SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசத்தை ஆள்பவர்களால் தேசத்துக்கு ஆபத்து - விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

2019-01-24@ 01:27:45

திருச்சி: ‘‘தேசத்தை ஆள்பவர்களால்தான் தேசத்துக்கு ஆபத்து’’ என்று திருச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சனாதன பங்கரவாதத்தை எதிர்த்து, ‘‘தேசம் காப்போம் மாநாடு’’ திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.  பின்னர், மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தேசம் காப்போம் என்ற தலைப்பில் சனாதானத்தை வேரறுப்போம், ஜனநாயகத்தை வென்றெடுப்போம் என்ற முழகத்தை திருமாவளவன் முன்னிறுத்தி உள்ளார். நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தல் சனாதனத்துக்கும், ஜனநாயகத்துக்குமான தேர்தல். தேசம் காப்போம் என்ற முழக்கம் ஏன் எழ வேண்டும்? பாகிஸ்தான், சீனாவால் இந்த தேசத்துக்கு ஆபத்து வரவில்லை. தேசத்தை ஆள்பவர்களால் தேசத்துக்கு ஆபத்து வந்துள்ளது. அதனால் தான் தேசம் காப்போம் என்ற தலைப்பை திருமாவளவன் தேர்ந்தெடுத்துள்ளார்.

நான்கு நாட்களுக்கு முன் மம்தா பானர்ஜி நடத்திய கொல்கத்தா மாநாட்டில் பங்கேற்றேன். பல மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 22 கட்சிகளை சார்ந்த தலைவர்கள் ஏன் இந்தியாவே திரண்டிருந்தது என்று சொன்னால் அது மிகையாகது. இந்த கூட்டத்தில் முழக்கமிட்டது நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை முழக்கம் தான் முன் வைக்கப்பட்டது. பாஜவை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. இந்த நாட்டில் மிகவும் சீப்பான ரப்பர் ஸ்டாம்ப் தேச துரோகி என்ற பட்டம் தான். பாஜவை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகி என்றால் அந்த பட்டத்தை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்.

சமூகநீதி, மக்கள் நன்மைக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்காகவும் அரசாங்கம் இருக்க வேண்டும் என அம்பேத்கர் கூறினார். நீதிக்கும் மோடிக்கு சம்பந்தம் இல்லை என்பதை சுட்டிக்காட்ட அவர் கொண்டு வந்தது தான் பொருளாதார இட ஒதுக்கீடு. சமூக ரீதியான இட ஒதுக்கீட்டுக்குள் கொண்டு வந்து, சமூக நீதியின் தத்துவத்தை குழிதோண்டி புதைப்பதுதான் மோடியின் நீதி. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வருமானம் என்றால், மாதம் 60 ஆயிரம் சம்பாதிப்பவர் ஏழையா? இப்படி சொல்வதன் மூலம் ஏழைகளுக்கு துரோகம் செய்துள்ளார். ஏழைத்தாய் மகன் செய்யும் வேலையா? இதுதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் செய்யும் காரியமா? அம்பேத்காருக்கு இதைவிட அவமானம் தேடித்தர முடியுமா?மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்காட்சிக்கு ஒரு வேலை. நம்மை பொறுத்தவரை 2 வேலை, எடப்பாடியையும் சேர்த்து வீழ்த்தும் வேலை. ஏற்கனவே தமிழகத்தை 100 சதவீதம் விற்றுவிட்டார். அவர்களை வீழ்த்த தயாராவோம், தயாராவோம். வெற்றி பெற அத்தாட்சியாக இந்த மாநாடு அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது:

இந்த மாநாட்டை தடை செய்ய சனாதன சக்திகள் காவல்துறையில் மனு கொடுத்தனர். தேசமே திரும்பி பார்க்கும் வகையில் தேசிய தலைவர்கள், தமிழக தலைவர்கள் பல மணி நேரம் அமர்ந்து சிறப்பித்தது தான் நமது வெற்றி. இந்த மாநாடு திமுக தலைமையிலான கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார மாநாடு என்று கூறுவதில் பெருமிதம், மகிழ்ச்சியடைகிறேன். இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனையாளர்கள், இந்த மண்ணில் சனாதனம் வேரறுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையாளர்களை சனாதனம் சுட்டுக்கொலை செய்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் சனாதனம் வால் ஆட்ட முடியவில்லை. மோடியின் வரவால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அமைந்த அரசு, சனாதனிகள் கொட்டமடிக்கின்றனர். இஸ்லாமியர், தலித், பழங்குடியினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மீண்டும் தப்பித்தவறி பாஜ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் தேசத்தை காக்க முடியாது. சகோதரத்துவத்தை மறுப்பது சனாதனம். பெண்களை பொது இடங்களுக்கு போகக்கூடாது என தடுக்கிறது.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரால் தமிழகம் பக்குவப்பட்ட மண். சனாதன சக்திகள் வேரூன்ற முடியாது. சனாதனம், ஜனநாயகமா என்ற கோட்பாடுக்கு இடையே போராட்டம் நடக்கிறது. பாகிஸ்தான் மண்ணை தான் பிரித்து சென்றது. சனாதனம் வர்ணாஸ்ரமம், ஜாதியம் முன்னிறுத்தி ஒவ்வொரு மனிதனையும் துண்டாடிவிடும். அதனால் தான் ஜாதி ரீதியாக ஆண்ட பரம்பரை என்று பேச வைத்து நம்மை பிரிக்கப்பார்க்கிறது. ஜாதி பெருமை பேசினால் சுருங்கி விடுவோம். இந்தியா முழுவதும் ஓபிசி என்றால் எவ்வளவு வலிமை என்பதை நாம் உணர வேண்டும். மக்களை ஒருங்கிணையவிடாமல் சிதறடிப்பது தான் சனாதனத்தின் சூது, சூழ்ச்சி.
மேடையில் அமர்ந்திருக்க அனைத்து கட்சியும் ஒன்றிணைந்து 40க்கு 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அதன்மூலம் மத்தியில் சனாதனம் வரவிடாமல் தடுப்போம் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

 • yamunariver20

  கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்