SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்சுவை கதம்பம்!

2019-02-04@ 11:57:12

குடும்பக் கட்டுப்பாடு!

ஒரு பட்டிமன்றம். பட்டிமன்றத்தின் தலைப்பு, ‘குடும்பக் கட்டுப்பாடு’. நடுவராக இருந்தவர் ம.பொ.சிவஞானம். குடும்பக் கட்டுப்பாடு தேவை என்ற பக்கத்தில் கவிஞர் கண்ணதாசன் பேச இருந்தார்.கண்ணதாசனுக்கு முன்பாக அவரது சீடர் அரு.நாகப்பன் குருவையே எதிர்த்துப் பேசினார்.“கவியரசரை இந்த மேடையிலேயே ஏற அனுமதித்திருக்கக் கூடாது. குடும்பக் கட்டுப்பாடு தேவை என்று அவர் எப்படி பேசமுடியும்?அவருக்கு பதினான்கு குழந்தைகள் அல்லவா? முதலில் அவரை மேடையை விட்டு இறக்குங்கள்”பார்வையாளர்களிடையே பயங்கர சிரிப்பொலி.அடுத்து கண்ணதாசன் மைக்கை பிடித்தார்.“பதினான்கு குழந்தைகள் பெற்ற எனக்குதான் குடும்பக் கட்டுப்பாடின் அருமை தெரியும்” என்று ஆரம்பித்தார்.அரங்கில் கைத்தட்டல் சப்தம் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆனது.

ஃபேஸ்புக் : சில தகவல்கள்!


*ஃபேஸ்புக்கின் நிறுவனர் ஸூகர்பெர்க்குக்கு colour blind பிரச்சினை இருக்கிறது. சில வண்ணங்களை அவரது கண்களுக்கு அடையாளம் தெரியாது. அவருக்கு நன்கு பழக்கப்பட்ட நிறம் நீலம். எனவேதான் ஃபேஸ்புக் நீலமாக இருக்கிறது.

* 2006ஆம் ஆண்டு கிறிஸ் புட்னாம் என்பவர் ஃபேஸ்புக்கை ஹாக்கிங் செய்தார். ஆயிரக்கணக்கில் ஃபேக் புரொஃபைல்களை உருவாக்கி தொல்லை கொடுத்தார். அவர் மீது ஃபேஸ்புக் நிர்வாகம் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக லட்சங்களை சம்பளமாக கொடுத்து வேலைக்கு அமர்த்திக் கொண்டது.

* ஃபேஸ்புக்கில் எவ்வளவோ ஆபாசப் படங்கள் பதிவேற்றப் படுகின்றன. ‘ரிப்போர்ட்’ செய்தால் கூட பல நேரங்களில் கண்டுகொள்ளப் படுவதில்லை. ஆனால் ஒரு தாய், குழந்தைக்கு பாலூட்டும் படத்தை பதிவேற்றினால் மட்டும், ஒரே ஒரு ரிப்போர்ட் வந்தால்கூட உடனடியாக நீக்கிவிடுகிறார்கள்.

* 2011ஆம் ஆண்டு ஐஸ்லாந்து தன்னுடைய சட்டத்தை திருத்தி எழுத ஃபேஸ்புக்கில் பரிந்துரைகளை வரவேற்றது. இதில் பரிந்துரைக்கப்பட்ட சில சட்டங்களை ஏற்றும் கொண்டது.

* ஃபேஸ்புக் நிறுவனத்தில் ஸ்டீவ் சென் என்பவர் சில வாரங்கள் பணிபுரிந்தார். இங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து அவர் ஒரு புதிய இணையத்தளம் தொடங்கி உலகப்புகழ் பெற்றார். அந்த தளம்தான் YouTube

* ஃபேஸ்புக்கில் போட்டோக்களை பகிரும் வசதி இருப்பதை அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் விரும்பவில்லை. சீன் பார்க்கர் என்பவரின் வற்புறுத்தலின் பேரிலேயே வேண்டா வெறுப்பாக அந்த வசதியை கொண்டுவந்தார். இன்று போட்டோ ஷேரிங்குக்காகவே ஃபேஸ்புக்கில் கதியாக கிடப்பவர்கள் பல லட்சம் பேர்.

*இணையத்தளங்களின் மாஃபியாவான கூகுளால் ஃபேஸ்புக்கை மட்டும் வாங்கவே முடியாது. ஏனெனில், கூகுளின் பரம எதிரியான மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஃபேஸ்புக்கில் முதலீடு செய்திருக்கிறது.

*உலகமெங்கும் நடக்கும் விவாகரத்துகளில் மூன்றாவது பெரிய காரணம் ஃபேஸ்புக்காம். கல்யாணம் ஆனவர்கள், ஃபேஸ்புக்கில் கொஞ்சம் கவனமாக நடந்துக்கோங்க.

அழகா தெரியணுமா?


* உயரமா, ஒல்லியா இருந்தீங்கன்னா குறுக்கே கோடு போட்ட டிரெஸ் போட்டுக்கங்க. பளிச்சுன்னு பெருசா டிசைன் பண்ணியிருக்குற டிரெஸ்னா கூட ஓக்கேதான்.

*குண்டாவோ, கொஞ்சம் குள்ளமாவோ இருந்தீங்கன்னா முடிஞ்சவரை பிளெய்ன் காஸ்ட்யூம் யூஸ் பண்ணுங்க. டிசைன்ஸ் இருந்தாலும் மத்தவங்க கண்ணை உறுத்தாதமாதிரி லைட்டா இருந்தா பரவாயில்லை.

