SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெருங்குடி குப்பை கிடங்கில் வீசப்பட்ட உடல் உறுப்புகள் ... காணாமல் போன பெண்கள் பட்டியல் மூலம் விசாரணை

2019-01-24@ 00:55:31

சென்னை: பெருங்குடி குப்பை கிடங்கில் வீசப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் மீட்கப்பட்ட நிலையில், 3 கோணத்தில் காணாமல் போன பெண்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலை மற்றும் உடலை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக தரம் பிரிக்கும் குப்பை கழிவுகள் அனைத்தும் பெருங்குடி குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், பெருங்குடி குப்பை கிடங்கில் வழக்கமாக சில பெண்கள் மற்றும் இளைஞர்கள் பிளாஸ்டிக், பேப்பர் உள்ளிட்ட பொருட்களை சேகரிப்பது வழக்கம். அதேபோல, கடந்த திங்கட்கிழமை மாலை, அங்கு சில பெண்கள் குப்பையை கிளறிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பை கிடந்தது. அதை பிரித்துப் பார்த்தபோது, இளம்பெண் ஒருவரின் 2 கால்கள், ஒரு கை இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, மவுன்ட் துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் பள்ளிக்கரணை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், இளம்பெண்ணின் உடல் பாகங்கள் கிடந்த குப்பை பகுதி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள குப்பை சேகரிக்கும் குடோனில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அங்கு சென்று விசாரித்தபோது, மாநகராட்சியின் 10வது மண்டலத்தில் உள்ள கோடம்பாக்கம், அசோக் நகர், நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு உள்ளிட்ட இடங்களில் இருந்து லாரிகளில் சேகரிக்கும் குப்பை, வள்ளுவர்கோட்டம் குப்பை கிடங்கு மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தரம் பிரித்து பெருங்குடிக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, முழு விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி இணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள், மாநகராட்சியின் 10வது மண்டலத்தில் உள்ள பகுதிகளில் இளம்பெண்கள் யாராவது காணாமல் போயுள்ளனரா அல்லது காணாமல் போனது குறித்து காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளதா என்பதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை பெண் மாயமானது குறித்து காவல் நிலையங்களுக்கு புகார்கள் வரவில்லை. அதேநேரம், மீட்கப்பட்ட பெண்ணின் கை, கால்களை அறிவியல் ரீதியான சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். மேலும், தலை மற்றும் உடல் கிடைக்காததால் போலீசார் நான்கு நாட்களாக திணறி வருகின்றனர்.

இதுகுறித்து, தனிப்படை போலீசார் கூறியதாவது:
கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 25 முதல் 33 வயது வரை இருக்க வாய்ப்புள்ளது. அவரது வலது கையில் 2 இடங்களில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் படம் பச்சை குத்தப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சென்னையில் பச்சை குத்தும் இடங்களுக்கும், ஐடி நிறுவனங்கள், தனியார் மகளிர் தங்கும் விடுதிகள், பிரபல ஓட்டல்களில் பணியாற்றும் பெண்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. தனித்தனி பாகங்களாக வெட்டி கொலை செய்யப்பட்ட இளம்பெண், வசதியான வீட்டு பெண் போல் தெரிகிறது.

இதனால், சொத்துக்காக கடத்தி வந்து கொலை செய்யப்பட்டாரா அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உடல் பாகம் வெட்டி எடுக்கப்பட்ட  விதத்தை வைத்து பார்த்தால், கொலை செய்வதில் கைதேர்ந்த நபரால்தான் இப்படி கொடூரமாக துண்டு துண்டாக வெட்டி இருக்க முடியும். ஏன் என்றால், பெண்ணை கொலை செய்த விதம் புதிதாக உள்ளது. ஆத்திரத்தில் கொலை செய்யும் நபர் உடலில் வெட்டும் விதமும், அதே திறமையாக அனைத்து நுணுக்கங்களும் அறிந்த நபர் கொலை செய்தால், உடலில் எந்த இடத்தில் வெட்டினால் எளிமையாக உடல் பாகங்களை தனியாக பிரித்து எடுக்க முடியும் என்பதில் வித்தியாசம் இருக்கிறது.எனவே, கொலையாளி மாபியா கும்பலை சேர்ந்தவராகவோ அல்லது மருத்துவ துறையை சேர்ந்தவராகவோ இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். மீட்கப்பட்ட கை மற்றும் கால்களில் உள்ள கைரேகைகள் மற்றும் வெட்டி எடுக்கப்பட்ட விதம் குறித்தும், அறிவியல் கூடங்களுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. தலை மற்றும் உடல் வீசப்பட்ட இடங்களை நாங்கள் தொடர்ந்து தேடி வருகிறோம்.
முதற்கட்டமாக கடந்த 10 நாட்களில் தமிழக அளவில் காணாமல் போன பெண்கள் பட்டியல், அண்டை மாநிலத்தில் காணாமல் போன பெண்கள் பட்டியல், தேசிய குற்ற ஆவணத்தால் பராமரிக்கப்பட்டு வரும் காணாமல் போன பெண்கள் பற்றிய விவரங்கள் அடிப்படையில் 3 கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அடுத்த ஒருசில நாட்களில் கொலையான பெண் குறித்து தகவலை கண்டு பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்பிறகு தான், குற்றவாளி அடையாளம் காணப்படுவார். தற்போது, மாநகராட்சியின் 10வது மண்டலத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் குப்பையை வீசி செல்லும் நபர்கள் குறித்து கணக்கெடுத்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

 • chinaboat

  உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்