SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாங்கனி மாவட்டத்துல எல்லா தொகுதிகளையும் பிடிக்க விவிஐபி வகுக்கும் திட்டத்தை சொல்கிறார் wiki யானந்தா

2019-02-15@ 00:23:12

‘‘நாடாளுமன்ற தேர்தல்ல எப்படியாவது ஜெயிக்கணும்னு விவிஐபி குறி வைச்சு பல்வேறு டீம்களை களத்தில் இறக்கி இருப்பதாக சொல்றாங்களே, அப்படியா...’’  என்றார் பீட்டர் மாமா.‘‘நாடாளுமன்ற தேர்தலில் மாங்கனி, நாமம் பெயர்கொண்ட மாவட்டங்களில் ஒரு சீட் கூட மற்ற கட்சிகள் ஜெயிக்க கூடாதுன்னு பல்வேறு பொய்களையும்  கட்டுக்கதைகளையும் அவிழ்த்து விடறாங்களாம். பல்வேறு கட்சியில் பவர்புல்லா இருந்துட்டு ஒதுங்கிட்டவங்கள இவர் நம்ம கட்சியில சேர்ந்துட்டாரு...  விவிஐபியை ரகசியமா சந்தித்து பேசிட்டாருன்னு வாட்ஸ்அப்ல தகவல தட்டி விடறாங்களாம்... அப்புறம், பழைய வழக்கு இருந்தா சத்தமே இல்லாம வாபஸ்  வாங்குற வேலையும், கரன்சி கொடுத்து கரெக்ட் பண்ற வேலையும் கனகச்சிதமாக நடந்துட்டு வருதாம்... அடிப்பொடிகள் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா,  அண்ணன் இருந்தால் அடுத்த 2 வருஷத்துல நாம கோட்டீஸ்வரனாக மாறிடலாம்... அதனால நம்ம மாவட்டத்துல எதுவும் மிஸ் ஆகக் கூடாது... அண்ணனுக்கு  ஒன்னு ஆச்சுன்னா, அவருக்கு பிரச்னை இல்லை... நாம தான் மாதா மாதம் கரன்சியை பார்க்க முடியாதுனு தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கிட்டாங்களாம்...  அப்போது அவங்க செய்த ஒரு வேலை குக்கர் தரப்புக்கு சிக்கலை உண்டாக்கிடுச்சாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யாரு அந்த நபரு..’’‘‘ அதுவா, வாட்ஸ்அப்பில் கிளம்பிய வதந்தியை உண்மைனு நிைனச்சு குக்கர் தரப்பு அரண்டு போய், மாஜி அமைச்சர் ஒருத்தரை தொடர்புகொண்டு என்னப்பா  வாட்ஸ்அப்ல வந்தது உண்மையான்னு கேட்டுட்டு இருக்காங்க. இப்படி நூறு போன்கள் வந்துடுச்சாம்... அவங்களுக்கு பதில் சொல்லியே ஓய்ந்துட்டாராம்... அதற்கு  அவரு, ‘நான் அங்கெல்லாம் போக மாட்டேன்.  எல்லாம் விவிஐபி யோசனைப்படி இலைகட்சிக்காரங்க கிளப்பி விடுகிற வதந்தி. விவிஐபியை அம்மையார் கிட்டே  அறிமுகப்படுத்தினதே நான் தான். என்னிடம் பாட்சா பலிக்காது என்று சொன்னாராம்... இதையடுத்தே குக்கரில் இருந்து சவுண்ட் வந்ததாம்...’’ என்றார்  விக்கியானந்தா.
‘‘ஜாக்டோ-ஜியோவினர் மீது திடீர்னு அரசுக்கு என்ன கருணை பார்வை...’’ என்று சந்தேகத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இப்படிதான் நடக்கும்னு எல்லோருக்கும் தெரியும்... அதைவிட முக்கியம் தேர்வுகள் சுமுகமாக நடக்கணும்னு மற்ற ஆசிரியர் சங்கங்கள், அதிகாரிகள் மற்றும்  பொதுமக்கள் கவலைப்படறாங்க... அதனால நடவடிக்கையை கைவிட்டால்தான் பொதுத்தேர்வை சுமுகமாக நடத்த முடியும்னு சொல்றாங்க... அதனால தான்  போராடினவங்க எல்லோர் மீதும் எடுத்த நடவடிக்கையை ரத்து பண்ணினாங்களாம்... எல்லாம் சுயநலம்தான்... ஓட்டுபோடும் பெற்றோரின் கோபத்தை திசை  திருப்பவே இப்படி ஒரு நடவடிக்கை என்று சில ஆசிரியர்கள் பேசியதை கேட்க முடிந்தது...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஊருக்குள்ள போக முடியலைனு அமைச்சரே பேசினாராமே..’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘சென்னையில ஒரு ஊருக்குள் போக முடியல... குரூப்பாக சேர்ந்து உள்ளே விட மாட்டேன்கிறாங்க... இதனால தான் கட்டணம் அதிகமாக வருதுனு  சொல்றாங்க... இவங்க கையில தான் போலீஸ் இருக்கு... மின் திருட்டு தடுப்பு பிரிவு இருக்கு... விஜிலென்ஸ் இருக்கு... இத்தனையும் வைச்சுக்கிட்டு ஒரு  கவர்மென்ட்டே ஊருக்குள் நுழைய முடியவில்லை என்று சொல்வதற்கு அமைச்சர் எதுக்கு என்று அத்துறையின் ஊழியர்களே வருத்தப்பட்டு பேசியதை  கேட்கும்போது எனக்கும் வருத்தமாகதான் இருந்தது...’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.

