SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முல்லைப்பெரியாறு அணை பற்றிய ஆய்வறிக்கைக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

2019-02-12@ 01:43:01

புதுடெல்லி: முல்லை பெரியாறு பகுதியில் ஆய்வறிக்கை தயார் செய்ய கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என  உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவையும் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரளா திட்டமிட்டு வருகிறது. அதற்கான ஆய்வு பணிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் கடந்த சில  வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கடந்த மாதம் 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தில்  தொடரப்பட்டது. அதில், “முல்லை பெரியாறு அணை முழு பாதுகாப்போடு உள்ளதால் புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம்  தெளிவாக குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது.

 இதற்கு தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பில் ஆய்வு பணிக்காக அனுமதியும் வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும்’’  என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அப்துல்நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே தனது வாதத்தில், “முல்லைப் பெரியாறு பகுதியில் கேரள அரசு ஆய்வறிக்கை  தயாரிப்பதன் நோக்கமே புதிய அணை கட்டுவதே ஆகும். இது நீதிமன்ற அவமதிப்பாக தான் கருதப்படும்’’ என்றார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள அரசு  வாதத்தில், “முல்லைப் பெரியாறு பகுதியில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் புதிய அணை கட்ட மாட்டோம்.

 இதுதொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம்’’ என வாதிட்டார். இந்த உத்திரவாதத்தை ஏற்றுக்கொள்வதாக நீதிபதிகள்  தெரிவித்தனர்.இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், “முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு ஆய்வறிக்கை தயார் செய்ய மத்திய அரசு கொடுத்த  அனுமதிக்கு தடை விதிக்க முடியாது. மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணி எதுவும் நடைபெறவில்லை. அப்படி இருக்கையில் அங்கே நீதிமன்ற  அவமதிப்பு நடைபெற்றதாக தெரியவில்லை’’ என்று கூறி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்