SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விருப்ப ஓய்வு பெற்ற பிறகு வில்லா வாங்க இப்போது கல்லா கட்டும் அதிகாரி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2019-02-14@ 00:38:02

‘‘தமிழகம் முழுவதும் விவசாயிகள் தண்ணீர் இல்லாமலும் விவசாயம் செய்ய முடியாமல் வேதனையில் இருக்கிறார்கள். ஆனால்...’’ என்று இழுத்தார் பீட்டர்  மாமா.
‘‘ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் மட்டும் எப்படி செழிப்பா இருக்காங்கன்னுதான கேட்க வருகிறாய்...  அவர்கள் வீடு மேல வீடாக வாங்கி குவிக்கிறார்கள்...  தங்கமாக மின்னுதுன்னு வேளாண் பொருட்களை வாடகைக்கு எடுக்க செல்லும் விவசாயிகள் பேசிக்கிறாங்க. இது குறித்து விசாரித்தபோது, தமிழக வேளாண்  துறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளாண் அலுவலருக்கு உதவி இயக்குனராக பதவி உயர்வு மற்றும் உதவி இயக்குனர் 23 பேர் என மொத்தம் 140  பேருக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் வழங்கப்பட்டது. இதில் பதவி உயர்வுக்கான பட்டியலில் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்காமல்,  லட்சக்கணக்கில் பணம் கொடுப்பவர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டதாம். பணம் தராதவர்கள் வேறு  மாவட்டத்திற்கு தூக்கி அடிக்கப்பட்டார்களாம். இது வேலூர் மாவட்ட வேளாண்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி வந்த பணத்துல தான் வீடும்,  தங்கமும் வாங்கி குவிக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒருத்தரின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்பவும் பிடிச்சுருக்கு... ஆனால் இலை கட்சிக்கு பிடிக்கலையே...’’ என்று குசும்பு சிரிப்பு சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘ம் அதீத தன்னம்பிக்கைதான் காரணம். இலை தோற்கும்... வேறு கட்சிக்கு வெற்றி பெற வாய்ப்பே இல்லைனு சொல்லிட்டு வர்றாரு குக்கர்... ஆனால் அவர்  கட்சி வெற்றி பெறுமா. கூட்டணிக்கு இவர் கதவு திறந்து வைச்சும் ஒரு ஈ கூட போகவில்லை என்பதை எல்லாம் சொல்ல மறந்துவிடறாரு... அப்புறம் இவர்  கட்சியில் இருந்தும் பலர் தேர்தலுக்கு முன்பே வேறு முகாம்களுக்கு தாவ ஆரம்பிச்சுட்டாங்க... யார் போனாலும் நான் மட்டும் இருந்து கட்சியை வழி  நடத்துவேன்னு சொல்றாரு... வாடிக்கையாளர் இல்லாத கடையில டீ ஆற்றி என்ன பயன்னு அவங்க கட்சி தொண்டர்களில் சிலரே விரக்தியோடு  பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விஆர்எஸ்சுக்கு முன் வில்லா வாங்க நினைக்கும் அதிகாரியை பற்றி சொல்லுங்களேன்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதால் அதிகாரிகள் நிலையிலான பணியிட மாற்றங்கள், பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றங்கள் வேலூர்  மாவட்டத்துல வேகமாக நடக்குது... இதில் பிடிஓக்கள், துணை பிடிஓக்களுக்கான பணியிட மாற்றம், பதவி உயர்வுடன் கூடிய மாற்ற உத்தரவை வரும் 15ம்  தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. அதை சாதகமாக பயன்படுத்தி  வேலூர் மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெறும்  பிடிஓக்கள், துணை பிடிஓக்கள் பட்டியல், பதவி உயர்வு பெறும் துணை பிடிஓக்கள் பட்டியல் தயாராகி வருகிறது. இதை வைத்து, இவர்களுக்கு உத்தரவு வழங்கும் இடத்தில் பொறுப்பு அதிகாரியாக உள்ள ‘மில்’லானவர் பெரிய அளவில் கல்லா கட்டி வருகிறாராம். ஏற்கனவே, கல்லா கட்டிய விவகாரத்தில் விஜிலென்ஸ் ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் இருக்காராம்... விஜிலென்ஸ் ரெய்டு வருவதற்குள் ‘விஆர்எஸ்’  வாங்கி அதற்கு அப்புறம் கலெக்‌ஷன் காசில் வில்லா வாங்கிவிட வேண்டும் என்று  நினைத்து விருப்ப ஓய்வில் செல்ல கடிதம் கொடுத்துள்ளாராம்.