‘‘சிவகங்கையில என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சிவகங்கை அரசு மருத்துவமனையை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாத்தினாங்க... மாத்தியும் எந்த பிரயோஜனமும் இல்லையாம்... விபத்து  உள்பட எந்த சிகிச்சைக்கு சென்றாலும், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனராம்... எலும்பு மூட்டு பிரச்னைன்னா, மதுரையில் உள்ள குறிப்பிட்ட  தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேறு பரிந்துரை செய்யறாங்களாம். இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லையாம்... சரி... பிரச்னையை  டீன்கிட்டே சொல்லலாம் என்று போனால், அவரும் கண்டுக்கிறதே இல்லையாம்... இது எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு சிவகங்கையில பிரச்னை பெரிய  அளவில் வெடிக்குமாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எது எதுலதான் பணம் சம்பாதிக்கிறது என்ற விவஸ்தையே சிலருக்கு இல்லாம போச்சு...’’ என்று வருத்தப்பட்டார் பீட்டர்மாமா.‘‘ஈரோடு ஊஞ்சலூரில் உள்ள கவர்மென்ட் ஸ்கூலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட கல்வி அலுவலர், அங்கு பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் மீது  மாணவிகள் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தினாராம். ஆசிரியர் தங்களிடம் ஆபாசமாக நடந்துகொள்வதாக மாணவிகள் சிலர், ஒரு மாணவியின்  தலைமையில் சென்று, தலைமை ஆசிரியரிடம் கொடுத்த புகாரின்பேரில் இந்த விசாரணை நடந்துள்ளது. இந்த விசாரணையில், ஆசிரியர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட  மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த தகவல் வெளியே கசிய ஆரம்பித்ததும், உள்ளூர் ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலர் இந்த சம்பவத்தை வைச்சு எப்படி பணத்தை கறக்கலாம்னு யோசிக்க  ஆரம்பிச்சுட்டாங்க... சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு முன்பாக, அந்த ஆசிரியரையும், பாலியல் புகார் அளித்த அந்த மாணவி தரப்பையும் தனித்தனியாக சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆசிரியரிடம் போக்சோ சட்டத்தையும், மாணவி தரப்பிடம் எதிர்காலத்தையும் காரணம் காட்டி, சில லகரங்களை  ஆட்டையைப்போட்டு விட்டு, அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர். இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததும், இதுபற்றி ரகசிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட  நபர்கள் யார், யார் என பட்டியல் தயாரிக்க மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டார். அதன்படி, உள்ளூர் உளவுப்பிரிவு போலீசார் களம் இறங்கியுள்ளனர். பணம்  வாங்கிட்டு கம்பி நீட்டுனவங்க இப்போ பயந்துபோய் இருக்காங்களாம்...’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்