண்மைதான். இவர், சாதாரண டிரைவர் அல்ல, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவரின் பெர்சனல் டிரைவர் ஆவார். பரமசிவன் கழுத்து பாம்பு... என்பதால் இவரிடம் யாரும் பகைத்துக்கொள்வதில்லை. ஆனாலும், எத்தனை நாள்தான் இப்படி மிரட்டலுக்கு பயந்து, பணம் கொடுக்கிறது... என கொதித்து எழுந்த ஊழியர்கள் சிலர், வாரிய ேமலிடத்துக்கு புகார் மனு தட்டிவிட்டனர். இதன் எதிரொலியாக இந்த சாரதி, சமீபத்தில் சேலம் ஒகேனக்கல் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் இவர், யார் யாரை பிடிக்க வேண்டுமோ, அவர்களை எல்லாம் பிடித்து, மீண்டும் கோவைக்கே வந்துவிட்டார். தனது உருட்டல், மிரட்டல், வசூல் என எல்லாவற்றையும் மீண்டும் துவக்கிவிட்டார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள, நிறைய பிளாக்குகள் பாழடைந்து விட்டதால், இடித்து அகற்றப்பட்டு விட்டது. இன்னும் 50 சதவீத வீடுகள் இடிக்கப்படாமல் உள்ளன. இங்கு குடியிருக்கும் பல அரசுத்துறை அதிகாரிகள், ெவளிமாவட்டங்களுக்கு இடமாறுதலாகி ெசன்றுவிட்டனர். ஆனாலும், வீட்டை ஒப்படைக்கவில்லை. உள்வாடகைக்கு விட்டு, இரண்டு மடங்கு வாடகை சம்பாதித்து வருகின்றனர். இந்த தகவலும் சாரதி காதுக்கு போக, இதிலும் அவர் காசு பார்க்க துவங்கிவிட்டார். பூனைக்கு மணி கட்டுவது யாரோ என இத் துறை ஊழியர்கள் புலம்புகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியிருக்கே.. இதுக்கு வரவேற்பு எல்லாம் எப்பிடி’’‘‘இப்போது இருக்கின்ற நகராட்சி பகுதிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றாலும் இதனுடன் வரும் நாட்களில் அருகே உள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளை இணைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு ஆதரவு போன்று எதிர்ப்பும் இருந்து வருகிறது. குறிப்பாக அழிக்கால், பிள்ளைதோப்பு, ராஜாக்கமங்கலம் துறை, பெரியகாடு, பொழிக்கரை, கேசவன்புத்தன்துறை, புத்தன்துறை, பள்ளம், அன்னை நகர், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஊராட்சி, பேரூராட்சிகள் நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் தங்களுக்கான தற்போது இருந்து வருகின்ற ஊராட்சி தலைவரின் பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் கடலோர பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஆரம்பம் முதலே மக்கள் மத்தியில் எதிர்ப்பும் இருந்து வருகிறது. மேலும் தங்கள் பகுதியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று தெரிவித்து போராட்டம் நடத்தவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்