*நீங்க கொஞ்சம் கலரா இருந்தீங்கன்னா லைட் கலர் டிரெஸ்ஸில் டக்கரா தெரிவீங்க.

*கொஞ்சம் கலர் மட்டுன்னு வெச்சுக்கங்களேன். டார்க்கும் இல்லாம, லைட்டும் இல்லாம மீடியமான கலர்லே டிரெஸ் பண்ணுங்க. கருப்பா இருக்குறவங்க ப்ளூ கலர்லே டிரெஸ் பண்ணா டாப்பா தெரிவாங்க.

க்ளீனிங் டிப்ஸ்!

*அடிக்கடி வாஷ்பேஷன் அடைத்துக் கொண்டு இம்சைப் படுத்துகிறதா? ஒரு கப் வினிகர், ஒரு கைப்பிடி சோடா பைகார்பனேட் எடுத்து கலந்துக்கங்க. அப்படியே வாஷ்பேஷனில் கொட்டி, அதுக்கு மேலே ஃபோர்ஸா தண்ணியையும் கொட்டுங்க. அடைப்பு நீங்கிடும்.

*வாஷிங்மெஷினில் தோய்த்தால் சட்டை காலர்களில் அழுக்கு சரியாக போவதில்லை என்பது இல்லத்தரசிகளின் வருத்தம். ஓர் ஈஸியான வழியிருக்கு. நாளைக்கு காலையில்தான் துவைக்கப் போறீங்கன்னா, முன்னாடி நாள் இரவு சட்டையில் அழுக்கு இருக்குற இடத்துலே டால்கம் பவுடரை தடவிடுங்க. காலையிலே துவைச்சுப் பாருங்க. ஆச்சரியப்படுவீங்க.

*பாத்திரங்களின் உட்புறம் கறை பிடிச்சிடுதா? முதல் நாள் இரவு அதில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் கொஞ்சம் ப்ளீச்சிங் பவுடர் போட்டுவிடுங்க. மறுநாள் காலை சோப்பு போட்டு கழுவினால் பளிச்சிடும்.

பல்வலியா?

பாடாய்படுத்தும் வலிகளில் தலைவலியும், பல்வலியும்தான் உச்சம். அதுவும் இரவு நேரங்களில் பல் வலிக்க ஆரம்பித்தால் தூக்கம் தொலைவது நிச்சயம்.காலையில் போய் டாக்டரை பார்த்துக் கொள்ளலாம். அதுவரை அட்ஜஸ்ட் செய்ய ரெண்டு பாட்டி வைத்தியம் இருக்கு. தெரிஞ்சுக்கங்க. தப்பில்லை.

*எந்த பல்லில் வலி இருக்கோ அந்த பகுதியில் கொஞ்சம் சர்க்கரையை அள்ளிப்போட்டு அப்படியே வாயை குதப்பிக்கிட்டு இருங்க. ஒரு 20, 25 மிளகை நன்றாக பொடிசெய்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்துக்கங்க. இந்த தண்ணீரை நன்றாக காய்ச்ச வேண்டும். காய்ச்சி எடுத்தவுடன் வலி இருக்கும் பகுதியின் வெளிப்புறத்தில் இந்த தண்ணீரை வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலிகுறையும்.

*ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி, வலிக்கிற பல்லுக்கு அருகில் வைத்து அப்படியே கொஞ்சநேரம் வாயை மூடிக் கொண்டிருந்தாலும் பல்வலி குறையும்

வழுக்கைப் பிரச்சினையா?

*உங்கள் தாயுடைய தந்தைக்கு வழுக்கை இருந்திருந்தால், உங்களுக்கும் கட்டாயம் இருக்கும் என்பார்கள். ஆனால், ஆய்வாளர்கள் சொல்வது என்னவென்றால் தந்தைக்கு வழுக்கை இருந்தால் மகனுக்கும் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

*வழுக்கைத் தலையர்களுக்கு அறிவு அதிகம் என்பது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த கிளப்பிவிடப்பட்ட புரளி. வழுக்கைக்கும், அறிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

*அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு முடிகொட்டும் என்பதும் மூடநம்பிக்கை.
*வழுக்கைத் தலையர்கள் ஜொள்ளர்கள் என்று சொல்லப்படுவது அநியாயமான அவதூறு.
*மொட்டை அடித்தால் முடிவளரும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
*தலைகீழாக தினமும் நின்றால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடிவளரும் என சொல்லப்படுவது அடிப்படையற்ற நம்பிக்கை.
*ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டும் என்பதற்கும் ஆதாரமாக எந்த புள்ளிவிபரமும் இல்லை.
*முடி கொட்டும் பிரச்சினைக்கு Finastride (tablet), Zincovit (tablet), MinTop அல்லது Tugain - 5% minoxidil (தைலம் மாதிரி அப்படியே தலையில் தடவலாம்),  Kz Lotion - Ketoconazole Lotion 2% (ஷாம்பூ) போன்ற மருந்துகள் ஓரளவுக்கு நிவாரணம் தரலாம். ஆனால் முழுக்க வேலை செய்யும் என்று உத்தரவாதம் தருவதற்கில்லை.
* நிரந்தரத் தீர்வு என்ன? இயற்கை நமக்கு எதை விதித்திருக்கிறதோ, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதுதான்.

தொகுப்பு : யுவகிருஷ்ணா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்