SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீர சல்யூட்

2019-02-16@ 01:19:26

காழ்ப்புணர்ச்சியை தனக்கு தானே வளர்த்துக்கொண்டு அதை நியாயப்படுத்தி அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்துக்கு பயன்படுத்தி கொள்ளுதல் என்பது எந்த நிலையிலும் சகித்துக்கொள்ளமுடியாத செயலாகும். தீவிரவாத இயக்கங்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள அப்பாவி மக்களை கடந்த ஆண்டுகளில் குண்டு வைத்து கொன்று அதில் மகிழ்ச்சி அடைந்தது. சில ஆண்டுகளாக இது போன்ற சம்பவங்கள் தலைதூக்காமல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அதன் பிறகு அவர்களின் குறி இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களின் மீது திரும்பியது. பாகிஸ்தான் ஆதிக்கம் நிறைந்த ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் மீது தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தினர். உரி தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.

அதன் பிறகு நடந்த கோர சம்பவம் தான் புல்வாமா குண்டுவெடிப்பு. ஜம்முவில் இருந்து 2,500 படைவீரர்கள் 78 வாகனங்களில்  நகருக்கு திரும்பும் போது திட்டமிட்டு காத்திருந்த ஜெய்ஷ்இமுகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி வெடிபொருட்கள் ஏற்றிய வாகனத்தை ஓட்டிவந்து ராணுவ பஸ் மீது மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தினான். இதில் 40க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் என்றே இதை குறிப்பிடலாம். நெஞ்சுரம் மிக்க நமது ராணுவ வீரர்கள் முன் நேருக்கு நேர் நிற்க துணிவின்றி கோழைத்தனமாக பதுங்கி தாக்குதல் நடத்தியுள்ள தீவிரவாதிகளின் செயல் கண்டனத்துக்குரியது.

வெடிபொருள் வாகனத்தை இயக்கி தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி ‘என்னை நீங்கள் பார்க்கும் போது சொர்க்கத்தில் இருப்பேன்’ என்று வீடியோவில் பதிவு செய்துள்ளான். இப்படி இளைஞர்களை மூளைச்சலவை செய்து நாட்டின் அமைதியை துண்டாடும் தீவிரவாத அமைப்பை வேரறுக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். ஜம்மு காஷ்மீரில் மக்களிடையே பிரிவினையை உருவாக்கி அதனால் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் மறைமுக வேலைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. அந்நாடு ஒரு ஆக்கப்பூர்வமான அண்டை நாடாக நடந்து கொள்ள வேண்டும். மதத்தின் பெயரால் இந்திய ஜனநாயகத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அவர்களது செயலுக்கு ஒருநாளும் வெற்றி கிடைக்காது.

அதே நேரம், ஜம்மு காஷ்மீர் எப்போதும் பதட்டமான மாநிலம் என்பதை ராணுவத்தினர் நன்கு அறிவர். அப்படி இருக்கும் போது உளவுத்துறை அறிக்கை இல்லாமல், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி எப்படி ஜம்முவில் இருந்து ஒரே நேரத்தில் படைகள் புறப்பட்டு செல்ல அனுமதித்தனர் என்று புரியவில்லை. பாதுகாப்பான பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு வாகனம் இருப்பதை ஏன் யாரும் கவனிக்கவில்லை என்றும் கேள்வி எழுகிறது. எனவே இது குறித்தும் துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தானுக்கு அளித்த வர்த்தக சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பற்ற நாடு என்று அமெரிக்காவும் அறிவித்துள்ளது.

இந்த தீவிரவாத செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், துணை ராணுவ வீரர்களின் உயிர்தியாகம் வீண் போகாது. தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவே கோபத்தில் இருக்கிறது என்று கூறியுள்ள பிரதமரின் உறுதி உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஆறுதலை அளித்துள்ளது. தங்கள் வாழ்க்கை கனவுகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு தன்னலமின்றி நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த துணை ராணுவ வீரர்களுக்கு இந்தியா சார்பில் ஒரு ‘வீர சல்யூட்’ செய்வதே அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்