SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பூரில் அவமானப்படுத்தியதற்கு பூ தலைவரை டெல்லியில் பழிவாங்கிய தம்பி குறித்து சொல்கிறார் wiki யானந்தா

2019-02-12@ 01:15:12

‘‘ஏறக்குறையை ஸ்லீப்பர் செல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கி விட்டாங்க போலிருக்கே...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘வெளியே வந்தால் பரவாயில்லையே... ஸ்லீப்பர் செல்களில் முதன்மையானவர் தம்பிதான்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன் இல்லையா... அது இப்போது  உண்மையாகி இருக்கு... பூவும் இலையும் சேராமல் தடுக்கும் முயற்சி ரகசியமாகவும் நேரடியாகவும் முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை... இதனால்  வெளிப்படையாக பூ கட்சி ஆட்சியை விமர்சித்து வந்தார்... அவர் யாருடைய பின்னணியில் இருந்து செயல்படுகிறார் என்று மத்திய உளவுத்துறை விரிவான  அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியதாம்... அவர்கள் தம்பி விஷயத்தில் உஷராக இருக்க வேண்டும் என்று இலை தலைமையை எச்சரித்தனர்... இதனால்  பெரும்பாலான கொள்கை முடிவுகளில் தம்பியை சேர்ப்பதில்லை. நாடாளுமன்ற தேர்தல் பணியில் கூட டம்மி பதவியை ஒதுக்கி இருக்காங்க...

இந்த விஷயமே தம்பி வயிற்றில் ஆசிட் போல சுரந்து வந்தது... இந்நிலையில் திருப்பூரில் நடந்த அரசு விழாவில் தம்பிக்கு இடமில்லை... தன்னை மேடையில்  உட்கார வைத்தால் எப்படியும் பூ கட்சி தலைவரை கண்டமேனிக்கு வறுத்தெடுக்கும் முடிவில் இருந்ததால், கடைசி நேரத்தில் அவரை கவுத்துவிட்டனர்...’’’  என்றார் விக்கியானந்தா.‘‘அப்புறம் என்னாச்சு...’’ என்றார் பீட்டர் மாமா.‘திருப்பூர்ல பேசினா பேச்சு காற்றோடு போகும்... எனக்குனு ஒரு இடம் இருக்கு...  அங்கே பார்த்துக்கிறேன் என அருகில் இருந்தவர்களிடம் புலம்பினாராம்... இதை கவனித்த தம்பியின் அடிப்பொடிகள், அண்ணே நீங்க டெல்லிக்கு போங்க... அங்க  நீங்க எது பேசினாலும் ஒரு எழுத்து மாறாமல் நாடாளுமன்ற புத்தகத்தில் ஏறும்... இந்திய அளவில் நீங்க பெரிய அளவில் பேசப்படுவீங்க... எல்லா கட்சியும்  இருக்கும்போது பேசினால், பூவும் இலையும் கூட்டணி அமைக்க முடியாத அளவுக்கு உங்கள் பேச்சு இருக்கணும்னு உசுப்போற்றி விட்டாங்களாம்... அதுதான் நேற்று டெல்லியில் நடந்ததாம்... தன்னை திருப்பூரில் பேசவிடாமல் அவமானப்படுத்தியவருக்கு டெல்லியில் பேசி அதிர வைத்தாராம்...’’ என்று  அவரது அடிப்பொடிகள் சொல்லி சிரிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.‘‘அல்வா மாவட்டடத்துல என்ன விசேஷம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘நெல்லை காங்கிரசில் கோஷ்டி அரசியலுக்கு பஞ்சமே இல்லை. இளங்கோவன், சிதம்பரம், திருநாவுக்கரசர் என பட்டியல் நீளும். திருநாவுக்கரசர் காங்கிரஸ்  தலைவராக பொறுப்பேற்ற உடன் முன்னாள் தலைவர் இளங்கோவனால் நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களை மாற்றினார். அல்வா மாவட்டத்தின் மாநகர்  மாவட்ட தலைவராக தனக்கு மிகவும் நெருக்கமானவருக்கு பதவி வழங்கினார். இந்த நியமனத்தை எதிர்த்து போர்க்கொடி தூக்கியவர்கள் கட்சி கட்டுப்பாட்டை  மீறியதாக நீக்கப்பட்டனர். தற்போது அழகிரி மாநில தலைவரானதால், இளங்கோவன் ஆதரவாளர்கள் மீண்டும் கட்சி அலுவலகத்திற்கு படையெடுக்கத்  தொடங்கியுள்ளனர். இவர்கள் தங்கள் வலிமையை நிரூபிக்க பிரியங்காவை அவதூறாக பேசியதாக சாமியானவரை கண்டித்து கட்சி அலுவலகம் முன்பு  போராட்டம் நடத்தினர்.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாவட்ட துணைத்தலைவரும், பொதுச்செயலாளரும் தான். இதில்  நாவுக்கரசரின் ஆதரவு மாவட்ட தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தங்களுக்கும், இந்த போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டனர்.  தலைமை யார்? தொண்டன் யார்? என தெரியாமல் திக்குமுக்காடி வருகிறது நெல்லை காங்கிரஸ்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘தாலிக்கு தங்கம் வாங்கும் ஏழைகளிடம் லஞ்சம் வாங்குறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண  உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2018-19ம் ஆண்டிற்கான பயனாளிகள் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலை தயாரித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் அழைத்து ரூ.500 முதல் ரூ.2,000 வரை வசூல்  வேட்டை நடத்தி வந்தாங்கனு நான் சொன்னேன் இல்லையா...

இதையடுத்து உஷாரான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் அதிரடியாக  நுழைந்து தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை வழங்க பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக  மாவட்ட சமூக நல அலுவலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாலிக்கு தங்கம் திட்டத்தில் லஞ்சம்  வாங்குகிறார்களா என்று தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதற்கேற்றார் போல் வாங்கி பழக்கப்பட்ட கை சும்மா இருக்குமா என்பதை போல குடியாத்தம் பிடிஓ  அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் பெண் அதிகாரி ஒருவர் ரூ.5,000  வரை லஞ்சம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. இதனை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குடியாத்தம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடத்திய அதிரடி  சோதனையில் கணக்கில் வராத ரூ.34 ஆயிரம் சிக்கியது. தாலிக்கு தங்கம் திட்டத்தில் மாவட்ட அலுவலர் சிக்கிய பின்னர், ஒருங்கிணைப்பாளர் சிக்கியிருப்பதால்,  தாலிக்கு தங்கம் திட்டத்தில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

 • StalinElectionCampaign19

  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

 • NorwayUnderRestaurant

  ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்