இவர்  இம்மாதம் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார் என்கிறார்கள். அதற்குள் இந்த வசூலை செய்து முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளாராம்...’’  என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா.  ‘‘குமரியில அதிகாரிகள் நடுக்கத்தில் இருக்காங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குமரியில கடந்த மாதம் கலெக்டர் தலைமையில் நடைபெற வேண்டிய விவசாயிகள் கூட்டம், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தல. கூட்டத்துக்கு  அதிகாரிகள் வந்துவிட்டால் துறையே ஜாக்டோ ஜியோவிற்கு ஆதரவு என்ற முத்திரை வந்துவிடுமோ என்ற பயத்தால் அலுவலகத்தை மூடிவிட்டு கூட்டத்துக்கு  அதிகாரிகள் வர தயக்கம் காட்டினார்கள். இப்போது மீனவர்களின் கோபத்தில் இருந்து தப்பிப்பது எப்டினு யோசிக்கிறாங்க.. அதுக்கும் நடுநடுங்கும் குமரி அதிகாரிகள் காரணத்தை கண்டுபிடிச்சுட்டாங்க...  அதாவது, நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் அடுத்த கூட்டங்களும் நடத்த இயலாத நிலை ஏற்படும். கோடைகாலம் தொடங்குவதால் விவசாயிகள்  பலதரப்பட்ட பிரச்னைகளை பற்றி பேசி தீர்வு காண வேண்டியிருப்பதால், அடுத்த மூன்று மாதத்திற்கு கூட்டங்கள் நடத்த இயலாது..

இப்படியே  தள்ளிப்போட்டுவிட்டால் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம் என்பது அதிகாரிகளின் ஐடியா... இல்லை கூட்டம் நடந்தால் எங்களின் குறைதீரும் என்பது  விவசாயிகளின் கவலை... எது நடக்கப்போகிறது என்பதை கலெக்டர் மனது வைக்கனும்னு விவசாயிகள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.‘‘சென்னை அம்பத்தூர்ல குடிநீர் வாரிய இணைப்பு வழங்குவதில் பெரிய அளவில் முறைகேடு நடக்குதாமே..’’‘‘ஆமா..அங்கு பொறியாளரா தந்தை-மகன் கடவுள்களின் பெயரை ஒன்றாக கொண்ட அதிகாரி உள்ளார். கீழ்தளம் மற்றும் 3 தளம் கொண்ட கட்டிடத்திற்கு  விதிகளை மீறி அனுமதி கொடுக்க வேண்டும் என்று கீழ் அதிகாரிகளை இவர் மிரட்டுகிறாராம். இந்த அனுமதிக்காக பல லட்சம் ரூபாய் பணம் லஞ்சமாக வாங்கிக்  கொள்கிறாராம். இதை யாருக்கும் பங்கிடாமல் மொத்தத்தையும் சுருட்டி விடுகிறாராம். முறையில்லாமல் அனுமதி வழங்கினால் தாங்கள் பின்னால் மாட்டிக்  கொள்வோம் என்று கீழ்நிலை ஊழியர்கள் பயப்படுகிறார்களாம். அனுமதி அளிக்காவிட்டால் இவர் மிரட்டுகிறாராம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல்  அதிகாரிகள் விழி பிதுங்கி வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-05-2019

  20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்