SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘அண்டர்டாக்ஸ்’ என்பதே எங்களுக்கு சாதகம்தான்...: கேஸ்பரோவிச் கணிப்பு

2019-02-11@ 00:12:14

ஆஸ்திரேலிய அணி முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் மைக்கேல் கேஸ்பரோவிச், சமீபத்தில் சென்னை வந்து தமிழக யு-19 மற்றும் யு-21 வீராங்கனைகளுக்கு  பந்துவீச்சு நுணுக்கங்கள் மற்றும் உடல்தகுதி பராமரிப்பு பற்றிய ஆலோசனைகளை வழங்கினார். ஆஸ்திரேலிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து  இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு… கிரிக்கெட் வர்ணனையாளர், பந்துவீச்சு பயிற்சியாளர், விளையாட்டு மேலாண்மை மற்றும் வர்த்தக  ஆலோசகர் என்று பிஸியாக இருக்கிறார் கேஸ்பரோவிச்.சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் வீராங்கனைகளுக்கு தனது அனுபவ ஆலோசனைகளை வழங்கி  உற்சாகப்படுத்தினார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின்போது, ஆஸி. வெளியுறவு மற்றும் வர்த்தகத்  துறை ஸ்பான்சர் செய்திருந்த சர்வதேச செய்தியாளர் குழு சார்பில் அவரை சந்தித்து உரையாடியதை நினைவுகூர்ந்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கை குலுக்கி  வரவேற்றவர், தினகரன் செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இருந்து…விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளைக் குவித்தது பாராட்டத்தக்கது. இந்திய பந்துவீச்சு  தற்போது மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. வேகப் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக, ஜஸ்பிரித் பூம்ராவின் பந்துவீச்சு மிகவும்  தனித்துவமானது. இந்திய அணி நிர்வாகம் முழு சுதந்திரம் அளித்து ஊக்குவிப்பதும் அவரது அமர்க்களமான பந்துவீச்சுக்கு உறுதுணையாக இருக்கிறது.இந்திய பவுலர்கள் தற்போது உடல்தகுதியிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்து சுழற்சி முறையில்  களமிறக்குவதும் நல்ல பலனை தந்துள்ளது. எம்ஆர்எப் வேகப் பந்துவீச்சு பயிற்சி மையத்தில் கிளென் மெக்ராத் தரும் அனுபவ ஆலோசனைகளுக்கும் இதில்  முக்கிய பங்கு இருக்கிறது என நினைக்கிறேன்.

கோஹ்லியின் பேட்டிங் பாணியில் எந்தவிதமான குறைபாடும் இல்லை. அவர் தனது விக்கெட்டுக்கு மிகுந்த மதிப்பளிக்கிறார். தேவையில்லாமல் அடித்து  விளையாடி ஆட்டமிழப்பதை அவர் தவிர்த்து விடுகிறார். மேலும், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பெரிய ஸ்கோர் எடுப்பதே அவரது  வெற்றியின் ரகசியம்.  தற்போதுள்ள நிலையில், ஐசிசி உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி என்றால் அது இந்தியா தான் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்ததாக தென்  ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளும் திறமை வாய்ந்தவையாக உள்ளன. அதே சமயம், ஆஸ்திரேலியா வாய்ப்பு இல்லாத ‘அண்டர்டாக்ஸ்’ ஆகக் களமிறங்குவது  எங்களுக்கு சாதகமாக இருக்கும். வீரர்கள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இது உதவும். ஸ்மித், வார்னர் இருவரும் சிறந்த, அனுபவம் வாய்ந்த வீரர்கள். மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்குவதற்கு அவர்கள் மிக விரைவில் தயாராகி  விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தங்களின் தவறுகளில் இருந்து அவர்கள் நிச்சயம் பாடம் கற்றிருப்பார்கள் என்பதால், முன்பை விடவும் அதிக  அர்ப்பணிப்புடன் பங்களிப்பார்கள் என நம்புகிறேன்.இங்கிலாந்து ஆடுகளங்களில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேஸல்வுட் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும். அவர்களுடன் இளம் வீரர்களும் இணைந்து கலக்கும்போது ஆஸி.  அணி நிச்சயம் வெற்றிப் பாதைக்கு திரும்பும்.

உலக கோப்பைக்கு முன்பாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது எங்கள் வீரர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. இந்த தொடரில்  அசத்தினால் தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பது இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருப்பது ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் நம்பிக்கை அளித்துள்ளது. இதே முனைப்புடன் ஆஷஸ் தொடரில் நிச்சயம்  சிறப்பாக விளையாடுவார்கள்.  உலக கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் டி20 தொடர் நடப்பதால் எந்த பிரச்னையும் இல்லை. அனைவரும் தொழில்முறை வீரர்கள். வெவ்வேறு வகை கிரிக்கெட்  போட்டிகளுக்கு தயாராவது, உடல்தகுதியை பராமரிப்பது, பணிச்சுமையை சமாளிப்பது போன்றவை அவர்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்காது. சென்னை எனக்கு மிகப் பிடித்தமான நகரம். டிஎன்சிஏ சார்பில் தமிழக வீராங்கனைகளுக்கு எனது ஆலோசனைகளை வழங்க வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி  அளிக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்