SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயம்பேடு கட்சியின் கூட்டணி கணக்கிற்கு தொண்டர்கள் ரியாக்‌ஷன் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-02-13@ 00:15:47

‘‘என்ன விக்கி ரொம்ப குஷியா இருக்கீங்க போலிருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஒரே குழப்பமா இருக்கு... அது எப்படி சாத்தியம்..’’ என்று கேட்டார் விக்கியானந்தா.‘எது எப்படி சாத்தியம்...’’‘‘ஏழைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்துக்குள் தகுதியானவர்கள், நிராகரிப்பு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் எப்படி, எப்போது  மனு கொடுத்தார்கள்... யாரிடம் கொடுத்தார்கள் என்றே புரியவில்லை. அரசு ஒரு திட்டத்தை அறிவித்தால், அதை செயல்படுத்த அதற்கு அரசாணை, நிதி ஒதுக்கீடு என்று குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்... ஏன் கஜா புயல் பாதிப்பை எடுத்துக் கொள்ளுங்க. இன்னும் சீரமைப்பு பணியும்,  பாதிக்கப்பட்டவங்களுக்கு நிவாரணமும் முழுசா போய் சேரவில்லை என்று அப்பகுதி மக்களே புலம்பறாங்க... இந்த நிலையில 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு நள்ளிரவில் மக்கள் மனு கொடுத்து, அதிகாரிகள் அதை அதே நள்ளிரவில் வீடு வீடாக போய் ஆய்வு செய்து அதிகாலையில் அரசுக்கு அறிக்கை கொடுக்கும் அளவுக்கா  அரசு இயந்திரம் சுறுசுறுப்பாக வேலை செய்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கு...’’ என்றார் விக்கியானந்தா.‘‘இதுபோன்ற ஒரு அறிவிப்பு ெகாண்டு வருவது குறித்து முடிவு செய்துவிட்டு, ரகசியமாக தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வகையில் செய்து இருப்பாங்க..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சென்னை பட்டியலை பார்த்தாலே தெரிகிறதே... மைக் தலைவர் உள்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் இருக்கும் பகுதியில் இருந்து அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது, திட்டம் அறிவிப்பதற்கு முன்பாக முழுக்க  முழுக்க ரகசியமாக நடந்த கணக்கெடுப்பு... என்றார் விக்கியானந்தா.‘‘மருத்துவமனையில் ஆபரேஷன் தான் நடக்கும்... ராஜாங்கம் நடக்குதாமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம்... கோவை அரசு மருத்துவமனையில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் பினாமி ெபயரில் கம்பெனி நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. இவர் மீது மேலிடத்துக்கு ஐந்து புகார் மனு அடுத்தடுத்து ெசன்றுள்ளது.  அதாவது, அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்கும்போது, இந்த அதிகாரி குறிப்பிடும் கம்பெனியிடம் மட்டும் ஆர்டர் ெகாடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. இதன்மூலம், இந்த அதிகாரி கரன்சிகளை குவிக்கிறார் என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக விரைவில் துறை ரீதியான விசாரணை துவங்க வாய்ப்பு இருப்பதாக சொல்றாங்க... ஆனாலும் தான்  ஈட்டிய வருவாயில் பாதியை மேலிடத்துக்கு வெட்டிய தைரியத்தில்தான் அவர் இப்படி செய்வதாகவும் அதே மருத்துவமனை வட்டாரங்கள் சொல்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விவிஐபியின் ஆதரவாளர்களில் சட்டத்துறையில் இருப்பவர்களிடையே கோவையில் முட்டல் மோதல் இருந்து வருதாமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிவில், கிரிமினல், போக்குவரத்து பிரிவு, தொழிலாளர் நலன் என 50க்கும் மேற்பட்ட கோர்ட் உள்ளது. இதில், ஒவ்வொரு கோர்ட்டுக்கும் அரசு வக்கீல் நியமனம் மூன்று  ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். இம்முறை நடந்த அரசு வக்கீல் தேர்வின்போது இலை கட்சி வக்கீல்கள் 99 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இலையில தேனியும், மாங்கனியும் இணைந்து செயல்பட்டாலும்...  சட்டத்துறையில் இருக்கும் அவர்களின் ஆதரவாளர்களிடையே பிரச்னை ஓய்ந்தபாடில்லை... இந்தமுறை நடந்த தேர்வில் மாங்கனி மாவட்டத்தை சேர்ந்தவரின் அணிக்குதான் அரசு வக்கீல் பதவி வழங்கப்பட்டுள்ளது. தேனிக்காரர் அணியை சேர்ந்த ஒருவருக்கு கூட பதவி வழங்கவில்லையாம்... இது கோவையில் பெரிய புகைச்சலை ஏற்படுத்தி இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘குக்கர்ல இருந்து சத்தமே வரலயே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நாற்பது தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த அவர் தயாராக இருந்தாலும், கூட்டணி வைத்து 20 தொகுதியில் போட்டியிட தயாராக இருந்தாலும் கட்சிக்காரர்கள் யாரும் தயாராக இல்லையாம்... இந்த கையில் தேர்தல்  செலவுக்கான செக்... அந்த கையில் விருப்ப மனு என்ற முடிவில் இருக்காங்களாம்... அப்புறம் அந்த கட்சிக்கு பூத் ஏஜென்ட்டுகள் கூட போதுமான அளவுக்கு இல்லையாம்... சில மாவட்டங்களில் மட்டும் ஓரளவுக்கு பரவாயில்லை  என்கிற நிலைதான் நீடிக்கிறதாம். பூத் ஏஜென்ட் இல்லாத கட்சி கூட கூட்டணியான்னு லெட்டர் பேடு கட்சிகள் எல்லாம் கேட்பதால குக்கர் தவிக்குதாம்... சில லெட்டர் பேடு கட்சிகள் நிறைய கிடைக்கும்னு கூட்டணி பேச போனாங்களாம்... அவரு இந்த முைற  உங்களுக்கு சீட் கிடைக்காது... நல்லா வேலை செய்தீங்க என்றால் சட்டசபை தேர்தலில் பார்க்கிறேன்னு வெறும் கையோடு அனுப்பினாராம்.

அந்தம்மா உயிரோடு இருந்தபோது சீட் இல்லை என்றாலும் வந்தவங்களை நல்லா கவனிச்சு அனுப்பினாங்க... இவரிடம் வந்ததற்கு நமக்கு பெட்ரோல் வேஸ்ட், டைம் வேஸ்ட் என்று கூறி அங்கிருந்து வேகமாக  கிளம்பினாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோயம்பேடு கட்சி பூ கட்சியுடன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை இப்போது அம்பலத்துக்கு வந்துவிட்டது போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஆமாம்.. தனித்து ேபாட்டியிடுவார்கள் என்று கட்சி தொண்டர்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும்போது அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பூ, இலை கட்சியோட கூட்டணி குறித்து பேசிக்  கொண்டிருக்கிறோம்னு பேசினாராம்... ஆசையோட கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவங்க பூ கட்சி கூட கூட்டணியா... ஏற்கனவே நம்மளை தோற்கடிச்சுட்டாங்க.. இன்னொரு பக்கம் ஊழல்ல சிக்கி தட்டுத்தடுமாறிக்  கொண்டிருக்கும் இலை கட்சியோட கூட்டணியா... ஊழலை ஒழிக்கணும்னு பேசி வரும் நாம, இப்போது போய் அவர்களிடம் கூட்டணி வைத்து எந்த முகத்துடன் மக்களை சந்திப்பது என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டு  சோகமான முகத்துடன் திரும்பினார்களாம்...’’என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்